வங்கிக்கடன்களில் சலுகை அறிவித்துவிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 27, 2020

வங்கிக்கடன்களில் சலுகை அறிவித்துவிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதா

வங்கிக்கடன்களில் சலுகை அறிவித்துவிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதா?


மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, ஆக. 27- வங்கிக் கடன்களுக்கான 6 மாத தவணைகளுக்கான (இ.எம்,அய்.) சலுகைகளை அறிவித்து விட்டு அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என்று மத் திய அரசை உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.


கடன் தவணை நிறுத்திவைக்கப்பட்ட காலத்துக்கு வங்கிகள் வட்டிமீது வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, வட்டி மீது வட்டி வசூலிப்பதை தவிர்ப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலுக்கு வந்ததால், பொது மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை மார்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக் கப்பட்டது. இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக் கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத் துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூ லிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித் தன.


கடனுக்கான மாத தவணையில் அசலுடன் வட்டியையும் சேர்த்துதான் வங்கிகள் வசூலிக்கின்றன. இந்நிலையில், நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத கடன் தவணைக்குரிய வட்டிக்கும் சேர்த்து பின்னர் வட்டி வசூலித்தால் வீட்டுக் கடன் போன்ற நீண்டகால கடன் பெற்ற வர்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமை யாது. இதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன் றத்தில் ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னி லையில் நேற்று (ஆக.26) மீண்டும் விசார ணைக்கு வந்தது. இப்போது, நீதிபதிகள் கூறியதாவது:


இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் நடவ டிக்கை எடுக்க வழி வகை உள்ளது. ரிசர்வ் வங்கியை (ஆர்பிஅய்.) முன்னி றுத்திவிட்டு மத்திய அரசு தனது பொறுப்பில் இருந்து விலகக் கூடாது. ஆர்பிஅய்-யின் பின்னால் மத்திய அரசு ஒளியக் கூடாது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.


மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிடுகையில், ‘ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் கடன் தவணை நிறுத்திவைப்பு சலுகை முடிவ டைகிறது. அதனை நீட்டிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதத்தை முன்வைத் தார்.


முன்னதாக, இந்த கடந்த ஜூன் மாதம் இந்த விசாரணைக்கு வந்தபோது கடன் தவணை நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டிமீது வட்டி வசூலிப்பதில் நியாயமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத் தக்கது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இது தொடர்பாக ஆர்பிஅய்-யுடன் ஆலோசிக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.


No comments:

Post a Comment