சத்துணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்க அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

சத்துணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்க அரசாணை வெளியீடு


சென்னை,செப்.5, தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்து வந்த 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ,மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட வில்லை. இதற்கிடையே, பள்ளிகள் திறக்கும் வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அரசி, பருப்பு ஆகிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சத்துணவில் மாணவ, மாணவிகளுக்கு முட்டைவழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசா ணையில், ’’தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் உலர் உணவு பொருட்களுடன் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு மாணவருக்கு 10 முட்டை வழங்க அனுமதிவழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையினால் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும்போதே உலர்உணவு பொருட்கள் மற்றும் முட்டைகளையும் வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.


நவம்பர் 29-க்குள் பீகார் சட்டப் பேரவைக்கு தேர்தல்:  


இடைத் தேர்தல் நடத்த ஆணையம் முடிவு


புதுடில்லி,செப்.5 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 64 பேரவைத் தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதிக்கு வரும்நவ.29ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


பீகார் சட்டப் பேரவைத் தேர்தல், பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 64 பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து வரும் நவ.29ஆம் தேதிக்குள் அனைத்து  இடைத்தேர்தல்கள், பீகார் சட்டப்பேரவைத் தேர் தலை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.


அவர் மேலும் கூறும்போது, “பீகார் பேரவைத் தேர்த லுக்காக அங்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் அனுப்பப்படும். கரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சினையை ஒட்டி அங்கு கூடுதல் இயந்திரங்கள் அனுப்பப்படவுள்ளன. பீகாரில் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடு களும் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றன. அங்கு பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த ஆணையம் உறுதி பூண்டுள்ளது. அங்கு அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களும் கடைப் பிடிக்கப்படும்” என்றார்.


No comments:

Post a Comment