திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமைச் சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமைச் சகோதரர்
டி.ஆர்.பாலு அவர்களுக்கும் தாய்க்கழகமாகிய திராவிடர் கழகம் தனது உளப்பூர்வ மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இருவரும் இரு பொறுப்புகளுக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது தி.மு.க.வின் கட்டுக் கோப்பையும், தலைமையின் சீரிய செயல்திறனையும் நாட்டுக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
அதுபோலவே, அருமைச் சகோதரர்கள் க.பொன்முடி, ஆ.இராசா இருவரும் துணைப் பொதுச்செயலாளர்கள் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருப்பதும், மிகவும் வரவேற்கத்தக்க ஏற்பாடாகும். அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கெனவே அய்.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ளனர்.
‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்'' என தன்னை வர்ணித்துக் கொண்ட மானமிகு கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்ற மூத்த தலைவர்கள் இல்லையே என்ற ஏக்கத்தினைப் போக்கி, எல்லா வகையிலும் ஆற்றல்மிகு தலைவராக உள்ள அருமைச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அருமைத் தளபதிகளாக இவர்கள் களங்களில் நின்று, வென்று வரலாறு படைக்க வேண்டுமென்றும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்பதில், மூன்றாம் அம்சமே மிகமுக்கியம் என்பதை எந்த நிலையிலும் மறவாது பணியாற்றி சாதனை, சரித்திரத்தினைப் படைப்பார்கள் என்பது மிக உறுதி!
புது அத்தியாயம் பொன்னேடாக மலரட்டும்! வலிவும், பொலிவும் கூடட்டும்!
கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
9.9.2020
No comments:
Post a Comment