முதுபெரும் சுயமரியாதை வீரர் மா.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நமது வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 21, 2020

முதுபெரும் சுயமரியாதை வீரர் மா.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!


வேதாரண்யத்தில் வாழ்ந்த மானமிகு சுயமரியாதை வீரர் தோழர் மா.மீனாட்சிசுந்தரம் (வயது 84) அவர்கள் இன்று (21.9.2020) விடியற்காலை திருச்சி மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம்.


சீரிய பகுத்தறிவாளராக, பெரியார் பெருந்தொண்டராக, திராவிடர் இயக்கத்தின் மூத்த செயல்வீரராக, தி.மு. கழகத்தின் பாசறை படைக்கலனாகத் திகழ்ந்த சகோதரர் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத்திடமும், நம்மிடமும் மிகுந்த கொள்கை உறவும், அன்பும் கொண்ட பகுத்தறிவுப் பண்பாளர்.


மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், கீழத்தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் மேனாள் மாவட்ட செயலாளர் பொறுப்பில் திறம்படப் பணியாற்றிவர்; தற்போது நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் ஆவார்.


எப்போதும் கருப்புத் துண்டுடனும், மாறாத கொள்கை லட்சிய உணர்வுடனும் அப்பகுதியில் திகழ்ந்த ஒரு கொள்கை மாவீரர்!


அண்மையில் தி.மு.க. நடத்திய (15.9.2020) முப்பெரும் விழாவில் பெரியார் விருதை தி.மு.க. தலைவரிடமிருந்து பெற்ற பெம்மான்.


சிறிது காலமாகவே உடல்நலம் குன்றிய நிலையில், அவர் மீண்டும்  தேறி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையை இயற்கையின் கோணல் புத்தி பறித்துவிட்டது.


அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கும், தி.மு. கழகத்திற்கும் மட்டும் இழப்பு அல்ல; திராவிடர் கழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். ‘விடுதலை'யின் தொடர் வாசகர்.


வேதாரண்யம் மய்யப் பகுதியில் தந்தை பெரியார் சிலை அமைத்து, அதனை தொடர்ந்து நிர்வகிக்க திராவிடர் கழகப் பொறுப்பாளர்களையும் இணைத்து அறக்கட்டளை அமைத்து, வங்கியில் ரூ.3 லட்சம் வைப்புத் தொகையாக வைத்து பாதுகாப்பை உருவாக்கியவர்.


அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர்


மீ.முத்துலெட்சுமி அம்மையாருக்கும், பிள்ளைகள் தி.மு.க. நகர செயலாளர் மீ.புகழேந்தி, நாகை மாவட்ட தி.மு.க. வழக்குரைஞர் பிரிவு மீ.அன்பரசன், சகோதரர்கள், குடும்பத்தினர், திராவிடர் இயக்கக் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவருக்கு நமது வீரவணக்கம்! வீர வணக்கம்!!


 


 


கி.வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


21.9.2020


No comments:

Post a Comment