எது தேவை?
300 பேருக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவோ, தொழிற்சாலைகளை மூடவோ அரசு அனுமதி தேவையில்லை.
'கார்ப்பரேட்டுகளின்' அரசு என்று ஆன பிறகு, ஒவ்வொன்றையும் குறை சொல்லுவதில் அர்த்தம் இல்லை. நாட்டுக்குத் தேவை கார்ப்பரேட் அரசாங்கமா - மக்கள் அரசாங்கமா என்று மக்கள் முடிவு செய்வதுதான் முக்கியம்!
முகத்தில் வீசலாமா?
மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை எதிர்த்து அவைத் தலைவரை நோக்கி நாடாளுமன்ற விதிமுறைப் புத்தகத்தை வீசினர்.
இது தவறான அணுகுமுறைதான். இந்த மசோதாவுக்குத் தண்டனையாக இந்த ஆட்சியின்மீது நாட்டு மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வண்ணம் - வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தை வீசவேண்டும்; அதுதான் புத்திசாலித்தனம்!
‘‘விவசாயம் பாவத் தொழில்'': மனுதர்மம்
புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து அரியானா விவசாயிகள் மறியல்.
அரியானா, பஞ்சாப் மட்டுமல்ல, விவசாய நாடான இந்தியா முழுவதும் இது வெடிக்கத்தான் போகிறது. விவசாயம் பாவத் தொழில் என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த அடிப்படையில்தான் மத்திய ஆர்.எஸ்.எஸ். அரசு செயல்படுவதாகப் பொருள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - முதலமைச்சர் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார்.
ஆனால், விவசாயத்தையே கதிர் அரிவாளைக் கொண்டு அறுத்துத் தள்ளுகிறாரே!
வாலியை ராமன் கொல்லவில்லையா?
வேளாண் துறை தொடர்பான மசோதாக்களை வாக்கெடுப்பின்மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் எல்லாம் தந்திரம்தான். வாக்கெடுப்பு நடத்தினால் மசோதா தோற்கக்கூடும் என்பதால், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. மக்கள் குரலுக்கு எதிரான இந்தக் குரல் - மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து வாலியைக் கொன்ற இராமனின் கோழைத்தனத்தை
ஒத்ததே!
திணிக்கப்படாது -
ஆம் என்க!!
''எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது!'' - குடியரசுத் தலைவர் உரை.
ஆமாம்! நேரடியாகத் திணிக்கமாட்டார்கள்; மூன்று மொழி என்று சொல்லி மறைமுகமாக வற்புறுத்துவார்கள்.
ஆம்! இந்து மதக் கொள்கை!
''தோலின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது.'' - மத்திய இணை அமைச்சர் அஸ்வின் சவுபே.
தோலின் அடிப்படையில் கூடாது சரிதான் - பிறப்பின் அடிப்படையில் மட்டும் பாகுபாடு காட்டலாம் - காரணம், இது இந்து மதத்தின் கொள்கை.
No comments:
Post a Comment