செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

செய்தியும், சிந்தனையும்....!

குளத்தைக் காணவில்லையாம்!


'குளத்தைக் காணோம், குளத்தைக் காணோம்' என்ற சுவரொட்டி ஒன்று திருவாரூர் நகரைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது.


74 குளங்கள் திருவாரூர் நகரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கணக்கில்தான் இருக்கிறது. ஆனால், பெரும்பகுதி காணவில்லையாம்.


ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கூறியதுபோல் இருக்கிறது இந்தக் கதை.


ஒரு காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் குளங்களும், குட்டைகளும், ஏரிகளும் நீர்ப் பூத்து பூக்கள் மலர்ந்து கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தன. மக்களின் அன்றாட வாழ்வுக்கு மிகவும் பயன்பட்டன. இப்பொழுது அவையெல்லாம் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிக் கட்டடங்களாகக் காட்சி அளிக்கின்றன.


இன்னொரு பக்கம் மணற்கொள்ளை - மணற்கொள்ளைக் காரர்களுக்கு முன்ஜாமீன் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியதுபோலவே, குளம், குட்டை, ஏரிகளின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த தக்க வழிகண்டால் நல்லது! நல்லது!!


மொழித் திணிப்பு


மொழித் திணிப்பில் மத்திய அரசு பலவந்தமாக ஈடுபடுகிறது. - கம்யூ.செயலாளர் தோழர் முத்தரசன்


பிரிவினையைக் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன என்று அண்ணா அவர்கள் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.


விசாரித்து வாருங்கள்...!


திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.


அப்படியே கரோனாவை ஒழிப்பதற்கு சனீஸ்வர பகவானிடம் ஏதாவது 'கசாயம், கிசாயம்' இருந்தால் பக்தர்கள் வாங்கி வரலாமே! சனீஸ்வரன் இருக்கும் திருநள்ளாறில் யாருக்கும் கரோனா தொற்று இல்லையா என்பதையும் தெரிந்து வாருங்கள் அல்லது விசாரித்து வாருங்கள் பக்தர்களே!


வைத்தியரே முதலில் உங்கள் நோயை...


''மண்ணை வளமாகக் காப்போம்''பற்றி மத்திய மந்திரியுடன் ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்.


ஓ, அப்படியா! யானைகள் நடமாடும் பாதைகளையெல்லாம் கட்டடமாக்கியும், மரங்களை வெட்டி ஆசிரமங்கள் அமைத்தும், அடாவடித்தனம் செய்யும் ஜக்கி வாசுதேவிடமிருந்து ஆக்கிரமிப்புகளை முதலில் கைப்பற்றட்டும்!


மண்ணை வளமாகக் காப்பது என்பதற்கு அதுதான் அர்த்தம்.


No comments:

Post a Comment