'நீட்' என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் (UPA) கொண்டு வரப்பட்டாலும் உச்சநீதிமன்றம், 'நீட்' செல்லாது என்று தீர்ப்புக் கூறிய நிலையில், அப்பிரச்சினை அத்தோடு முடிந்து போன ஒன்று.
மத்தியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகே - "குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்ததுபோல", மறு சீராய்வு மனு என்ற பெயரால் வழக்கைப் புதுப்பித்து தோதாக உச்சநீதிமன்றத்தில் 'நீட்'டுக்குச் சாதகமாகத் தீர்ப்புப் பெறப்பட்டு விட்டது.
உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கூறியதற்குப் பிறகு வேறு பேச்சு என்ன என்று நீட்டி முழங்குகின்றது - உயர் ஜாதி வட்டாரம்: இதே வட்டாரம் சபரிமலைஅய்யப்பன் கோயிலுக்கு எந்த வயதுள்ள பெண்ணும் போகலாம் என்று திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறியதே - அதனை ஏற்றுக்கொண்டார்களா?
அயோத்தி பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில் 'இது எங்கள் உணர்வுப் பிரச்சினை - எங்கள் இரத்தத்தோடு ஒன்று கலந்து விட்ட உயிரோட்டப் பிரச்சினை - மதப் பிரச்சினை, இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" என்று இறுமாப்போடு நீட்டி முழங்கியவர்கள் தானே!
அயோத்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருந்தால் இந்த வட்டாரத்தின் நினைப்பும், செயல்பாடும் எப்படியெல்லாம் நடந்திருக்கும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காட்டி - இந்நாட்டின் பெரும் பான்மை மக்களைப் பாதிக்கும் 'நீட்'டை நிலைப்படுத்துவது நிட்டூரமானதே - ஜனநாயகம் என்பது பெரும்பாலான மக்களின் நலம் என்பது பாலபாடம்.
பார்ப்பனர்களின் தந்திரம் என்பது - அவர்கள் நினைத்ததைச் சாதித்து முடிக்க பல்வேறு வழிமுறைகளை - உபாயங்களைக் கையாளுவார்கள். பெரும்பாலும் ஊடகங்கள் அவர்களின் கையிருப்பில் பத்திரமாக இருப்பதால் அவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒரு கருத்தை உருவாக்க முயலுவார்கள் - நம் அப்பாவி மக்களும் அதில் மயங்கக் கூடிய ஆபத்துகளும் உண்டு.
எடுத்துக்காட்டாக இரண்டு நாட்களுக்கு முன் 'நீட்' தேர்வு நடந்து முடிந்தது. அதுபற்றிய செய்திகள் எப்படியெல்லாம் உலா வருகின்றன!
கரோனா காலத்திலும் 90 விழுக்காடு மாணவர்கள் 'நீட்' எழுதியுள்ளனர். கேள்வித்தாள் எளிதாக இருந்தது - எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன என்று பத்தி பத்தியாக செய்திகளை அள்ளி விட்டுள்ளனர்.
என்ன கொடுமை என்றால் முற்பகல் 11 மணிக்கு மாணவர்களை சோதனை செய்து தேர்வு மய்யத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். தேர்வோ பிற்பகல் 2 மணி - மதிய உணவின் நிலை என்ன பசி? கண்கள் இருட்ட தேர்வு எழுதிய பரிதாப நிலை!
பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடங்களில் இருந்ததால் எங்களுக்கு எளிதாகவே இருந்தது என்ற உண்மையும் செய்திகளின் அடுக்குகளுக்கு இடையே கசிந்ததும் உண்டு, இதுதானே உண்மை.
மக்களவையிலும் திமுக குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு அவர்கள் இந்தக் கருத்தினை அழுத்தமாகப் பதிவும் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் முன் திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவைக்குச் சென்ற திமுக உறுப்பினர்கள் அனைவரும் 'நீட்' தேர்வை ரத்து செய்க என்று எழுதப்பட்ட முகக் கவசத்தையும் அணிந்து சென்றுள்ளனர். 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் ஒன்றை சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
ஓர் எதிர்க்கட்சி இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்!
நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று பல மன்றங்கள் உண்டு என்றாலும் எல்லாவற்றையும் விட உயர்ந்த அதிகாரம் படைத்த மன்றம் - மக்கள்மன்றம்தான், அதற்கான மண்டபம் வீதிகள்தான்.
கிளர்ந்தெழுக, வெடிக்கட்டும் கிளர்ச்சி! கிளர்ச்சி!! ஆச்சாரி யாரின் குலக்கல்வியை 1954இல் ஒழித்துக் கட்டியதுடன் அந்த ஆச்சாரியாரையே அரசியலுக்கு முழுக்குப்போடச் செய்தது அந்த வீதிமன்றம்தான்! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தத்தைக் கொண்டுவரச் செய்ததும் அந்த மக்கள் மன்றம்தான். கிளர்ச்சி! கிளர்ச்சி!! கிளர்ச்சி!!! அதுதான் தீர்வு! தீர்வு!! தீர்வு!!!
No comments:
Post a Comment