'விஜயதசமி' என்ற பண்டிகையைக் கொண்டாடுவது என்ற பெயரால் ஆண்டுதோறும் வடமாநிலத்தில் குறிப்பாக இந்தியாவின் தலைநகரமான டில்லியில் இராவணன் உருவ பொம்மையைக் கொளுத்தும் நிகழ்ச்சி 'ராமலீலா' என்ற யெபரால் கொண்டாடப்படுவது வாடிக்கையாகி விட்டது.
இவ்வாண்டு டில்லியில் மருத்துவர்கள் தங்கள் சம்பளக் கோரிக்கைக்காக இராவணன் பொம்மைகளைக் கொளுத்தியுள்ளனர்.
இராமனும், இராவணனும் புராணக் கற்பனைப் பாத்திரங்கள் என்று சொல்லப்பட்டாலும் இவர்களை மய்யப்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது.
இராமன் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படுவதும், அதுபோலவே வட இந்தியாவில் இராவணனனை குல தெய்வமாக வழிபடுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இராவணனுக்குக் கோயில்கள்கூட இருக்கின்றன. இராமன் மகாவிஷ்ணுவின் அவதாரமென்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, மதக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?
வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று கருதப்படுகிறது. "இராமாயணத்தில் சொல்லப்படும் குரங்குகள், கரடிகள் என்பவையெல்லாம் தென்னாட்டு மக்களான திராவிடர்களைக் குறிக்கிறது" என்று அமெரிக்கா வரை சென்று 'பிராமண மதத்தை'ப் பரப்பிய விவேகானந்தர் சொல்லவில்லையா?
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களும், இராமாயணம் என்பதும் 'அரேபியன் நைட்'போன்ற பஞ்ச தந்திரக் கதை என்று எழுதிடவில்லையா?
இந்த வரலாற்றுக் கண்ணோட்டபடி இராவணன் திராவிட வீரன்தானே! இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு இன மக்கள் பல்வேறு மொழிகள், கலாச்சார அடிப்படையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
அப்படி இருக்கும்போது வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தென்னாடு வாழ் மக்களான திராவிடர் இனத்தைச் சேர்ந்த இராவணனைத் தீயிட்டுக் கொளுத்துவது இனத் துவேஷத்தைத் தூண்டக் கூடிய ஒன்றுதானே.
இந்தக் காரணத்தின் அடிப்படையில்தான் 1974 டிசம்பர் 25ஆம் தேதி அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் "இராவண லீலா" நடத்திக் காட்டினார்கள்.
அதன்மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கப்படவில்லையா?
தந்தை பெரியார் வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்திற்கே சென்று, ராம ஜென்ம பூமி என்று கூறிக் கொண்டு திரிகிறார்களே - அந்தப் பகுதிக்கே சென்று இராமனையும், இராமாயணத்தையும் தோலுரித்துக் காட்டவில்லையா?
தந்தை பெரியார் தீட்டிய 'இராமாயணப் பாத்திரங்கள்' என்று தமிழில் வெளிவந்த நூல் (பல பதிப்புகள்) ஹிந்தியில் "சச்சு இராமாயண்" என்று மொழி பெயர்க்கப்பட்ட நிலையில் உ.பி. அரசு அதனைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும் - தடை செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு. கிருஷ்ணஅய்யர் அவர்கள் தீர்ப்பளிக்கவில்லையா?
தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட "இராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு வரிக்காவது மறுப்புக் கூறியவர்கள் உண்டா?
இராமணயண உபந்நியாசிகள் நாட்டில் உலவிக் கொண்டுதானே இருக்கிறார்கள். இராமனைத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்களும் இருக்கத்தானே செய்கின்றன. ஏன் மறுப்பு எழுதப்பட முடியவில்லை?
காரணம் - தக்க ஆதாரங்களுடன் தந்தைபெரியாரால் எழுதப்பட்ட நூல் அது.
இன்னொரு விஷயம் முக்கியமானது. இராமாயணம் என்பது உண்மையாக நடந்த கதை என்றால் இந்தியா முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டது எப்படி?
வால்மீகி இராமாயணத்தில் சீதை ஜனகனின் மகள் என்று கூறப்படுகிறது. வங்காள மொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தில் இராவணன் மகள் சீதை என்று எழுதப்பட்டிருப்பது எப்படி? ஆர்.எஸ். மனோகர் நடித்த 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகம் ஆயிரக்கணக்கான மேடைகளில் அரங்கேற்றப்பட்டதே! - அந்த நாடகத்தில் இராவணன் மகள் சீதை என்று தானே காட்சிப்படுத்தப்பட்டது.
நடிகவேள் எம்.ஆர். இராதா நடித்த 'இராமாயணம்' எனும் நாடகம் தமிழ்நாட்டில் அரங்கேற்றப்படாத முக்கிய ஊர்களே இல்லை. நாடகத்தின் தொடக்கத்திலேயே - வரலாற்று ஆசிரியர் கூறிய கருத்துகளின் அடிப்படையில்தான் இந்நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினாரே!
இராமயணத்தில் இராமன் குடித்திருக்கிறான், மாமிச உணவு உண்டு இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்கள் உண்டே.
இராமன், சீதை கதாபாத்திரங்களின் முடிவு தற்கொலை தானே.
இந்த நிலையில் இராமனைக் கதாநாயகனாக்கி, இராவணனை வில்லனாக்கிச் சித்திரிப்பதும், இராவணனை எரிப்பதும் அசல் போக்கிரித்தனம் - ஆரிய இனவெறித்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? இராம பக்தர்கள் முடிவு செய்யட்டும்!
No comments:
Post a Comment