ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!! (5) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!! (5)

முட்டாள் நரி உயிரை விட்டது



கதைக்குள் கதை


தேவசர்மா உட்கார்த்திருந்தபோது எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான்.


மந்தையின் மத்தியில் இரண்டு ஆடுகள் சண்டை யிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டான் சந்நியாசி.


ஆடுகள் இரண்டும் ஆங்காரத்தோடு விலகிப் பின் வாங்குவதும் மீண்டும் ஓடி வந்து, அகன்ற நெற்றி மண்டைகளோடு ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்வதுமாக இருந்தன. மண்டையி லிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.


பேராசை கொண்ட குள்ள நரி ஒன்று ஆட்டுச் சண்டையைப் பார்த்தது. கீழே சொட்டும் இரத்தத்தை நக்கிச் சாப்பிட எண்ணிய நரி ஆடுகள் விலகிப் பின்னடையும் போது புகுந்து இரத்தத் துளிகளை நக்கிச் சுவைத்தது. ஆடுகள் முட்டிக் கொள்ள முன்னே வரும்போது, நரி தந்திரமாக பின்னே சென்று விடும். இவ்வாறு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்நியாசி. “அடப் பாவமே? இந்தக் குள்ள நரியின் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? ஆட்டுச் சண்டையின் மத்தியில் அது சிக்கிக் கொண்டால் நிச்சயமாக அது செத்துப் போகுமே, வேறு எதுவும் நடக்கப்போகிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை” என்று எண்ணிச் சிரித்தான்.


மறுபடியும் ஆடுகள் முட்டிச் சண்டையிட நெருங்கின. இரத்தத்தைச் சுவைத்து ருசி கண்ட நரி ஆவலோடு இப்பொழுதும் நெருங்கி வந்து கொண்டே இருந்தது. ஆடுகளின் மத்தியில் வசமாக மாட்டிக் கொண்டு கீழே தள்ளப்பட்டு உயிரை விட்டது!


“ஆட்டுச் சண்டையிலே குள்ளநரி செத்தது!” என்று சொல்லி கொண்டு அதைப்பற்றிச் சிந்தித்த வாறு சந்நியாசி எழுந்து நடக்கலானான்.


சீடன் இருக்கும் இடம் சென்று, பணப்பையை பெற்றுக் கொள்ள ஆவலோடு நடந்து சென்றான். அங்கே ஆஷாடபூதி காணப்படவில்லை. அவசரம் அவசரமாகக் கால் கழுவிக் கொண்டு வந்து பார்த்தபோது, கந்தல் துணி மட்டும் கிடந்தது. பணப்பையைக் காணோம்,


“அய்யையோ! பணப்பையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டானே!” என்று கத்தினான் சந்நியாசி. உடனே மூர்ச்சை அடைந்து கீழே விழுந்து விட்டான். சிறிது நேரத்தில் மீண்டும் நினைவு பெற்று எழுந்து உட்கார்ந்தான். “அட ஆஷாடபூதியே, என்னை வஞ்சித்து, பணப் பையை எடுத்துக் கொண்டு எங்கே ஓடிப் போனாய்?’’ என்று பலவாறு அலறிக் கதறினான். பிறகு அவனுடைய காலடி அடையாளங்களைத் தேடிப் பின்பற்றியபடி, ‘ஆஷாடபூதியால் வஞ்சிக்கப்பட்டேன்’ என்று புலம் பிக் கொண்டே மெதுவாக நடக்கத் தொடங்கினான்.


No comments:

Post a Comment