மனுதர்மத்தைப்பற்றி மேல் ஜாதிப் பெண் எழுதிய "நான் ஏன் ஹிந்துப் பெண் அல்ல!" நூலுக்குப் பதில் என்ன?
* கி. வீரமணி
அண்மையில் சிறப்பாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, 1921ஆம் ஆண்டுக்குரிய நூலாக வெளிவந்துள்ள "Why I am not a hindu women" என்ற ஒரு நூல் ஒரு புரட்சிகரமான சிந்தனையுள்ள ஒரு பெண்ணின் சொந்த வாழ்க்கையை உள்ளடக்கிய - சுதந்திரமான துணிவுடன் எழுதப்பட்டுள்ளதாகும்.
வந்தனா சோனல்கார் என்ற பெயருடைய அந்தக் கல்வியாளர், மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பார்ப்பனரல்லாத முன்னேறிய ஜாதியைச் சார்ந்தவர். ஆனால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பது பாலின வேற்றுமையை ஏகபோகமாகக் கொண்டுள்ளதால் ஹிந்து மதத்தின் பல்வேறு நிலைகளில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அதே நேரத்தில் மனித வர்க்கத்தில் எங்குமில்லாத ஜாதி - வர்ணாசிரம - மனுதர்ம முறையை அடிப்படையாகக் கொண்டு மிகப் பெரும்பாலானவரை இழி குல மக்களாக்கி, சமத்துவத்திற்கு நேர் எதிரிடையான வாழ்க்கை வாழும் அவலத்தைக் கண்டு மனம் கொதித்து பல்வேறு வாழ்க்கை அனுபவங்களையும், குடும்பத்தின் நிகழ்வுகளையும், சமூகம் சார்ந்த அவலங்களும், அவற்றை நியாயப்படுத்தும் ஹிந்து தர்ம சாஸ்திர புராணங்கள், சடங்குகள், நிகழ்வுகள் பற்றியும் பல ஆண்டுகள் ஆராய்ந்து தனது 60 வயதை அடைந்துள்ள நிலையில் இவர் துணிவாக இதனை எழுதியுள்ளார்!
ஜாதியில் அடி மட்டத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தின் பெண்கள் அனுபவிக்கும் அளவுக்கு இவருக்குப் பெரும் அளவில் தொழிலில் - துன்பங்கள் ஏற்படவில்லை. என்றாலும், ஹிந்து மதத்தில் பிறவி காரணமான பேதம் ஏற்படுத்திய விளைவால் எப்போதும் பெண்கள் ஒரு போதும் ஆணுடன் சமத்துவத்தைப் பெற முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
ஜாதிக் கொடுமையால் "கீழ்ஜாதி" என்று அழைக்கப்படும் பெண்கள் படும் துன்பங்கள், வேதனைகள் அளவுக்குத் தான் படவில்லை யென்றாலும், இடைநிலைப்பட்ட நிலையில் உள்ள தம்மைப் போன்றவர்கள், முன்னேறிய பார்ப் பனரல்லாத ஜாதி பெண் கூட ஆணுடன் ஒரு போதும் சமத்துவத்தை எதிர்பார்க்கவே முடியாது ஹிந்து மதத்தின்கீழ் என்பதால், தன்னை ஒரு ஹிந்துப் பெண் என்று அழைத்துக் கொள்ள முடியாததால், "நான் ஏன் ஹிந்துப் பெண் அல்ல- பெண் என்று அழைத்துக் கொள்ளவும் விரும்ப வில்லை" என்பதற்கான பல அனுபவங்களையும், காரணங்களையும் அடுக்கடுக்காக அந்த நூலில் விளக்கமாக எழுதியுள்ளார்!
"சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குமேல் ஆன ஒரு நாட்டில் எப்படி எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாக, கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் (ஆராய்ச்சித் துறைகள் உள்பட) ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது என்பதையும், அதற்கு உடந்தையாக இருப்பது ஜாதி - வர்ண தர்மமுறை தான் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
"எனது தாய் அனுபவித்த கொடுமையான அனுபவத்தை எனது குழந்தைப் பருவம் முதலே கண்டு வளர்ந்ததால் இப்படிப்பட்ட எனது தனிப்பட்ட அவலங்களான அனுபவத்தையும், பிறக் குடும்பங்களில் ஏற்படும் பல நெருக்கடிகளையும் உள் வாங்கியே விவாதித்துள்ளேன்" என்கிறார்.
சிரிறி என்ற பார்ப்பனரல்லாத முன்னேறிய மேல் ஜாதியினர் (வடநாட்டு காயஸ்தா போன்றவர்கள்) மற்ற சில ஜாதி யினரைப் போல 'நாங்களும், க்ஷத்திரியர்கள்' என்று கூறுவதை பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள் வதில்லை. CKP ஜாதி என்பது மகாராட்டிரத்தில் மட்டுமே உள்ள ஒரு சிறு மேல் ஜாதிக் குழுவாகும்.
"நான் ஒரு நாத்திகவாதி. நாத்திகத்தை ஹிந்து மதம் ஒப்புக் கொள்ளுகிறது. என்றாலும், நான் என்னை ஒரு ஹிந்துப் பெண்மணி என்று அழைத்துக் கொள்ள மறுக்கிறேன். காரணம், மனுதர்மத்திலும், பகவத் கீதையும், மற்றதிலும் ஹிந்துப் பெண்கள் எந்த காலக் கட்டத்திலும் சுதந்திரம் பெறவோ, ஆண்களுடன் சமத்துவத் துடன் வாழவோ இடந் தருவதாக இல்லையே!" என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மனுதர்மத் தாக்கம்தான் ஹிந்துப் பெண் களின் இந்த நிலைக்குக் காரணம் என்பதே - மனுவின் சுலோகங்களைப் பயன்படுத்தியே எழுதிய ஜோதிபாபுலே, டாக்டர் அம்பேத்கர் முதலிய பல புரட்சியாளர்களது கருத்தாகும். இன்றைய பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி எப்படி மனுதர்மத்தை மீண்டும் நிலை நிறுத்தி - முஸ்லிம்களை எதிரிகளாக உருவகப்படுத்திக் கொண்டுள்ளது என்பதையும், ஆண் ஆதிக்க சிந்தனைக்கு அடிப்படையே மனுதான் என்பதையும் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்!
அவசியம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
குறிப்பு: 169 பக்கங்கள் கொண்ட இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளிவர வேண்டியதானதும் கூட!
No comments:
Post a Comment