மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


சென்னை, அக்.27 மருத்துவப் படிப்பில் அகில இந்திய  ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவித  இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று (26.10.2020) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஒபிசி பிரிவி னருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நாகேஸ்வரராவ் தலை மையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.


இந்நிலையில் இது குறித்து தமிழகத் தலைவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மருத்துவப் படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காட்டினை அமுல் படுத்த முடியாது என்ற மத்திய அரசின் பிடிவாதமான பதிலை அப்படியே ஏற்று உச்சநீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஏமாற்றத்தைத் தருவதாகவும் அமைந்துள்ளது.


இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் வழக்காடிகளான கட்சிகளின் சார்பில் எடுத்துவைத்த வாதங்களின்போது, குறைந்தபட்சம் இந்த ஆண்டிற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், 27 சதவிகிதப்படி இந்தஆண்டிற்கு மட்டும் - ஒதுக்கலாமே என்று   சொன்ன நல்ல யோசனையின்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நம் பிக்கை - உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் கானல்நீர் வேட்டையாகி விட்டது! இந்த ஆண்டு கிடைக்க உத்தரவிட முடியாது என கை விரித்துவிட்டது உச்சநீதிமன்றம்.


“அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம் “ (நிரந்தரம் உறுதிப்படுத்தும்) என்று கிராமப்புற மக்களிடையே ஒரு பழமொழி உண்டு அதனை நினைவூட்டுவதாகவே இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது.


மக்களின் கடைசி நம்பிக்கைக்கு இந்த நிலை என்கிறபோது மக்கள் மன்றத்தைத் திரட்டி அனைவரும் ஒருமித்த  குரலில், ஓரணியில் திரண்டு சமூக நீதிக்காகப் போராடுவதுதான் ஒரே வழி!


அதுபற்றி அனைத்து கட்சிகளும், அமைப் புகளும் சிந்திக்குமாக! என்று அவ்வறிக்கையில் கூறியிருந்தார்.


மு.க.ஸ்டாலின்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. பாஜகவுடன் அதிமுக கைகோர்த்து பட்டியலின மாணவர்களின் கனவை கலைத்துள்ளது.


வைகோ


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மருத்துவ படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கண்டனத்திற்குரியது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது.


கே.எஸ்.அழகிரி


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக் கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம்.  பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சீர்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்.


இரா.முத்தரசன்


இரா.முத்தரசன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வெளியிட் டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிசி மாணவர்களின் நம்பிக்கை தகர்த்துவிட்டது. மனுவாத சிந்தனையில் மத்திய அரசு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கைக்கு மாபெரும் துரோகமி ழைத்துள்ளது. இந்த அநீதிக்கு எதிராக சமூக நீதி, ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தீவிரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்.


விஜயகாந்த்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,


50 சதவிகித இடஒதுக்கீட்டை நடப் பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடி யாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களில் ஓபிசிக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மருத்துவர் இராமதாஸ்


மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் நடப்பாண்டில் இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது எனவும், தீர்வு காண பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழு அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத் தியுள்ளார்.


டிடிவி.தினகரன்


அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி.தினகரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையை காப்பாற்றுவதற்கான சட்டப்படியான நட வடிக்கைகளில் இனியாவது பழனிசாமி அரசு அக்கறையோடு செயல்பட வேண் டும்.


ஜி.கே.வாசன்


தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, எதிர்பார்ப்பிற்கு மாறாக இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டிற்கு வாய்ப் பில்லை என்று அறிவித்து இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.


எஸ்.டி.பி.அய். கட்சி


எஸ்.டி.பி.அய். கட்சி தலைவர்  நெல்லை முபாரக்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிய ஒரு மாபாதக செயலை மத்திய அரசு செய்தி ருக்கிறது.


No comments:

Post a Comment