காஷ்மீரில் நடக்கும் கொடிப் போர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

காஷ்மீரில் நடக்கும் கொடிப் போர்!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானார்.  அவர் விடுதலை ஆனதிலிருந்து அவரது மகள் மட்டுமே அவர் சார்பில் ஊடகங்களில் பேசிவந்தார்.


 இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் கழித்த மெகபூபா முப்தி  முதல் முதலாக சிறீநகரில் தனது வீட்டில் ஊடகவியலா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "எனது உயிர் பிரிய நேரிட்டாலும் எனது தாய்மண்ணில், எங்களின் தாய்நாட்டின் கொடியை பறக்கவிடமால் வேறு ஒரு கொடியை பறக்க அனுமதிக்க மாட்டேன்" என்று சூளுரைத்துள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த ஆண்டு ஜூலை இறுதியில்  இரண்டாக பிரிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி தரும் சட்டப்பிரிவான 370 நீக்கப்பட்டது,


 இதனை அடுத்து அங்கு எழுந்த கொதிப்பான நிலையை அடுத்து 14 மாதங்கள் முழு ஊரடங்கு தொடர்ந்தது,  இணையத் தடை, மொபைல் சேவைத் தடை, அத்தியாவசிய தேவையைத் தவிர மற்ற அனைத் திற்குமே தடை விதிக்கப்பட்டது,


 இதனைத் தொடர்ந்து அனைத்து முக்கிய அரசியல் தலைவர்களும் சிறையிலடைக்கப்பட்டனர்; இதில் பலர் 10 மாதங்கள் கழித்தே விடுவிக்கப்பட்டனர்.


 தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா இந்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் விடுதலை செய்யப் பட்டார்.


 பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வராக இருந்த மெகபூபா முப்தி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தொடர்ந்து ராணுவ முகாம் சிறைக்கும், அரசு பங்களா தனிமைச்சிறைக்கும் மாற்றப்பட்டுகொண்டு இருந்தார். அவருக்கு அவரது மகள் எழுதும் கடிதங்கள் கூட ராணுவ அதிகாரிகளால் படிக்கப் பட்ட பிறகே வழங்கப்பட்டன.


 இந்த 12 மாதங்களில் பல முறை அமித்ஷா, பாதுகாப்புச் செயலாளர் அஜய் தோவால் உள்ளிட்ட பலர் மெகபூபா முப்தியின் விடுதலைக்கு பல நிபந்தனைகளை விதித்தனர். ஆனால் அவர் எந்த நிபந்தனையையும் ஏற்கமாட்டேன் என்று கூறியது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து மரணிக்கவும் தயார் என்று உறுதியாக கூறிவிட்டார்.  இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர் 14.10.2020 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


சிறையிலிருந்து வெளிவந்து முதல் நாளே "நான் ஓய்ந்து விடவில்லை. பயந்துவிடவில்லை. எனது மாநிலத்திற்கு பழைய உரிமையை மீட்டு மீண்டும் ஒன்றுபட்ட ஜம்மு காஷ்மீரை உருவாக்கியே தீருவேன்" என்று தனது மகள் மூலம் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்.


 இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி தனது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.


"ஜம்மு காஷ்மீருக்கான பகுதியளவு சுயாட்சி உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கையும், இரண்டு யூனியன் பிரதேசத்தை உருவாக்கியதும் சாதாரண காஷ்மீரிகளை உளவியல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது" என்று மெகபூபா குறிப்பிட்டார். இந்தியாவில் பல்வேறு அவசர பிரச்சினைகள் நிலவும் வேளையில், அவற்றை தீர்க்கும் நடவடிக்கையில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.


பொருளாதாரத்தை கையாளத் தவறியதும், மக்களுக்கு அதிகாரமளிக்கத் தவறியதும் தொடர்ந்த வேளையில், அவற்றை மறைக்க சிறுபான்மையினரையும், காஷ்மீரையும் மத்திய அரசு இலக்கு வைத்ததாக மெகபூபா தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் போனால் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.


"எனது தந்தை முஃப்தி சயித், காஷ்மீர் பிரச்சினைக்கான அமைதி வழி தீர்வு குறித்து கனவு கண்டார். ஆனால், மத்திய அரசோ, ஒரு புறா கண்ணை மூடிக்கொண்டு பூனை முன்பாக நின்று கொண்டிருப்பதைப் போல இருக்கிறது. கண்ணை மூடினால், பூனை புறாவை கவ்வும். அதுபோலத்தான் காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்" என்று அவர் வலியுறுத்தினார்.


"கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசுக்குக் கணிசமான அளவுக்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், எங்களை அவமானப்படுத்திய அரசுக்கு, எங்களுடைய நிலம் மட்டுமே முக்கியமாகப்பட்டதே தவிர, எங்களுடைய மக்களை அது கண்டுகொள்ளவேயில்லை. அமைதி, மதிப்புக்காக லட்சக்கணக்கா னோர் இந்த மண்ணில் உயிரை விட்டுள்ளனர். அவர்களின் தியாகம் வீணாக விடமாட்டோம்" என்று மெகபூபா முப்தி கூறினார்.


"ஜம்மு காஷ்மீருக்கு அரசமைப்பு சுயாட்சி திரும்பக் கிடைப்பது என்பது, அரசியல் யுத்தமாக மாறி விட்டது. இந்த யுத்தம் நீளமானது. இப்போது அரசியல் கட்சிகள் இந்த நோக்கத்துக்காக ஒன்றிணைந்து வருகின்றன. இந்த யுத்தத்தை இங்குள்ள கட்சிகள் இணைந்து முன்னெடுப்போம்" என்று மெகபூபா தெரிவித்தார்


காஷ்மீருக்கு சிறப்பு நிலை வழங்க வகை செய்யும் இந்திய அரசமைப்பின் 370ஆவது விதி ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, அரசு தலைமைச் செயலகம் மற்றும் அரசு கட்டடங்களில் தேசிய மூவர்ண கொடியுடன் அதுவரை ஏற்றப்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் கொடி அகற்றப்பட்டது. அந்த கொடி, 1952ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான மாநில பேரவையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்ற மூன்று கோடுகள், ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவற்றை குறிக்கும் வகையில் இருந்தன. மேலும் அதில் உள்ள ஏர் சின்னம் அங்கு விசவாயத்தை சிறப்பிக்கும் ஒரு அடையாளமாக கொடியில் இருந்தது,  இந்தியாவில் எங்கும் இல்லாத புதுமையாக இந்திய தேசியக் கொடியோடு ஜம்மு காஷ்மீர் மாநிலக் கொடியேற்றப்படும்.  அங்கு இரண்டு கொடிக்குமே மரியாதை செலுத்தப்படும். 


அந்த மாநிலத்திற்கு என்று தனிக்கொடி இருப்பதை ஆரம்பத்தில் இருந்தே பாஜக கடுமையாக எதிர்த்து வந்தது. தேசியக் கொடி தனித்து ஏற்றும் வரை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று ஜம்மு மாநில பாஜவினர் தொடர்ந்து கூறி வந்தனர். மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்த போதும் அரசு நிகழ்ச்சிகளில் அம்மாநில பாஜகவினர் பங்கேற்கவில்லை.


 ஜம்மு காஷ்மீருக்கான தனித் தகுதியை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் கொடி அகற்றப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் காஷ்மீரை இணைக்குமா, பிளக்குமா என்ற வினாவை ஏற்படுத்தி விட்டது.


No comments:

Post a Comment