தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் துணை முதல்வரான பேராசிரியை டாக்டர் பர்வீன் அவர்களது தந்தையும், மறைந்த துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களது மாமனாருமாகிய திரு. கே.ஒய்.ஹூசைன் ஷா (வயது 85) அவர்கள் இன்று (25.10.2020) காலை தஞ்சையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துன்பமும், துயரமும் அடைந்தோம்.
மறைந்த திரு. கே.ஒய்.ஹூசைன் ஷா அவர்கள் மிகுந்த பண்பாளர்; பெருந் தன்மையான குணத்தோடு எவரிடமும் அன்புடன் பழக்கக் கூடிய பெருமகனார். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியாவார்.
பர்வீன் அவர்களது தாயார் சில மாதங்களுக்கு முன் மறைந்தார்; சென்ற சில வாரங்களுக்கு முன் டாக்டர் நல். இராமச்சந்திரன் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மறைந்து அனைவரையும் மீளா சோகத்திற்கு ஆட்படுத்திய நிலையில், இப்படி ஒரு இழப்பு. எவ்வளவு கொடுமையான வேதனை!
பேராசிரியை டாக்டர் பர்வீன் அவர்கள் பகுத்தறிவுவாதி, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். இதையும் தாங்கி ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழியில்லை.
அப்பெருமகனாரை இழந்து வாடும் அக்குடும்பத் தாருக்கும், சகோதரர், சகோதரிகளுக்கும் நமது ஆறு தலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர்,
பெரியார் கல்வி நிறுவனங்கள்
சென்னை
25.10.2020
குறிப்பு: செய்தி அறிந்தவுடன் வீட்டில் உள்ள குடும்பத்தவரும், நானும் பர்வீன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, துயரத்தில் பங்கு கொண்டு, ஆறுதல் செய்தியைத் தெரிவித்தோம்.
No comments:
Post a Comment