மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதை எடுத்துச் சொன்ன தோழர் திருமாவளவன்மீது வழக்கா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 25, 2020

மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதை எடுத்துச் சொன்ன தோழர் திருமாவளவன்மீது வழக்கா

மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதை எடுத்துச் சொன்ன தோழர் திருமாவளவன்மீது வழக்கா?


செய்தியை ஒளிபரப்பிய பெரியார் யூடியூப் சேனல்மீதும் வழக்காம்!


வழக்கை சந்திக்கத் தயார்! இதிகாசம் - புராணங்களை நீதிமன்றத்தில் ஏறித் தோலுரிக்கத் தயார்! தயார்!!



மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்களை இழிவுபடுத் தியதை எடுத்துக்காட்டினார் என்பதற்காக தோழர் திருமாவளவன்மீதும், ஒளிபரப்பிய பெரியார் யூடியூப் சேனல் மீதும் வழக்கு என்பது நிஜத்தைவிட்டு நிழலோடு சண்டைப் போடுவதாகும். இந்த சுருதி, ஸ்மிருதிகளை நீதிமன்றத்தில் தோலுரிக்க இதனை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


அய்ரோப்பிய பெரியார்  - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணைய கருத்தரங்கில் (26, 27.9.2020) பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அக்கருத் தரங்கில் நான் உள்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனும் பங்குகொண்டு பேசினார்.


அக்கருத்தரங்கில் தோழர் திருமாவளவன் மனுதர்மம் குறித்துப் பேசிய பேச்சின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.


வழக்குத் தொடுக்கப்பட்ட பிரிவு


பெரியார் யூடியூப் சேனலில் நாடாளுமன்ற உறுப்பி னரான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  பேசியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், திருமாவளவன் மனுதர்மத் தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் வழக்குரை ஞரணி செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பொய்யான தகவல்களை கூறி, மத உணர்வுகளைப்  புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


குறிப்பாக 295-ஏ- வேண்டுமென்றே மத உணர்வு களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் மதங்கள், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல்.


298 - வார்த்தைகளால் மத உணர்வுகளை காயப் படுத்தும் வகையில் பேசுதல்.


505 -1 - குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்தி அல்லது அறிக்கை வெளியிடுதல்.


505 - 2 - அறிக்கை வெளியிட்டு இரு பிரிவினருக்கு இடையே மோதல், வெறுப்பை ஏற்படுத்துதல்.


153 - விருப்பமில்லாமல் ஆத்திரமூட்டி, கலவரத்தை ஏற்படுத்துதல்.


153 ஏ - இரு பிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமா வளவன், வீடியோவை வெளியிட்ட பெரியார் யூடியூப் சேனல் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிட்டிருந்த (24.10.2020) நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தோழர் திருமாவளவன் அவர்கள் தனது சொந்த கருத்தாக எதையும் சொல்லவில்லை. மனுதர்மத்தில் பெண்கள் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாகத்தான் பேசி இருக்கிறார்.


உண்மை இவ்வாறு இருக்க, தோழர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தினார் என்று திரிப்பது மோசடியல்லவா!


மனுதர்மத்தை டாக்டர் அம்பேத்கர் எரித்தாரே!


இதே காரணங்களுக்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மனுதர்மத்தைத் தம் தோழர்களுடன் மகா ராட்டிர மாநிலம் மகத் நகரில் எரித்துள்ளார் (25.12.1927).


தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக் கமும், அதே 1927 ஆம் ஆண்டில் குடியாத்தத்தில் நடைபெற்ற வடாற்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட் டிலும் மனுதர்மம் எரியூட்டப்பட்டது (4.12.1927).


1922 ஆம் ஆண்டிலேயே திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே மனுதர்மத்தையும், இராமாய ணத்தையும் எரிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கியதுண்டு.


திராவிடர் கழகத்தின் சார்பில் 17.5.1981 அன்றும், 7.2.2019 அன்றும் மனுதர்மம் தமிழ்நாடெங்கும் எரிக்கப் பட்டதே!


வரலாறு தெரியுமா அ.தி.மு.க. அரசுக்கு?


இந்த வரலாறு எல்லாம் அண்ணா பெயரில் கட்சியை வைத்திருக்கும், ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அண்ணா தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தால் - இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட் டார்கள்.


பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்களா?


பெண்களைப்பற்றி மனுதர்மத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன? (3 ஆம் பக்கம் காண்க) மனு தர்மத்தில் மட்டுமல்ல இந்து புராணங்களிலும், இதிகாசங் களிலும் பெண்கள் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.


குறிப்பாக கீதையில், ‘‘பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்'' (ஙிஷீக்ஷீஸீ ஷீut ஷீயீ கீஷீனீதீ ஷீயீ ஷிவீஸீ) (கீதை அத்தியாயம் 18; சுலோகம் 44) என்று கூறப்பட்டுள்ளதே - இவற்றை எல்லாம் ஏற்கப் போகிறார்களா?


கடவுள் பெயரால் இப்படி கூறப்படும் இழிவுகளை எடுத்துக் கூறக் கூடாதா?


கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பதா?


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள கருத்துரிமை, பேச்சுரிமையின் கழுத்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நெரிக்கப்படுகிறதா?


தோழர் திருமாவளவன் உரையை வெளியிட்ட பெரியார் யூடியூப் சேனல்மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.


நீதிமன்றத்திலேயே தோலுரிப்போம்!


வழக்குத் தொடுக்கட்டும் - வரவேற்கிறோம்; ஹிந்துப் புராணங்களையும், இதிகாசங்களையும், சாஸ்திர நூல் களையும் நீதிமன்றத்திலேயே பட்டாங்கமாகத் தோலு ரித்துக் காட்டும் பிரச்சார வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது என்று கருதியே மகிழ்ச்சி அடைகிறோம்.


நிஜத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடு வதுபோல, பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை விட்டுவிட்டு, பெண்களை இழிவுபடுத்தும் அந்நூலில் உள்ள தகவல்களை எடுத்துக் கூறுவதுதான் குற்றமா?


மனுதர்மம் ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதிலும் எதிரொலிக்கிறதா?


பா.ஜ.க.வுக்கு ஒரு நீதி - தி.க.வுக்கு மற்றொரு நீதியா?


பாரதீய ஜனதா என்பது மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் அண் ணாவின் பெயரையும், ‘திராவிட' எனும் இனக் கலாச்சாரத்தையும் இணைத்துக் கொள்ளும் அண்ணா தி.மு.க.வுக்கு என்ன வந்தது?


பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் ஆன்-லைனில் முதல் நாள் கொடுத்த புகார்மீது மறுநாள் அவசர அவசரமாக செயல்படுவது ஏன்?


தோழர் திருமாவளவன் விஷயத்தில் மனுதர்மத் தினுடைய வருணாசிரமப் பார்வையா?


மற்ற கட்சிகள், அமைப்புகள் கொடுத்த புகார்கள் எல்லாம் கிடப்பில் கிடக்கின்றன. பா.ஜ.க. கொடுத்தால் மட்டும், அதன்மீது நடவடிக்கை எடுக்க அதிதீவிரம் காட்டுவது எதைக் காட்டுகிறது?


அகில பாரத இந்து மகாசபையின் தமிழ்நாடு தலைவர் திரு.டி.பாலசுப்பிரமணியன் என்பவர் தன் முகநூலிலும் (ஃபேஸ் புக்), டுவிட்டரிலும் ‘‘பெரியாருக்குப் பூணூல் போடுங்கடா, பெரியார் கடவுள் இல்லை என சொல்லவில்லை. ஜாதிப் பாகுபாடுகளைத்தான் முன் வைத்தார்; பின் விளைவுகள் வரும் என சொன்னவன் என்ன பண்றான் பார்ப்போம்'' என்று பதிவு செய்ததுடன், தந்தை பெரியாரின் உருவப் படத்துடன் வெளியிட்டு, காவி ஆடையும், நெற்றியிலும், கையிலும் திருநீற்றுப் பட்டையும் பூசப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது.


இதுகுறித்து 6.11.2019 நாளன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் புகார் கொடுத்து, அதன் முதல் தகவல் அறிக் கையும் (எஃப்.அய்.ஆர்.) காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது (8.11.2019).


கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தும், இதன்மீது சென்னை காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?


பா.ஜ.க. புகார் கொடுத்தால் மறுநாளே நடவடிக்கை - மற்றவர்கள் புகார் கொடுத்தால் ஓராண்டு கடந்தாலும் ஊறுகாய் ஜாடியில்தான் ஊறிக்கொண்டு இருக்குமா?


தலைவர்களின் கண்டனம்!


தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், ‘‘தோழர் திருமாவளவன்மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டு இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது - வழக்கை வாபஸ் பெறவேண்டும்'' என்றும், ‘‘தந்தை பெரியார், அம்பேத்கர் சொன்னதைத்தான் திருமாவள வன் பேசியிருக்கிறார்; இன்னும் சொல்லப்போனால், மனுதர்மத்தில் உள்ளதைத்தான் திருமாவளவன் சொல்லியிருக்கிறார்'' என்றும் கூறியுள்ளார்.


அதோடு, திருமாவளவன் அவர்கள்மீது வழக்கு என்பதின்மூலம், தி.மு.க. தலைமையில் உள்ள வலுவான கூட்டணியில் கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப் பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாய் பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது என்று குறிப்பிட்டு, அந்த அவதூறு பரப்பும் பா.ஜ.க. திட்டத்தின்மீது முகத்தில் அறைந்தார்ப்போல் கூறி, தி.மு.க. கூட்டணியின் ஒன்றுபட்ட பலத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சியை அம்பலப்படுத்தியுள்ளது மிகவும் சிறப்பானதாகும்!


ஏற்கெனவே சில ஊடகங்களில், தி.மு.க. குறைந்த அளவே அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கும் என்றும், அதுவும் அக்கட்சிகளை தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தும் என்றும் கூறி, கயிறு திரித்தனர்; கூட்டணித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அதனைத் திட்டவட்டமாக மறுத்தவுடன், அந்த வாதம் ‘புஸ்வாணமானது!'


தொல்.திருமாவளவன்மீது வழக்குப் போடப்பட்டு உள்ளதை ம.தி.மு.க. இடதுசாரிகள், காங்கிரஸ் தலை வர்கள் கண்டித்து இருப்பது வரவேற்கத்தக்கது.


அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்!


நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, புராண, இதி காசங்களை தோலுரிக்கும் வாய்ப்புக் கிட்டுமா என்பது எங்கள் எதிர்பார்ப்பே!


ஆசிரியர் கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை      


25.10.2020         


No comments:

Post a Comment