கோமியத்துக்குக் கிராக்கி!
பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் உடல்நலனுக்காக நாள்தோறும் மாட்டு மூத்திரத்தைக் குடிக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் பரவியதால், அதற்குக் கிராக்கி அதிகமாம்!
மாட்டு மூத்திரத்தைத்தான் ''கோமியம்'' என்கிற டிரேட் மார்க்கில் விளம்பரப்படுத்துகிறார்கள். மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் தன் சிறுநீர் அருந்தினர். 'மொரார்ஜி டானிக்' என்று அப்போது கிண்டலடிக்கப்பட்டதுண்டு.
ஆமாம், ஒரு கழிவுப் பொருள் எப்படி மருந்தாகும்? மருத்துவ அறிவியலாளர்கள் விளக்குவார்களாக!
உயிரைக் குடிக்கும் ‘‘குளிர்பானக் குடி!''
குளிர்பானம் குழந்தைகளைக் குஷிபடுத்துவது ஏன் எனும் சர்ச்சை.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், வணிகப் பொருளாக இருக்கும் குளிர்பானங்களில் ஏழு கரண்டி (ஸ்பூன்) உப்பும், அந்த உப்புக் கரிப்புத் தெரியாமல் இருப்பதற்கு 10 கரண்டி சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. நிறம் தருவதற்கு 'நிறமி' என்ற இரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்படுகிறது.
இவை கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. இந்தப் பூச்சிக் கொல்லியின் பெயர் லிண்டேன்; வெளிநாடுகளில் இது 0.4 சதவிகிதம் என்றால், இந்தியாவிலோ 10 சதவிகிதம் சேர்க்கப்படுகிறதாம் - தொடர்ந்து குடித்தால் அவ்வளவுதான்.
எல்லாம் தெரிந்து அரசு தடை செய்யாதது ஏன் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!
கார்ப்பரேட்டுகளின் கோபத்துக்கு அரசு ஆளானால் என்னாவது?
என்று கேட்டது கடவுள்?
ஆடம்பரமாக பண்டிகையைக் கொண்டாட எந்த மதமும், கடவுளும் நம்மிடம் கேட்கவில்லை. ஆகவே, வரும் பண்டிகையைக் குடும்பத்துடன் வீட்டிலேயே கொண்டாடுங்கள்: - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன்.
எந்தக் கடவுள் எதைத்தான் எப்பொழுதுதான் கேட்டது? சாமிக்காக ஆசாமிதான் கேட்டுக் கொண்டு திரிகிறான் தொப்பையை நிரப்ப.
இது என்ன பிராமாதம்!
மிகக் குறைந்த வயதில் நீர்ச் சறுக்கு விளையாடி உலக சாதனை படைத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த கேசி - மிஸ்பு இணையரின் 6 மாதக் குழந்தை.
இது என்ன பிரமாதம்; எங்கள் பகவான் கிருஷ்ணன் சின்ன வயதிலே வெண்ணெய்யையும், பெண்ணையும் திருடியதைவிடவா?
துள்ளிய மாடு
பொதி சுமக்கும்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி, நலன்களுக்காக என் முயற்சி தொடரும்: - துணைவேந்தர் சூரப்பா.
தன்னிச்சையாக அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் செயல்படுகிறார் - அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் அறிக்கை விடும் நிலையில், என் முயற்சி தொடரும் என்பது - தலைவர்களின் அறிக்கைக்கு எதிர்ப்பான போக்காகும். இவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோதே பிரச்சினை வெடித்தது - மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் ஆதரவால் 'சூரத்தனம்' காட்டுகிறார் சூரப்பா - 'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது எங்கள் நாட்டுப் பழமொழி.
மட்டத்தில்
உசத்தி!
இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 66 ஆயிரமாகக் குறைந்தது.
ஓ, மட்டத்தில் உசத்தி என்பது இதுதானோ!
நம்பிக்கை விடயம் என்று நீதிமன்றம் கூறும்!
3200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட கடின இரும்பை ஒரு நொடியில் உருக்கி, வாயுவாக மாற்றும் ஆற்றல் கொண்ட புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - 'வாஸ்ப் 189-பி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
''அதெல்லாம் கிடையாது. எங்கள் ஜோதிடத்தில் நவக்கிரகம் - (9 கிரகம்) என்றுதான் சொல்லப்பட்டுள்ளது'' என்று ஜோதிடர்கள் சுப்ரீம் கோட்டுக்குச் செல்லலாமே! சுப்ரீம் கோர்ட்டும் நம்பிக்கை விடயத்தில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அது எங்கள் அக்னி பகவான் என்று ஸ்தலப் புராணம் எழுதிவிடுவார்கள்!
நட்சத்திரமான சூரியனை 'கோள்' என்று பிதற்றும் ஜோதிடத்தை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது- இதில் கம்ப்யூட்டர் ஜோதிடம் வேறு!
ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுகிறவன் இருக்கத்தான் செய்வான் என்கிறீர்களா - அதுவும் 'சரி'தான்.
No comments:
Post a Comment