குழந்தைகளுக்குத் தேவை இசைப் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

குழந்தைகளுக்குத் தேவை இசைப் பயிற்சி


 குழந்தைகளுக்குக்  கொடுக்கப்படும் இசை தொடர்பான பயிற்சி அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.


விருப்பப்பட்ட இசைக்கருவிகளை இசைக்க குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது அவர்களது மூளையின் நினைவுப்பகுதிச்  செயல்பாடுகளில் வியக்கத்தகு அளவு மாற்றம் நடைபெறுவதைப் புதிய ஆய்வுகளில் கண்டு பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் குழந்தைகளின்  வாசிப்புத்திறன் அதிகரிப்பு, விரைந்து முடிவெடுத்தல் மற்றும் புதிர்களுக்கு விரைவில் விடைதருதல் போன்றவை அதிகரித்துள்ளன,


  இசைப்பயிற்சியின் போது இரண்டு வெற்றிகரமான செயல்பாடுகள் மூளையில் நடக்கின்றன. விருப்பமான இசையைக் கற்கும் போது நினைவுப்பகுதியின் ஆற்றல் அதிகரிக்க இந்தச் செயல்பாடுகள் உதவுகின்றது.


இது தொடர்பான ஆய்வுகளை சிலியில் உள்ள பொடன்சியல் கத்தோலிக்கப் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.


புதிய இசைகளைக் பயிலும் போது மூளை அதனை அறிந்துகொண்டு,  அதன் ஓசை,  அதன் மூலம்  எழும்பும் அதிர்வலை,  போன்றவற்றைக் கணக்கிட்டுக் கொள்கிறது, பின்னர் குறிப்பிட்ட நுணுக்கமான செயல்பாடுகள் (மெக்கானிசம்) மூலம் அவற்றை ஒருங்கிணைத்து நினைவுத்திறனை அதிகரிக்கும் வகையில் செயல்படுகிறது, இந்த நுட்பமான மாற்றத்தை இசையைக் கற்கும் குழந்தைகளிடம் கண்டறிந்துள்ளனர்.


ஆய்வாளர்கள் இசையைக் கற்கும் 10 முதல் 13 வயது உடையவர்களில் 40 பேரைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.


 இதில் 20 பேர் அவர்களுக்கு விருப்பமான இசைப்பயிற்சியை மேற்கொண்டனர். நாள்தோறும் இரண்டு மணி நேரம் அவர்கள் இசையைக் கற்றார்கள். மேலும் இவர்கள் அப்பகுதியில் இயங்கும் இசைக் கச்சேரிகளில் இசைக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.


இதில் அடுத்து 20 பேர் இசையைக் கற்காமல் பள்ளிகளில் இதர செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். முடிந்தவரை இசைப் பயிற்சியிலிருந்து விலகியே இருந்தனர்.


 இவர்களில் இசையை தினசரி பயின்றவர்களின் நினைவுத்திறன் மேம்பட்டு காணப்பட்டது. முன்பு இருந்ததை விட,  புரிந்து கொள்ளும் திறன் எதையும் தெளிவுபடப் பார்க்கும் திறன் போன்றவையும் அதிகரித்திருந்தன.


அதே நேரத்தில் இரண்டு பிரிவு சிறுவர்களிடமும் அவர்களின் மூளைப் பகுதியில் பாயும் இரத்த ஓட்ட அளவு மற்றும் மூளையில் பரிமாற்றப்படும் மின்காந்த ஆற்றல் போன்றவற்றில் மாற்றங்கள் வேறுபட்டு காணப்பட்டது.


 அதே நேரத்தில் இரண்டு பிரிவு மாணவர்களின் பொதுவான நடத்தைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் இசையைக் கற்ற மாணவர்களிடம் நினைவாற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் முன்பிருந்ததை விட அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இசை அதிர்வலைகள் மூளையில் உள்ள சிக்கலான தகவல் கடத்தல் உறுப்புகளை மேம்படுத்துகின்றன என்பதையும் கண்டறிந்துள்ளதாக அந்த ஃப்ரொண்டியர் இன் நியூரோசைன்ஸ் என்ற இதழில் தங்களது ஆய்வுக் கட்டுரையின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.   


No comments:

Post a Comment