(கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் அளவுக்கு, நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி மைனஸ் 23 சதவிகிதம் அளவில் வீழ்ச்சி அடைவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட தவறான பொருளாதார செயல்பாடுகளே காரணம் என்று எதிர்க் கட்சியினர் நம்புகின்றனர்.)
பீகார் மாநிலத்தில் அரசியல் கள நிலவரம் கடந்த சில மாதங்களில் பெரிய அளவுக்கு மாற்றம் அடைந்திருக்கிறபடி யால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்த லில் அரசியல் கட்சிகளின் பலத்தை மதிப்பீடு செய்வதற்கு, கடந்த ஆண்டு நடந்தேறிய பொதுத் தேர்தலை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம்- இடது சாரி கூட்டணி கட்சிகள் வாதாடுகின்றன.
இம்முறை பிரதமர் மோடியின் வெகுஜன ஆதரவு கூட தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளதென்று எதிர்க் கட்சிக் கூட்டணி நம்புகிறது.
பொருளாதார செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுத்தியது , கோவிட்-19 காரணமாக அறிமுகப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவை மோடி யின் நிர்வாகத் திறமை இன்மையை வெளிப்படுத்திவிட்டதை யடுத்து பீகார் மாநில வாக்காளர்கள், மோடி அளித்த உறுதி மொழிகளுக்கும், அவற்றில் அவர் நிறைவேற்றிய உறுதி மொழிகளுக்கும் இடையே உள்ள மாபெரும் வேறுபாட் டைப் பற்றி மனம் வெறுத்துப் போயுள்ளனர் என்பதை அண்மைக்கால நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுவதாக காங் கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணியினர் கூறுகின்றனர்.
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் நிதிஷ் குமாரால் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல என்றும், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தான் அளித்திருந்த உறுதிமொழி நிறைவேற்றுவதற்கு மோடி எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் வாதாடுகின்றனர்.
நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி மைனஸ் 23 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் அளவுக்கு திறமையின்றி மோடியினால் தவறாகக் கையாளப்பட்டிருந்த பொருளாதார செயல்பாடு கள் நாட்டில் இருந்த கோடிக் கணக்கான வேலை வாய்ப்பு களை அழித்துவிட்டன என்று எதிர்க்கட்சியினர் நம்பு கின்றனர்.
அரசுத் துறையில் 4 . 5 லட்சம் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு நிச்சயமாக நிதிஷ் குமாரே பொறுப் பாவார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் டெலிகிராப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டு காலத்தில் உற்பத்தி அல்லது சேவைத் துறைகளில் ஒரே ஒரு பெரிய தொழிற்சாலை கூட தொடங் கப்படவில்லை. கடற்கரையின்றி பீகார் மாநிலம் நிலத்தினால் சூழப் பட்டுள்ளது என்று நிதிஷ் கூறும் காரணம், மக்களது காயங்களின் மீது உப்பை வைத்துத் தேய்ப்பது போல இருக்கிறது. பீகாரை விட முன்னேற்றம் அடைந்துள்ள ராஜஸ்தான், டில்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கடற்கரை உள்ளதா? என்று அவர் கேட்கிறார்.
மேலும், கல்வி கற்கும் உரிமை திட்டத்துக்காக பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.26,500 கோடி நிதியை செலவிடாமலேயே நிதிஷ் குமார் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 1,550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், அனல்மின் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட 16,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன என்று வல்லப் கூறினார். பல தலைப்புகளில் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ஒன்று பயன்படுத்தப்படாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது அல்லது பயன்படுத்தப் படா மல் உள்ளது என்பதால் வேலையில்லா திண்டாட்டத்துக்கு நிதிஷ் குமார் நிச்சயமாக பொறுப்பானவரே என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து அவர் மேலும் கூறுவதாவது : நிதிஷூக்கு உள்ள பொறுப்பை விட மோடிக்கு பொறுப்பு அதிகமாகவே உள்ளது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மோடி நாட்டின் பொருளாதார நிலையையே பாழாக்கிவிட்டார். 2016 ஆம் ஆண்டில் 8.3 சதவிகித அளவில் இருந்த ஜி.டி.பி.யின் வளர்ச்சி 4.2 சதவிகிதம் என்ற நிலையில் 2020 ஆம் ஆண்டுதொடக்கத்தில் வீழ்ச்சி அடைந்தது. அதற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட அர்த்தமே அற்ற ஊரடங்கு சட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மைனஸ் 23 சதவிகித அளவுக்கு வீழ்ச்சி அடையச் செய்துவிட்டது.
நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதில் மோடிக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று வல்லப் மோடி மீது குற்றம் சாட்டுகிறார்.
நாடு முழுவதிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் 358 அறிவிக்கப்பட்ட பொருளாதார மண்டலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட பீகார் மாநிலத்தில் இல்லை. உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் தோட்டக் கலைக்கு பீகார் மாநிலத்தில் பெருமளவு வாய்ப்பு உள்ள போதிலும், இது காலம் வரை ஒரே ஒரு தொழிற்சாலை கூட பீகாரில் தொடங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
தனிப்பட்டவர்களின் முதலீடு பீகாருக்கு ஏன் வர வில்லை என்று மோடியும், நிதிஷ் குமாரும் விளக்கம் அளிக் கட்டும். இத்தகைய அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக அவர்கள் மக்களை முட்டாள்களாக ஆக்க முயல்கின்றனர்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற மகாராட்டிரா, ஜார்கண்ட், டில்லி, அரியானா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் புள்ளி விவரங்களை சுட்டிக் காட்டி, மோடி யின் வெகுஜன ஆதரவு குறைந்து வந்து கொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார்.
2019 மக்களவை தேர்தலுக்குப் பிறகு, 330 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும் 51 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது. 2019 பொதுத் தேர்தலில் இத் தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்று ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.இந்த 381 சட்டமன்றத் தொகுதிகளில், 319 தொகுதிகளில் மக்களவை தேர்தலின் போது பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். 2019 மக்களவை தேர்தலுக்குப் பின் நடந்த இடைத் தேர்தல் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தலில் இந்த 381 சட்டமன்ற தொகுதிகளில் 163 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.யை தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? பா.ஜ.க.யைத் தங்களால் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க் கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் 2019 கோடையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அங்கிருக்கும் 7 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஆனால், மிகப் பெரிய அளவில் பணத்தையும் அதிகாரத்தையும் செலவழித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட போதிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டில்லி சட்டமன்றத் தேர்த லில், டில்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது.
பீகாரில் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.-அய்க்கிய ஜனதா தளம்- எல்.ஜே.பி. கூட்டணி அனைத்து தொகுதிக ளிலும் வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.
தங்களது ஆட்சிகளின் சாதனைப் பட்டியலை முன்னி லைப்படுத்த பா.ஜ.க. மற்றும் அய்க்கிய ஜனதா தள கட்சிகள் முயன்று வருகின்ற போதிலும், ஆட்சி செய்யும் கட்சிக்கு எதிரான மக்களின் மன நிலை பீகார் முழுவதிலும் பெரு மளவில் நிலவி வருவதால், பீகார் மாநில சட்டமன்றத் தேர்த லில் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவர்களின் கனவு பலிக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
அரசின் சாதனைகளைப் பற்றி பேசி வாக்காளர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மாறாக, லாலு ஆட்சியின் போது பீகாரில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் மோசமான நிலையில் இருந்ததைப் பற்றிய நினைவுகளை மீண்டும் இப்போது பேசும் அளவுக்கு மோடிக்கு தனது ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை என்பது பரிதாபத்துக்கு உரியதே.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்களின் கவனத்தை வேலையில்லா திண்டாட்டம் போன்ற மக்களின் வாழ்வாதா ரப் பிரச்சினைகளில் இருந்து, புல்வாமா சோக நிகழ்ச்சி மற்றும் அரசமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவு நீக்கப் பட்டது போன்ற உணர்ச்சி மயமான செய்திகளுக்கு திசை திருப்புவதற்கு முயல்வதாக மோடியின் மீது பீகார் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுவின் தலைவர் ரண்தீப் சூரஜ்வாலா கூறுகிறார். மோடி அவர்களே, இன்னமும் எவ்வளவு காலத் துக்கு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டும், சாக்கு போக்குகளைக் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டும் இருக்கப் போகிறீர்கள்? என்று அவர் கேட்கிறார்.
பீகாரில் உள்ள இரண்டு என்ஜின் கொண்ட அரசு உண் மையில் இரட்டை மோசடி அரசேயாகும். ஒன்று மக்களை ஏமாற்றும் நிதிஷ் அரசு. மற்றொன்று இரட்டை நாக்குடன் பேசும் மத்திய அரசு என்று அவர் கூறுகிறார்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைப் பற்றி பேசியபோது, முசாபூர் மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன் கொடுமை நிகழ்ச்சியில் அடிபட்ட மஞ்சு வர்மாவின் பெயரை விட அதிக அளவில் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் பெயர் வேறு ஏதாவது இருக்கிறதா?
அந்த பாதுகாப்பு மய்யத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளானது பற்றி அறிக்கைகள் வெளிவந்த பிறகு 2018 ஆம் ஆண்டில் பீகார் மாநில சமூக நலத் துறை அமைச்சராக இருந்த மஞ்சு வர்மா அப்போது பதவி விலகினார்.
எந்த விதத் தூண்டுதலும் இன்றி, துர்கை பக்தர்கள் மீது தாக்குதலும், துப்பாக்கிச் சூடும் நடத்தப் பட்டதை விட அதிக அளவிலான சட்ட ஒழுங்கு சீர்குலைவு வேறு எது உள்ளது? மோடியின் புகைப் படத்தைக் காட்டி, நிதிஷ் குமாரை சிறைக்கு அனுப்புவதாக எல்.ஜி.பி. கட்சியின் சிரக் பஸ்வான் அச்சுறுத்தியதை விட அதிக அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி வேறு ஏதேனும் உள்ளதா? என்று வல்லப் கேட்கிறார்.
அக்டோபர் 26 அன்று துர்கா உருவ பொம்மையை நீர்நிலையில் கரைப்பதக்குச் சென்ற ஊர்வலத்தில் இருந்த மக்கள் மீது மூங்கரில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பதின்மவயது இளைஞன் இறந்து போக, வேறு பலர் காயமடைந்தனர். தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பதற்கு முன் அந்த இடமே ஒரு சிறு போர்க்களம் போலவே தோற்றமளித்தது.
நன்றி: 'தி டெலிகிராப்', 02-11-2020
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment