தோழர்களே! தமிழ்நாட்டின்  ‘இஸ்காரா' ‘விடுதலையே!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 11, 2020

தோழர்களே! தமிழ்நாட்டின்  ‘இஸ்காரா' ‘விடுதலையே!'


மறைந்தும் மறையாமல் நம் நினைவில் நிற்கும் மூத்த பத்திரிகையாளர் - சுதந்திர சிந்தனையாளர் சோலை அவர்கள் ஒருமுறை எழுதினார்:


ரஷ்யப் புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர் வாளாக இருந்தது ‘இஸ்காரா!'


‘இஸ்காரா' என்றால் ‘தீப்பொறி' என்று பொருள். இதனை ஒப்பிட்டு எழுத்தாளர் சோலை குறிப்பிட்டார்.


‘‘சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருப்பது ‘விடுதலை!'


‘இஸ்காராவின்' பணி முடிந்துவிட்டது. ஆனால், ‘விடுதலை'யின் பணி - காலத்தின் தேவையாகத் தொடர்கிறது - இனியும் தொடரும்!


எழுபத்தைந்து கடந்தாலும் நம் ஆசிரியர் தமிழர் தலைவர் தளராத நடைபோட்டு இன்னும் தாவித் தாவிதான் வருகிறார். தன் நெஞ்சக் கூட்டுக்குள் அவர் வளர்க்கும் ‘விடுதலை'யும் அதற்கு விதி விலக்கல்ல!


அந்தக் காலக் கண்ணாடியும் எழுபத்து நான்கு (2009 இல் எழுதப்பட்டது இது) வயது நிறைவு பெற்று, எழுபத்து அய்ந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது. இளமை மாறாத அக்னிக் குஞ்சிற்கு இவ்வளவு வயதா? எண்ணிப் பார்க்கும்போது வியப்பாகவும் இருக்கிறது - மலைப்பாகவும் இருக்கிறது.


‘விடுதலை'யோடு பிறந்த பல ஏடுகள் பணி முடித்துக் கண்மூடி விட்டன. பல ஏடுகள் பாதி வழியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டன.


ஆனால், ‘விடுதலை' மட்டும் இன்னும் வீறுநடை போடுகிறது, ஏன்?


என்ன காரணம்?


அன்றைக்கு  அய்யா பெரியாருக்கு அதுவே கைத்தடி!''


என்று   இன்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன் மூத்த எழுத்தாளர் சோலை - சோலை எனும் பூக்காட்டின் மணத்தோடும், மனத்தோடும் எழுதினார்.


ஆம்!  அன்றும், ஏன் இன்றும் ‘விடுதலை'க்கு வேலை இருக்கிறது. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இது புகுந்து ‘ரசாயன' மாற்றங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.


இளைஞர்களின் மத்தியில் இன உணர்வுத் தீப் பொறியை மேலும் ஊட்ட வேண்டிய உடனடி கடமையும் இருக்கிறது.


அரசியல்புரத்தில் அடிப்படைக் கல்வியின் ஒளி யைப் பாய்ச்ச வேண்டிய பணியும் நிரம்பவே இருக்கிறது.


‘‘திராவிடத்தின்'' தீரமிகு சித்தாந்தங்கள் போய்ச் சேராத இடங்களைத் தேடித் தேடிச் சென்று போதிக்கும் ‘போதி மரம்' நமது ‘விடுதலை!'


எனவே, தோழர்களே, ‘விடுதலை', ‘விடுதலை' என்று நாம் இழுத்து விடும் ஒவ்வொரு மூச்சு இழையும் முரசொலிக்கட்டும்! முரசொலிக்கட்டும்!!


வணிக நோக்கமல்ல - வணிக நோக்கமாகக் கிடக் கும் பல துறைகளையும் பழுது பார்க்கும் மகத்தான கடமை ‘விடுதலை' என்னும் நமது அய்யாவின் போர் வாளாம் ‘விடுதலை'க்கு அதிகமாகவே இருக்கிறது.


ஒவ்வொரு இரவும் நாம் தூங்கும்போது - படுக்கையில் தலையைச் சாய்க்கும்போது - ‘விடுதலை'க்கு எத்தனை சந்தாக்களை இன்றைக்குச் சேர்த்தோம் என்று போடும் கணக்கைப் பொறுத்து, நம் நித்திரை நிம்மதியாக இருக்கவேண்டும்.


நமது தலைவர் ஆசிரியரின் 88 ஆம் ஆண்டில்  நாம் கொடுக்கவிருக்கும் ‘விடுதலை' சந்தாவின் எண்ணிக்கை - அவர் தம் நூற்றாண்டில் நாம் கொடுக்கும் ‘கைக்குலுக்கலாக' இருக்கவேண்டும்.


‘‘நம்மால் முடியாதது - வேறு யாராலும் முடியாது!''


இது வெறும் வார்த்தை  அல்ல - நம் வேகத்தை உசுப்பிவிடும் தன்னம்பிக்கையின் தணல்!


‘விடுதலை' இன்றேல் தமிழர் வாழ்வுக்கு வேறு உத்தரவாதம் ஏது?


விரைவோம் ‘விடுதலை' சந்தா எனும் வினை முடிப்போம்! முடிப்போம்!!


 


No comments:

Post a Comment