செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, டிச.24 தந்தை பெரியாருடைய தாக்கம் எப்பொழுதும் இருக்கும்; தி.மு.க. தலைவரின் ‘‘மிஷன் 200'' திட்டம் வெற்றியடைய உழைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
தந்தை பெரியார் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2020) சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) உள்ள பெரியார் சிலைக்கு மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
பெரியாருடைய தாக்கம் எப்பொழுதும் இருக்கும்
பகுத்தறிவு பகலவன் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 47 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று - இது ஒரு வரலாற்றுக் குறிப்பே தவிர, மற்றபடி தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், எதிர்க்கட்சிகள் உள்பட பலருடைய தாக்கத்திலும், பெரியாருடைய தாக்கம் என்பது எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக் கிறது.
பெரியாரை யாரும் மறந்தவர்கள் இல்லை. என்றாலும், இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில், திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல, தமிழர்கள், திராவிடர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு உறுதியை ஏற்கக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த மண்ணை கவ்வி இருக்கக்கூடிய காவி புகை மண்டலத்தை விரட்டவேண்டும் என்பதுதான் அந்த உறுதி.
தி.மு.க. கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறவேண்டும் என்ற அளவில் உழைப்போம்!
நிச்சயமாக, வருகின்ற தேர்தல் என்பது வெறும் அரசியல் பார்வையோடு இல்லாமல், சமூகநீதியைக் காப்பாற்றுவதற்காகவும், மதச்சார்பின்மையை போற்று வதற்காகவும், அதேபோல, அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், ஊழல் ஒழிந்த ஒரு நேர்மையான ஆட்சி - அதுவும் மக்களுக்காகத் தியாகம் செய்து - பல்வேறு சிறைச் சாலைகளுக்குச் சென்று, மக்களுடைய உரிமைகளுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ, அப் பொழுதெல்லாம் போராட்டக் களத்திலே நின்று, வென்று மக்களோடு இருப்பவர்கள் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பானதொரு தேர்தல் ஆகும். அண்மையில்கூட, மத்திய அரசின் விவசாய விரோதப் போக்குச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பதற்காகப் போராட்டக் களத்தில் நிற்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் - மறுபடியும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற உறுதியை இந்த நாளில், திராவிடர் கழகம் மட்டுமல்ல - திராவிட இன உணர்வாளர்கள், நியாயத்தை உணரக்கூடியவர்கள் - ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் - சமூகநீதிக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள் ஏற்கின்ற ஓர் இலட்சிய நாளாகும். எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற அறிஞர் அண்ணா, அதற்கு முன்பு கல்வி வள்ளல் காமராசர், கலைஞர் போன்றவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ, அந்த உணர்வைப் பெருக்கவேண்டும், பாதுகாக்கவேண்டுமானால், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் - மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறவேண்டும் என்ற அளவில் உழைப்போம்.
‘‘மிஷன் 200'' திட்டம் வெற்றியடையச் செய்வோம்!
கூட்டணியின் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். ‘‘மிஷன் 200'' - அந்த இலக்கினையும் தாண்டி வெற்றியை மக்கள் தருவார்கள். காரணம், அவர்களைத் தவிர விடியலை ஏற்படுத்துவதற்கு, இந்த நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் வருகின்ற தேர்தலில் யாருமே இல்லை.
எனவே, தேர்தல் என்பது வெறும் அரசியல் நடவடிக்கையல்ல, நம்மைப் பொறுத்தவரையில், தலைமுறையை மாற்றக் கூடியது. நம்முடைய தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் இன்றைக்கு அழிக்க நினைக்கும் சக்திகளை விரட்டுவோம் என்ற உறுதியை, பெரியார் நினைவு நாளில் சூளுரையேற்போம்.
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!
திராவிடம் வெல்லும்!
திராவிடம் வெல்லும்!!
திராவிடம் வெல்லும்!!!
நன்றி, வணக்கம்
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment