தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை கோட்டையில் அமர வைப்போம் - திராவிடம் வெல்லும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பட்டினிப் போராட்டத்தில் நிறைவுரை
சென்னை, டிச.19 நம்முடைய அருமை சகோதரர் தளபதி ஸ்டாலின் அவர்கள், எந்தப் போராட்டமாக இருந்தாலும், அவர் வந்தார், கண்டார், நடத்தினார், வெற்றி பெற்றார் என்பதுதான் வரலாறாக இன்றைக்கு இருக்கிறது. இந்த வரலாறு இன்னும் நான்கு மாதங்களில், கோட்டையில் அவரை அமர வைத்துப் பார்க்கக் கூடிய திருப்பமாக அமையக் கூடிய வரலாறு என்பதற்கு இது மிக முக்கியமான ஒரு கட்டம் - திராவிடம் வெல்லும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டில்லியில் கடந்த 22 நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (18.12.2020) சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட் டத்தை முடித்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவர் ஆற்றிய உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், மிகப்பெரிய வரலாற் றைப் படைக்கக் கூடிய வகையிலும், இந்திய நாடு இதுவரை காணாத ஒரு வரலாற்றை பஞ்சாபிலிருந்து, வடபுலத்திலிருந்து விவசாயிகள் கடந்த 23 நாள்களாக டில்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டத்தினை ஆதரிப்பதற்காக, கடந்த மூன்று நாள்களுக்குமுன் முடிவெடுத்து, இந்தக் கட்டுப்பாடு மிகுந்த பட்டினிப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து காலை 8 மணியிலிருந்து இப்பொழுதுவரையில் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும், நம்முடைய நன்றிக்கும், பாராட்டதலுக்கும் உரிய அருமைச் சகோதரர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,
ஒருமித்த குரல்!
இப்பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து ''நாங்கள், இணைந்து இருக்கிறோம்; எங்களை அசைக்க முடியாது என்று ஒருமித்து குரல் கொடுத் திருக்கிறார்கள்.
எதற்காக நாம் இங்கே சேர்ந்திருக்கிறோம் என்றால், பதவிக்காக அல்ல - இந்த நாட்டின் ஜன நாயகத்தைக் காப்பாற்றுவதற்காக- மதச்சார்பின் மையைக் காப்பாற்றுவதற்காக- சமூகநீதியைக் காப்பாற்றுவதற்காக என்பதை இங்கு தெளிவாகப் பிரகடனப்படுத்தி, காலையிலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் மிகத் தெளிவாக உரையாற்றுவதை தொலைக்காட்சியில் நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
நம்முடைய அருமை சகோதரர் வைகோ அவர் கள் உள்பட அனைத்துத் தலைவர்களும் எல்லா வகையான திட்டங்களையும் இங்கே சொன்னார்கள்.
தளபதி வந்தார் - கண்டார் - நடத்தினார்
- வெற்றி பெற்றார்!
ஜூலியட் சீசரைப் பற்றி சொல்லுகிறபொழுது, அவர் எப்படி ரோமை அடைந்தார் என்று சொல்லு கிறபொழுது, ''Veni, Vidi, Vici'' என்று மூன்றே வார்த்தைகளில் வந்தார் என்று சொல்வதைப்போல,
நம்முடைய அருமை சகோதரர் தளபதி ஸ்டாலின் அவர்கள், எந்தப் போராட்டமாக இருந் தாலும், அவர் வந்தார், கண்டார், நடத்தினார், வெற்றி பெற்றார் என்பதுதான் வரலாறாக இருந்து வருகிறது.
இந்த வரலாறு இன்னும் நான்கு மாதங்களில், கோட்டையில் அவரை அமர வைத்துப் பார்க்கக் கூடிய திருப்பமாக அமையக் கூடிய வரலாறு என்பதற்கு இது மிக முக்கியமான ஒரு கட்டம்.
விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் நிலை!
எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இராணுவத் துறையின் பெருமைகளைப்பற்றி சொல்லுகிறாரே, பிரதமர் மோடி, ஆனால், அதேநேரத்தில், 25 ஆயிரம் இராணுவ வீரர்கள் தங்களுடைய வெற்றியைக் கொண்டாடினார்கள். அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வெற்றி விழாவை கொண்டாடுகிறார். அப்பேர்பட்ட இராணுவ வீரர்களுக்குக் கொடுக்கப்படும் மிகப் பெரிய உயரிய விருதுகளை, மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த விருதினை, அந்த இராணுவ வீரர்கள் திருப்பிக் கொடுக்கக் கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.
எனவேதான் நண்பர்களே, நாம் நடத்துகின்ற இந்த மிகப்பெரிய பட்டினிப் போராட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடத்தியி ருக்கிறீர்கள். அதற்காக திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை நமது போராட்டம் தொடரும்!
இந்தப் போராட்டம் வெறும் விவசாயிகளுக்காக மட்டுமல்ல; அதையும் தாண்டி, திரிசூலத்தைக் கொண்டு வருகிறதே, மதக் கூட்டம் - காவிக் கூட்டம்.
அந்தத் திரிசூலத்தின் ஒரு முனை, விவசாயிகளை நோக்கி,
இன்னொன்று ஜனநாயகத்தினை நோக்கி,
மூன்றாவது, அரசமைப்புச் சட்டம், மாநில உரிமைகளை நோக்கி,
மேற்கண்ட மூன்றையும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தப் பட்டினிப் போராட்டமாகும்.
காலையில், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் போராட்டம் இன்றோடு முடிவதல்ல; மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நம்முடைய போராட்டம் தொடரும் என்று சொன்னார்..
இங்கே அதையே வழி மொழிந்தார்கள். வழிமொழிந்தவர்களையும் வாழ்த்தி, என்றைக்கும் ஒன்றாக இருப்போம் என்று சொல்லி, அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம் என்று சொல்லி, இந்தப் பட்டினிப் போராட்டத்தினை முடித்து வைப்பதில் பெருமை கொள்கிறோம்.
திராவிடம் வெல்லும்!
எனவேதான், இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, இறுதிவரையில், இந்தச் சட்டங்கள் தொலைக்கப்படும் வரையில், ஒழிக்கப்படுகின்ற வரையில் ஒன்றுபட்டு உழைப்போம், எதிர்ப்போம்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
என்பதைப்போல, முடியும் என்று கூறி,
நிச்சயம் இந்த அணி வெல்லும்!
திராவிடம் வெல்லும்!
திராவிடம் வெல்லும்!!
திராவிடம் வெல்லும்!!!
திராவிடம் என்பது ஜனநாயகம்!
திராவிடம் என்பது சமத்துவம்!
திராவிடம் என்பது வெற்றி, வெற்றி என்று கூறி,
இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் கூறி, இப்போராட்டத்தினை முடித்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
சிறப்பாக ஏற்பாடு செய்த அத்துனை பேருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்!
இது தொடரட்டும், நம்முடைய முழக்கம் பரவட்டும்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட்டத்தினை முடித்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment