கடந்த 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் நிறைவு தீர்மானம் அடுத்து நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்ததாகும்.
"தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 மே மாத வாக்கில் நடக்கக் கூடும். ஆதலால், இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையவேண்டியது - தமிழ்நாட்டு மக்களுக்கும், சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்பதற்கும், மாநில உரிமைகளை மீட்பதற்கும், இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு போன்ற பண்பாட்டுப் படையெடுப்புகளை முறியடிப் பதற்கும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் முறியடிப் பதற்கும் மிகவும் அவசியம் என்பதால், தி.மு.க. - அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வெற்றி பெறச் செய்வதற்கான ஆயத்த அடிப்படைப் பணிகளை இப்பொழுது முதற்கொண்டே மேற்கொள்ள வேண்டுமாய் கழகத் தோழர்களை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இதற்கான பிரச்சாரத் திட்டத்தை வகுத்துச் செயல் படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது."
நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது -வேறு எப்பொழுதும் நடைபெற்ற தேர்தலைவிட மிகவும் முக்கியமானது.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இத்தேர்தலை தமிழ்நாட்டு வாக்காளர் பெரு மக்கள் கருத வேண்டும்.
நூறாண்டு வரலாறு படைத்தது திராவிட இயக்கம் இந்நாள்கூட முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் நீதிக்கட்சி அமைச்சரவை இந்நாளில்தான் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்தது. (17.12.1920)
அந்தத் திராவிட இயக்க உண்மையான வாரிசு என்பது அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகமே!
திராவிடர் என்ற பெயரையும், நீதிக்கட்சியின் பொதுச் செயலாள ராக இருந்த அண்ணாவின் பெயரையும் கட்சியில் தாங்கியுள்ள அண்ணா தி.மு.க. என்பது அப்பட்டமாக இந்த இரு பெயர்களையும் அவமானப்படுத்தியும், அடிப்படைக் கொள்கைகளைக் குழி தோண்டியும் புதைப்பதானது நம் இனத்துக்கு இரண்டகம் செய்யக் கூடியதாகும்.
மதச் சார்பின்மை, சமூகநீதி ஆகிய திராவிடர் இயக்கக் கொள்கையை ஆணி வேரோடு வீழ்த்திட ஆவேசமாகப் புயலாகப் புறப்பட்டு இருக்கும் மத்திய பிஜேபி ஆட்சிக்கு ஆலவட்டம் சுழற்றும் அடிமை ஆட்சியாகும்.
வார்த்தைக்கு வார்த்தை புரட்சித் தலைவி என்றும், அம்மா ஆட்சி என்றும் கூறிக் கொண்டிருக்கும் அண்ணா திமுக ஆட்சி, அந்த அம்மா கட்டிக் காத்தவற்றைக்கூட நட்டாற்றில் விட்டு, சுய பாதுகாப்பைத் தேடுவதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக சமூகநீதி என்பது திராவிட இயக்கத்தின் ஆணிவேர் கொள்கையாகும். 1921ஆம் ஆண்டிலேயே இடஒதுக்கீட்டுக்காக ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சியே!
ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது மத்திய பிஜேபி ஆட்சி கொண்டு வந்த நீட் தேர்வை தடுத்து நிறுத்தினார். ஆனால் பின் வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான ஆட்சி நீட்டை எதிர்த்து இரு மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றிக் கொடுத்தும்கூட அதனைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத வக்கற்றதானது. இவ்வளவுக்கும் இன்றைய மத்திய பிஜேபி ஆட்சியிடம் அட்டியில்லாமல் அடுகிடையாக சரணடைந்த கூட்டணி கட்சியாகும்.
மத்தியில் பல சட்டங்களை பிஜேபி ஆட்சி நிறைவேற்றிட அவற்றிற்கு ஆதரவு அளிக்கும் கால கட்டத்தில் 'நீட்' ஒழிப்பை நிபந்தனையாகக்கூட வைத்திருக்கலாமே.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்திருக்குமேயானால் நீட்டை நுழைத்திருப்பார்களா? இந்தி - சமஸ்கிருதம்தான் வாலாட்டுமா? தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அளிக்கும் தைரியம் தான் வந்திருக்குமா?
தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வந்து தன்னிச்சையாக மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்யத்தான் முடியுமா? ஆளுநர் தான் தன்னிச்சையாக மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட ஆட்சியாளர்களை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைதான் நடத்த முடியுமா?
மத்திய - நிதி அமைச்சரை - தமிழகத்தில் துணை முதல் அமைச்சர் சந்திக்க டில்லி செல்லுகிறார் - எவ்வளவு ஆணவம் இருந்தால், மத்திய அமைச்சர் தமிழக துணை முதல் அமைச்சரை சந்திக்க மறுத்திருப்பார்?
அதைவிட தமிழக அமைச்சரவை எந்த அளவு சரணாகதி தன்மை உடையதாக இருந்திருந்தால், ஒரு துணை முதல் அமைச்சரை மத்திய அமைச்சர் உதாசீனம் செய்திருப்பார்?
மாநில சுயாட்சிக்காக இராணுவத்தைச் சந்திப்பேன் என்றுகூட திமுக மாநாட்டில் திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். சொன்னதுண்டே!
'புரட்சித் தலைவர் புரட்சித் தலைவர்' என்று மந்திரம் ஜெபித்தால் போதுமா?
மாநிலத்தில் உள்ள ஆட்சி கோட்பாடு கொண்ட அரசாகவும், மாநில உரிமைகளை எந்த விலை கொடுத்தும் காப்பாற்றும் திராணி உள்ள அரசாகவும் இருக்குமானால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இங்கு விளையாடித்தான் பார்க்குமா?
அதுவும் பெரியார் பூமியில் மதவாத நச்சு விதைகளைத் தூவக் கனவுதான் கண்டு இருக்குமா?
எப்பாடுபட்டாலும் மீண்டும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம்; அது திமுகவுக்காக அல்ல; நாட்டுக்காக - நாட்டு மக்களுக்காக நூற்றாண்டு திராவிட இயக்கம் உருவாக்கி வைத்திருக்கும் சமூகநீதி மதச் சார்பின்மை என்னும் சேமிப்புகளைப் பாதுகாப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களிலும் இதே கவனம், இதே கடமை, இதே உழைப்பு இருக்கட்டும், இருக்கட்டும் வெல்க திராவிடம்!
No comments:
Post a Comment