நினைவேந்தலில் வெளிப்பட்ட நெஞ்சில் நிலைத்திருந்த நிகழ்வுகள்
நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த பி.தங்கப்பன் மற்றும் உரை ஆற்றிய பெருமக்கள் வெளிப்படுத்தும் துபியான்ஸ்கியுடனான நிகழ்வனுபவங்கள். இதோ சில:
* தமிழில் சரளமாக, தெளிவாகப் பேசக் கூடிய துபி யான்ஸ்கி, எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழுது அவரை சந்தித்து உரை யாடிய பொழுது, "ஜெயகாந்தன் அவர்களே, உங்களை அடுத்த முறை மருத்துவமனையில் நான் சந்திக்கக் கூடாது. விரைவில் நலம் பெற்று வீடு திரும்பிட எனது வாழ்த்துகள்" என தெளிவாக பேசியது கேட்டு ஜெயகாந்தன் அவர்களே மலைப்புடன் மகிழ்ந்தாராம்.
* துபியான்ஸ்கி இசை கேட்டிடும் ஆர்வம் உள்ளவர் மட்டுமல்ல; இசைக் கருவிகளைக் கையாளுவதிலும் புலமை பெற்றவர். 'பியானோ' இசைக் கருவியை நன்றா கவே வாசிப்பார். இசைஞானி இளையராஜாவின் இன்னி சையில் ஆழ்ந்து, ஒருமுறை இளையராஜாவை சந்திக்க துபியான்ஸ்கி சென்றிருந்தார். முதல் சந்திப்பில் ரஷ்ய நாட் டைச் சார்ந்தவர் என்பதால் "என்னுடைய இசையமைப்பு பாடல்களுடன் வந்த திரைப்படங்களை பார்த்திருக்கிறீர் களா?" என இளையராஜா அவரிடம் கேட்ட பொழுது துபியான்ஸ்கி சற்றும் தாமதிக்காமல், "சிகப்பு ரோஜாக்கள்" படம் பார்த்து ரசித்திருக்கிறேன்" எனக் கூறினார். அங்கி ருந்த 'பியானோ' இசைக் கருவியினை தான் வாசிக்க லாமா?" என இளையராஜாவிடம் கேட்டபொழுது "தாராள மாக" எனச் சொன்னாராம். துபியான்ஸ்கி உடனே அங்கிருந்த 'பியானோ' இசைக் கருவியில் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் இடம் பெற்ற "மின்மினிக்கு கண்ணில் ஒரு மின் னல் வந்தது" என்ற பாடலின் இசை வடிவத்தை வாசித்துக் காட்டினார். இதை சற்றும் எதிர்பாராத இளையராஜா மகிழ்ச் சியும், பெருமையும் கொண்டு துபியான்ஸ்கியை பாராட்டினார்.
* எளிமையை இயல்பாகவே கொண்ட துபியான்ஸ்கி ஒரு முறை சென்னை வந்தபொழுது அவரைச் சந்தித்த பி. தங்கப்பன், துபியான்ஸ்கியின் 'டி சர்ட்' சற்று கிழிந் திருப்பதைப் பார்த்தார். "நான் ஒரு 'டி.சர்ட்' தந்தால் போட்டுக் கொள்வீர்களா? என கேட்ட பொழுது மகிழ்ச்சியுடன் அதை வாங்கி அணிந்துகொண்ட துபியான்ஸ்கி "எனது உயிரைக் காப்பாற்றியவர்" என பி. தங்கப்பனைப் பார்த்துச் சொன்னார். பி. தங்கப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. டி.சர்ட் தந்ததற்கும் உயிரைக் காப்பாற்றியதாக கூறுவதற்கும் என்ன தொடர்பு என குழம்பி நின்ற நிலையில் துபியான்ஸ்கி சொன்னாராம்.
"ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு எனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தேன். நானே ஓட்டிச் சென்றேன். அப்பொழுது உங்களது கைப்பேசி அழைப்பு வந்ததால் காரை அப்படியே சாலையின் ஓரமாக நிறுத்தி அய்ந்து நிமிடம் பேசி விட்டு காரை கிளப்ப முயன்ற பொழுதுதான் சற்று தூரத்தில் தெரிந்தது - எதிரில் சாலையை மறித்து ஒரு பெரிய மரம் சாய்ந்து கிடந்தது. உங்கள் செல் பேசி அழைப்பு வராவிட்டால் நிச்சயம் அந்த மர இடிபாட்டில் சிக்கியிருக்கக் கூடும். அந்த வகையில் என் உயிரைக் காப்பாற்றியவர் நீங்கள்" என்று விளக்கியது கேட்டு தனது கைப்பேசி அழைப்பிற்குப் பின்னால் இப்படி ஒரு நிகழ்வா என தங்கப்பன் திகைத்தார்.
* 1977களில் தமிழ்நாட்டிற்கு சென்னைக்கு முதன் முறையாக வந்தார் துபியான்ஸ்கி. அப்பொழுது ரஷ்ய கலாச்சார மன்றத்தின் நூலகத்தில் பணிபுரிந்த டாக்டர் நளினி ரவீந்திரன் அவர்களுடன் நட்புடன் இருந்தார். பின்னர் நளினி அவர்கள் அந்தப் பணியினைவிட்டு வேறு பணிக்குச் சென்று விட்டார். இடையில் பல ஆண்டுகள் கடந்து விட்டன. பின்னர் தமிழ் உலகில் பரவலாக அறியப்படும் நிலைக்கு வந்திருந்த நிலையில் அண்மையில் சென்னைக்கு வந்த துபியான்ஸ்கியை பார்க்க நளினி சென்ற பொழுது, பல அறிஞர் பெரு மக்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நிலை கண்டு சற்று தயங்கி நின்றார். ஆனால் அந்தச் சூழலிலும் நளினி அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்து, "நளினி எப்படி இருக்கிறீர்கள்?" எனக் கேட்ட பொழுது டாக்டர் நளினி ரவீந்திரன் மெய் மறந்து போய் விட்டார்.
* மாஸ்கோ பல்கலைக் கழக வளாகத்தில் திருவள் ளுவர் சிலை அமைந்திட டாக்டர் சிவதாணுபிள்ளை அவர் களின் விருப்பத்திற்கு வடிவம் கொடுத்திட துபியான்ஸ்கி கடுமை யாக முயற்சி செய்தார். இன்றுவரை திருவள்ளுவர் சிலை வைப்பது முயற்சி நிலையிலேயே உள்ளது. மாஸ்கோ பல் கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்புவதன் மூலம் துபியான்ஸ்கியின் முயற்சிகளுக்கு பெருமை சேர்க்க முடியும் என டாக்டர் சிவதாணு பிள்ளை ஏக்கத்துடன் நினைவு கூர்ந்தார்.
No comments:
Post a Comment