நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மேனாள் தமிழ் துறைத் தலைவரும், சீரிய தமிழாராய்ச்சி அறிஞருமான தொ.ப. என்று அழைக்கப்படும் பேராசிரியர் மானமிகு தொ.பரமசிவன் அவர்கள் 24.12.2020 இரவு 7.30 மணியளவில் காலமானார் (வயது 70) என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், துன்பமும் அடைகிறோம்.
சிறந்த பெரியாரிய சிந்தனையாளர். மாணவப் பருவந்தொட்டே திராவிட இயக்கப் பற்றாளர். காரைக்குடியில் தந்தை பெரியாரை அழைத்து 1970களில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக நிகழ்ச்சியை நடத்தியவர்களுள் ஒருவர். பல வகை நூல்களை புத்தாக்கச் சிந்தனையோடு எழுதி, செம்மொழித் தமிழுக்கும், தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஒப்பற்ற இலக்கியத் தொண்டு புரிந்த மாமேதை ஆவார் பேராசிரியர் தொ.ப. அவர்கள்.
சில காலமாகவே அவர் உடல்நலம் குன்றி வீட்டிலேயே இருந்துவந்தார். அவரது மறைவு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; திராவிட சமுதாயத்திற்கும், தமிழ் இலக்கிய உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நம்மிடம் அன்பு கொண்டவர்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருக்கு அருகில் இருந்து உதவிய நண்பர் குழுவினருக்கும், நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தோ, ஒப்பற்ற ஒரு சிறந்த ஆய்வாளரைத் தமிழ் உலகம் இழந்து தவிக்கிறதே!
நமது வீரவணக்கம் அந்த மாமேதைக்கு!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.12.2020

No comments:
Post a Comment