மலேசிய திராவிடர் கழக மேனாள் தேசியத் தலைவர் மானமிகு பி.எஸ்.மணியம் அவர்களுக்கு வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 18, 2020

மலேசிய திராவிடர் கழக மேனாள் தேசியத் தலைவர் மானமிகு பி.எஸ்.மணியம் அவர்களுக்கு வீரவணக்கம்!

மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தேசியத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான மானமிகு சகோதரர் பி.எஸ்.மணியம் அவர்கள் இன்று (17.12.2020)மலேசியாவில் பெத்தாலிங் ஜெயா பகுதியில் உள்ள மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.

மலேசிய திராவிடர் கழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்புடன், திருச்சுடர் கே.ஆர் இராமசாமி அவர்கள் தேசியத் தலைவராக பணியாற்றியபோது துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து பல பொறுப்புகளில் கழகப் பணியாற்றிய கடமை வீரர்.

பழகுவதற்கு மிகவும் பாசம் காட்டும் குழந்தை உள்ளம் படைத்தவர்; என்னை மலேசியாவின் பினாங்கு, பட்டர்வர்த், கெடா மாநிலம், சுங்கைப் பட்டாணி போன்ற பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்து சென்றவர்.

சில ஆண்டுகளுக்குமுன் கூட சந்தித்து உரையாடினோம். கழகத் தலைவராக இருந்த போது மலேசிய நாளேடுகளில் தந்தை பெரியார் பற்றி, கழகக் கொள்கை விளக்கம் பற்றி கட்டுரைகள் எழுதியவர்.

உடல்நலம்குன்றி சில காலமாகவே இருந்தவர். மிகவும் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் உள்ள செய்தியை அவரது அன்பு மகள் வழக்குரைஞர் குமுதா  எனக்கு தொலைபேசியில் 16.12.2020 அன்று தெரிவித்திருந்தார். அவருடன் தொலைபேசியில் உரையாடி தைரியம் சொன்னோம். இன்று (17.12.2020) அவர் முடிவெய்தி விட்டார்.

அவரது மறைவு மலேசிய திராவிடர் கழகத்திற்கும், பெரியாரிய கூட்டமைப்புக்கும் மட்டும் இழப்பு அல்ல; தமிழ்நாடு திராவிடர் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் நமக்கும்கூட!

அவருடைய குடும்பத்தினருக்கும், கழகக் குடும்பத்தின ருக்கும் ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு நமது வீரவணக்கம்!                                                                                               


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.12.2020

No comments:

Post a Comment