நம். சீனிவாசன்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு விருது என்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பு, தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர்களுக்கும், நூலைப் பதிப் பித்த பதிப்பகத்தினருக்கும் பரிசுத் தொகையும், சான்றி தழ்களும் கடந்த 48 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 33 தலைப்புகளில் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு, ஒவ் வொரு தலைப்பின் கீழும், சிறந்த நூல் தேர்வு செய் யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ்மொழியில் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டிக்கு வரப்பெற்ற வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு எனும் வகைப்பாட்டில் சிறந்த நூலாகப் ‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’ எனும் புத்தகம் எழுதிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்களுக்குப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டிருக்கிறது.
கி.வீரமணி பன்முக ஆற்றல் கொண்டவர். தலைவர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர், வழக்குரைஞர், சிந்தனையாளர், கல்வியாளர், போர்க்குணம் கொண்ட வர், சலியாத உழைப்பாளி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏறத்தாழ 250 புத்த கங்களைப் படைத்திருக்கிறார். அவர் உரை நிகழ்த்தி நூலாக வெளிவந்த படைப்புகளும் உண்டு. ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு, தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டி, எழுதி, புத்தகமாக வெளியிட்டதும் உண்டு. எழுதுவது பெரும் கலை, எல்லோருக் கும் வாய்ப்பதில்லை. யாரிடமாவது எழுதிக் கேட்டால் எதிரியாக மாறிவிடுகிறார்கள். தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுத அமர்வார். கையில் ‘கிளிப்’புடன் கூடிய அட்டை இருக்கும். அதில் One side பேப்பர் நிறைந்திருக்கும். தனிமையில் அமர்வார். விரல்கள் ‘விறுவிறு’ என எழுதிக்குவிக்கும். பழுத்த அனுபவமும் பரந்துபட்ட படிப்பறிவும் எழுத்தின் வேகத்தைத் துரிதப் படுத்தும், இலக்கணப் பிழை இருக்காது. கருத்துப் பிழையைக் காணமுடியாது. கைப்பட எழுதுவாரே தவிர (‘டிக்டேட்’ செய்வது) சொல்லச் சொல்ல மற்றவர்களை எழுதச் செய்வது அவரிடம் இல்லை. முழுவதும் கைப்பட எழுதி 2016 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்தான் ‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’ புத்தகம் ஆகும். தமிழகத்தில் புத்தக விற்பனையில் சாதனை படைக்கும் எழுத்தாளர்களில் ஆசிரியர் வீரமணியும் ஒருவர். பெரியார் கொள்கைகள் பரவுவதையே பரிசாகக் கருதுப வர் தலைவர் வீரமணி.
‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்’ புத்தகம் 240 பக்கங்கள் கொண்டது. தந்தை பெரியார் வாழ்வில் நடை பெற்ற சம்பவங்களை 56 தலைப்புகளில், சுவையான, கட்டுரை ஆக்கி தந்திருக்கிறார். நிகழ்ச்சிகள் நம் வாழ்க் கைக்கு வெளிச்சமாகத் திகழும்.
இந்நூலில்,
* விருந்தளிப்பவரின் மனம் நோகாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பெரியார் உணவருந்திப் துன்பப்பட்டதை வீரமணி எடுத்துரைக்கின்றார்.
* பெரியாரின் கொடைத்தன்மையைச் சுட்டிக்காட்டி வழிகாட்டுகிறார்.
* பெரியாருடன் சத்திரத்தில் தங்கியதே எங்களைப் பக்குவப்படுத்தியது என்று வாக்குமூலம் தருகிறார்.
* மன்னிப்பதும், மறப்பதும் மகத்தான மனிதர்களின் பண்பு என்பதை சம்பவம் கொண்டு நிறுவுகிறார்.
* பெரியார் சிக்கனத்தை நெஞ்சில் சுவைபட பதிக்கிறார்.
* திருச்சியில் கல்லூரித் தொடக்க விழாவில் நடைபெற்ற நிகழ்வினை அடக்கம், பொறுமை, நிதானத் திற்கு பாடமாக்குகிறார்.
* அய்யாவின் உறுதியினை தோழர்களின் இதயத் தில் ஏற்றுகிறார்.
* முன்னோக்கு தேவை என்பதை பெரியாரின் வரலாறு கொண்டு அறிவுறுத்துகிறார்.
* தவத்திரு ஞானியார் அடிகள், தவத்திரு குன்றக்குடி அடிகள் இவர்களிடம் பெரியார் நடந்துகொண்ட முறை யைச் சுட்டிக்காட்டி அணுகுமுறையைக் கற்றுத் தரு கிறார்.
* பெரியார் சூட்டிய இதழ்களின் பெயர்களில் கொள்கையும் மிளிர்ந்தது, தமிழும் ஒலித்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
* வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினை இரண்டையும் வரலாறாய் விவரிக்கிறார்.
* நாகம்மையாரை உணர்ந்து கொள்ள காந்தியாரின் கூற்றையும் (1922) ‘Who is Who’ புத்தகத்தையும் ஆதாரமாக்குகிறார்.
* ஆளுவோர் கடைப்பிடிக்க வேண்டிய அஞ்சாமை, சார்பின்மை குணங்களை ஈரோடு நகர சபைத் தலைவர் பதவி மூலம் சித்திரம் தீட்டுகிறார்.
* வாய்மையின் பக்கம் உறுதியாக நின்றதை நிறுவிட ஒரு சம்பவம்
* கொள்கைகாகப் பணத்தை துறந்த தியாக சீலத்திற்கு ஒரு சம்பவம்
* சுற்றுச்சூழலால் பாதிப்படையாதவர் என்பதை விளக்கிட ஒரு சம்பவம்
* ஜாதி ஒழிப்புப்புக்கு ஒரு நிகழ்ச்சி
* மூட நம்பிக்கை தகர்ப்புக்கு ஒரு நிகழ்ச்சி
* நினைத்ததை நிறைவேற்றும் சாதுர்யத்திற்கு ஒரு நிகழ்ச்சி
என்று இன்ப வாழ்விற்கு வெளிச்சம் காட்டுகிறார்.
இந்நூலில்,
* வரலாறு கொட்டிக் கிடக்கிறது
* சம்பவங்கள் அணிவகுக்கின்றன.
* ஒவ்வொரு அத்தியாயமும், வாழ்வைச் செம்மைபடுத்தும் பாடங்கள்
* எளிய நடை
* சுவையான செய்திகள்
* மென்மையான நகைச்சுவை
* ரசிக்க வைக்கும் பகுத்தறிவுப் பிரச்சாரம்
* இயக்கத் தகவல்கள்
* பெரியாரின் அணுகுமுறை
இவையாவும் ததும்பி நிற்கின்றன.
ஆசிரியர் வீரமணி,
தந்தை பெரியாரையே சிந்தித்துக் கொண்டிருப்பவர், அவருடைய எழுத்துகளையே வாசித்துக் கொண்டிருப் பவர், அவர்தம் கொள்கையினையே பேசிக் கொண் டிருப்பவர், பெரியாருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு பெற்றவர். அவர் நூல் எழுதினால் தகவல்கள் அருவியாய் கொட்டும் தரம் இமயமாய் உயர்ந்து நிற்கும். அவர் பார்க்காத பட்டங்கள் இல்லை. அவர் கேட்காத புகழ் மாலை இல்லை. வீரமணி விரும்புவதெல்லாம் பெரியார் கொள்கைகள் பரவ வேண்டும். இவருடைய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கின்றன. ‘ராயல்டி’ கேட்காத ஒரே எழுத்தாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான். அவர்தம் ஆற்றலுக்கு விருது கிடைப்பது வியப்பல்ல, வெளிச்சம் பரவட்டும்.

No comments:
Post a Comment