பெரியாழ்வார் மண் என்பவர்களையும்,
பிள்ளையார் சுழி அரசியலையும்
பிளந்து போட்ட பெரியவர்!
ஆம். சனாதனத்தை
எதிர்த்துப் பேசுபவர்கள்,
இந்து மத இழிவை வெறுக்கிறவர்கள்
தொட முடியாத
அரசியலைத் தொட்டவர்!
சமூகப் புரிதல்தான்
அரசியலாக பரிணமிக்கும் என்று,
‘முதன்மை - புனிதம்’
என்பதை அடித்து வெளுத்தவர்!
ஒடுக்கப்பட்டவன், ஓரங்கட்டப்பட்டவன்,
திணிக்கப்பட்டவன், என்போருக்கெல்லாம்
எம் பெரிய பாட்டன்!
நரை நரைத்து - நடை தளர்ந்து
வயது முதிர்ந்தாலும்
பிரதிநிதித்துவம் - எனும்
கோட்பாட்டின் இளைஞன்!
வகுப்புத் தலைவர்க்கெல்லாம்
வகுப்புவாரி வகுப்பெடுத்த
திராவிடத்தின் முதல் பேராசிரியன்!
தட்டிப்பார்த்தேன் திறக்கவில்லையெனும்
சாக்குபோக்குக் காரர் அல்லர்;
அடித்தளத்தை மாற்றி அமைக்கும் புரட்சிக்காரர்!
அரசமைப்பின் முதல் சட்டத் திருத்தம்
செய்த வெண்ணிற
தாடிக்கார இளைஞர்!
இவர் செய்த சமூக வைத்தியம்
அரசியலை வெற்றி கொண்டது
அரசமைப்பும் முதல் திருத்தம் கண்டது
நீதிமன்றமும் இவர்தம்
சமூகநீதிப் போருக்கு
வழிவிட்டு வாழ்த்துச் சொன்னது.
69க்கு வித்தாய்
சமூகநீதியின் ஆணிவேராய்
ஆனார் பெரியார்.
- த.மு. யாழ்திலீபன்
No comments:
Post a Comment