இந்தியாவில் 199 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

இந்தியாவில் 199 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

புதுடில்லி, மே 19 இந்தியாவில் 98 சதவீதத்தினர் இன்னும் கரோனா பாதிப்பு அபாயத்தில் இருப்பவர்கள்தான் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டில்லியில் நேற்று (18.5.2021) கூறியதாவது:-

நமது நாட்டில் நிறைய எண்ணிக்கையிலானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகி உள்ளது. ஆனாலும்கூட மக்கள் தொகையில் 2 சதவீதத்துக்கும் குறைவானோருடன் நம்மால் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. இதுவரை மொத்த மக்கள் தொகையில் 1.8 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 98 சதவீதத்தினர் இன்னும் கரோனா பாதிப்பு அபாயத்தில் இருப்பவர்கள்தான்.

கடந்த 15 நாட்களாக கரோனா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 13ஆம் தேதியன்று சிகிச்சை பெறுவோர் விகிதம் 17.13 சதவீதமாக இருந்தது. இப்போது அது 13.3 சதவீதமாக குறைந்துள்ளது. 8 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 22 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

மராட்டியம், உத்தரப்பிரதேசம், டில்லி, பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் புதிய பாதிப்புகள் குறைந்து வருகின்றன.    கடந்த 2 வாரங்களில் இருந்து 199 மாவட்டங்களில் கரோனாவின் புதிய பாதிப்புகளும், பாதிப்பு விகிதமும் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக

கரோனா பாதிப்பு குறைந்தது

சென்னை, மே 19 தமிழகத்தில் இன்று புதிதாக 33,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக நேற்று (18.5.2021) கரோனா தொற்றால் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரே நாளில் 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 33,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,369 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும்  21,362 பேர் கரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,42,29 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 6,016 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment