முதல்அமைச்சரின் கனிவான வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

முதல்அமைச்சரின் கனிவான வேண்டுகோள்!

 தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் முக்கியமானது.

கரோனா காலத்தில் தி.மு.. ஆட்சி மேற்கொண்டு வரும் செயல்முறைகள், திட்டங்கள் குறித்து சுருக்கமான அளவில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் புதிதாக அரசு அமைந்து இரண்டு வாரங்கள்தான் முடிந்திருக்கிறது.  இந்த இரண்டு வாரங்களில் ஏராளமான திட் டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றிக் கொண்டு வரு கிறோம். கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப  அட்டை தாரர்களுக்கு4,000 ரூபாய், பெண்கள் எல்லோருக்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலைகள், இழப்பீடுகள் தருதல், தூத்துக்குடி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. எழுவர் விடுதலைக்காக குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது, கரோனா நோயாளிகளுக்கும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் செலவுத் தொகையைப் பெறலாம் என்று அறிவித்திருக்கிறோம்.‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்என்ற திட்டத்தின்படி பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம். இவ்வாறு  பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்.

இது அனைத்தையும்விட முக்கியமானது கரோனா தடுப்புப் பணிகள்தான். கடந்த இரண்டு வாரங்களில் 17,000 புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டன. இதில் 7,800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 30 இயற்கை மருத்துவ மய்யங்கள் திறக்கப்பட்டன. புதிதாக 2,100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு வருகிறோம். கரோனாவை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறோம்.

இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த மே 24 முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறபோது, மக்கள் தங்களது தேவைகளை வாங்குவதற்காக சிறு சலுகைகளாக தளர்வுகள் அறிவித்தோம்.ஆனால், அந்த சலுகையைப் பயன்படுத்தி சிலர் வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதனால்தான் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை இப்போது அறிவித்திருக் கிறோம். கரோனா சங்கிலியை உடைக்க வேண்டும் என்றால் முழு ஊரடங்கைத் தவிர வேறுவழி இல்லை.

கரோனா தானாக பரவுவது அல்ல. மனிதர்கள் மூலமாகத்தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக உங்களில் யாரும் இருக்கக் கூடாது. ‘‘கரோனாவை  யாருக்கும் கொடுக்கமாட்டேன், கரோ னாவை யாரிடமும் இருந்து பெறவும் மாட்டேன்’’என்று பொது மக்களாகிய  நீங்கள் எல்லோருமே உறுதி எடுத்துக்கொள்ள வேண் டும்." என்று அந்த அறிக்கையில் முதல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் எந்த அரசும் இதற்குமேல் செயல்பட்டு இருக்க முடியாது என்பது திறந்த மனத்தோடு பார்க்கும் எவருக்கும் எளிதாகவே விளங்கும்.

தொடக்கத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கால கட்டத்தில் நம் மக்கள் நடந்து கொண்ட போக்கு உகந்ததாக இல்லை என்பது வருந்துதற்குரியதாகும்.

அரசு கொடுக்கக் கூடிய உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி னால், அரசு அடுத்தகட்ட - சற்றுக் கடுமையான நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றேயாகும்.

அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது - இதற்குக் காரணம் அரசு அல்ல - பொது மக்கள்தான்.

அதே நேரத்தில் அன்றாடம் தேவையான உணவுப் பொருள்கள் கிடைப்பதில் இடர்ப்பாடு ஏற்பட்டு விடக் கூடாது என்ற பரந்த எண்ணத்தில் மக்கள் நல அரசு என்ற கண்ணோட்டத்தில் ரேசன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் காய்கறிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்துகள் கிடைப்பதற்கான விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டுமா, வேண்டமா என்பது அரசின் கைகளில் இல்லை - பொது மக்களின் கைகளில்தான் அது இருக்கிறது.

ஜூன் மாதத்தில் கரோனா தாக்குதல் கடுமையாக இருக்கும் என்ற அபாய சங்கும் இன்னொரு பக்கத்தில்  ஒலிக்கப்படுகிறது.

பல்லைக் கடித்துக் கொண்டு என்று சொல்லுவார்களே, அதே போல கடுமையான பத்தியம் என்கிற அளவுக்குப் பொது மக்கள் நிபந்தனைகளை 'நமக்கு நாமே' ஏற்படுத்திக் கொண்டு கடைப்பிடித்தால், கரோனா என்ன அதன் அப்பனையும்கூட புறமுதுகிட்டு விரட்டியடிக்க முடியும்.

இந்தியாவை விடக் கடுமையான கரோனா தொற்றுக்கு ஆளான பலநாடுகளும் இப்பொழுது கரோனா அற்ற பூமியாக ஒளிவீசிக் கொண்டுள்ளன. அரசு ஒரு பக்கத்தில் தன் பணிகளை அறிவியல் முறைப்படி திட்டமிட்டு மேற்கொண்டது ஒரு பக்கம் என்றால், அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களின் பங்களிப்புதான் கூடுதலாகும்.

யாருக்கோ வந்த விருந்தல்ல - நமக்கு நாமே நம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் 'சுயநல' நோக்குடையதாகும்.

வீட்டில் உள்ள இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற அனுமதிக்கக் கூடவே கூடாது - ஊரடங்கு என்பதை சுற்றுலா விடுமுறையாகக் கருதக் கூடாது என்று முதல் அமைச்சர் கூறியது கவனிக்கத்தக்கதாகும்.

இதில் மத்திய அரசின் பங்களிப்புதான் முதன்மையான இடத்தில் இருக்கவேண்டியது ஆகும்.

130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி என்பதுதான் - இந்தக் கால கட்டத்தில் முதலும் முடிவுமான திட்டமும் செயலுமாகவும் இருக்க வேண்டும்.

மாநில அரசுகள் விரும்பினாலும், திட்டமிட்டாலும் வெளிநாடு களிலிருந்து நேரடியாக தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முடிவால் தடை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சிக்கலை சரி செய்ய மத்திய அரசு உடனடியாக முயல வேண்டும். இறுதியான தீர்வு தடுப்பூசி! தடுப்பூசி!! தடுப்பூசியே!!

 

No comments:

Post a Comment