ஹிந்து யுவ வாஹினியினர் வெறியாட்டம்
லக்னோ, மே 20 தடுப்பூசி தொடர்பாக, அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீது, ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மேலும், ஹிந்து யுவ வாஹினியினரை குற்றச்சாட்டிலிருந்து தப்பவிடும் வகையில், பத்திரிகையாளர்களே அவர்களுக்குள் தாக்கிக் கொண்டதாகக் கூறி, உ.பி. காவல்துறை வழக்கை முடித்து வைத்துள்ளது.
உ.பி. மாநிலம் சித்தார்த் நகரிலுள்ள துமரியாகஞ்சில், கடந்த திங்கள் கிழமையன்று கரோனா சிகிச்சை மய்யத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், இந்த மய்யத்தைத் திறந்து வைத்து, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளரான அமீன் பரூக்கிஎன்பவர், ‘கரோனா தொற்று அதிகரிப்புக்கு, தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட தாமதம்தான் காரணமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக, ஆத்திரமடைந்த காவி நிற முகக்கவசம் அணிந்திருந்த ‘ஹிந்து யுவ வாஹினி’ அமைப்பினர், பாஜக நிர்வாகியான லவ்குஷ் ஓஜா தலைமையில், அமீன் பரூக்கியைத் தனியாக இழுத்துச் சென்று, மிகக்கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். பின்னர் அமீன் பரூக்கியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு 3 மணிநேரம் தரையில் அமர வைத்ததுடன், சக செய்தியாளர்கள் தாக்கியதில்தான், அவர் காயமடைந்தார் என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி யுள்ளனர்.
எனினும், அமீன் பரூக்கியை ‘ஹிந்து யுவ வாஹினி’ அமைப்பினர் தாக்கிய காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி, உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகவேந்திரா பிரதாப் சிங்-கின் உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
‘ஹிந்து யுவ வாஹினி’ என்றஅமைப்பானது, தற்போதைய உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment