தொடக்கமே வெகு சிறப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

தொடக்கமே வெகு சிறப்பு!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.. ஆட்சிப் பீடம் ஏறி யுள்ளது. எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலும்கூட 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து - தி.மு.. ஆட்சிப் பீடம் ஏறியதுண்டு.

நீண்ட காலம் தேர்தலில் பெரும்பான்மை பெறாமல் எதிர்க் கட்சியாகவே இருந்து மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறுகிறது என்றால், அது இந்தியத் துணைக் கண்டத்தில் அதிசயமும், சிறப்பும்தான்.

பதவிக்காக மட்டுமே அரசியல், பொது வாழ்வு என்ற நிலையும், உணர்வும் இருந்திருந்தால், தி.மு.. என்று பெயர் சொல்லுவதற்குக்கூட ஆள் இருப்பது கடினமே!

தி.மு.. நிலைத்து நிற்கிறது அரசியலில் என்றால், அதற்குக் காரணம் - அது வெறும் அரசியல் கட்சியல்ல - சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்று சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னதுண்டு - எழுதியதுண்டு.

குங்குமம்' இதழுக்குப் பேட்டியளித்த  மானமிகு கலைஞர் அவர்கள் இவ்வாறு சொன்னார்.

கேள்வி: உங்களைப்பற்றி ஒரு வரியில் சுய விமர்சனம் செய்யுங்களேன்.

கலைஞர் பதில்: ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' (‘குங்குமம்', 30.4.2006).

முரசொலி'யில் ஒருமுறை எழுதினார். ‘‘அரசியலுக்கு வந்த காரணத்தால் சமுதாயத்தில் புரட்சியையும் நாம் மறந்துவிடவில்லை. ஆனால், இப்பொழுது ஏற்படுகின்ற புதிய கட்சிகளைப் பாருங்கள். ‘‘திராவிட'' என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு பெயரை வைத்தாலுங்கூட, சமுதாயத்தைப்பற்றிப் பேச பயப்படுவார்கள். கடவுளின் பெயரால் நடைபெறுகிற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச் செயல்களையெல்லாம் வீழ்த்தவேண்டும் என்று சொல்லுகின்ற தைரியமும், அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்த திராவிட இயக்கத்திற்கு ஏற்படுமென்றால், திராவிடர் கழகத்திற்கு நிகராக அடுத்தபடியாக, அந்த உணர்வு ஏற்படக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.'' (‘முரசொலி', 15.9.2006).

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கூறும் இந்த சமுதாய அடிப்படைக் கொள்கையைக் கொண்ட ஓர் அரசியல் கட்சி என்பது இந்தியாவிலேயே தி.மு..தான். அதனால்தான் கடந்த காலங்களில் தோல்விகளைத் தொடர்ந்து சந்தித்தபோதும், மீண்டும் மீண்டும் மக்கள் ஆதரவு பெற்று ஆட்சியிலே அமர முடிகிறது.

மற்றொரு முக்கிய காரணம் தி.மு..வுக்கு இருக்கும் அந்தக் கட்டமைப்பு - குக்கிராமம்வரை தி.மு..வுக்கு இருக்கும் அமைப்பு முறை - இது மிகப்பெரிய பலமாகும்.

கடந்த காலத்தில் ஆட்சிகள் எப்படி மாறி மாறி அமைந்தாலும், தி.மு..வின் எதிர்காலம் ஆட்சிக்காலம் மிக நீண்டதாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடங்கும் இந்தக் காலகட்டம் - முதலமைச்சர் கூறியுள்ளதுபோல - கரோனா - நிதி நெருக்கடி என்ற இரண்டும் சவாலாக எழுந்து நிற்கும் ஒன்றாகும்.

திட்டமிடல், அரவணைத்தல் பொருத்தமான - திறமையான அதிகாரிகள், மக்கள் ஆதரவு என்ற பாட்டையில் இந்த ஆட்சிப் பயணிக்கும் என்பதற்கான ஒளிமயமான அறிகுறிகள் தொடக்கத்திலேயே பளிச்சிடுகின்றன.

கரோனாவின் இரண்டாம் தாக்குதல் காலத்தில் தி.மு.. ஆட்சி தொடங்கியுள்ளது. இந்தக் குறுகிய நாட்களில் ஆட்சி இயந்திரம் சுழலும் திறன் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது - அரசியலை மறந்து மனந்திறந்த பாராட்டுகளையும் ஈர்க்கிறது!

இருக்கும் கட்டமைப்புகளைக் கொண்டு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், புதிய புதிய இடங்களில் விரிவாக்குதல், தனியாரிடம் உள்ள வசதிகளை, இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், நிவாரண நிதியைப் பொதுமக்களிடம் திரட்டுதல், மத்திய அரசிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும் பொருள்களை அவசர அவசரமாகப் பெறுதல், பன்னாட்டளவில் தடுப்பூசிகளுக்கு டெண்டர் கோருதல், (நாளைய தினம் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்து சேர்கின்றன) என்று போர்க்கால அடிப்படையில் பணிகள் மளமளவென்று நடைபெறுகின்றன.

மேயராக இருந்து முத்திரை பதித்த நமது மானமிகு மா.சுப்பிர மணியம் அவர்களை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக முதலமைச்சர் தேர்ந்தெடுத்தது மிகவும் சரி யானது என்பதை தமது ஒவ்வொரு செயலிலும் நிரூபணம் செய்துவருகிறார் மாசில்லா மா.சு.

அரசு எவ்வளவுத் தீவிரமாகத் திட்டமிட்டு செயல்பட்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்புதான் இதில் மிக முக்கியமானது.

அரசு - ஊரடங்குக்கு உத்தரவிட்ட நிலையில் - கெடுபிடிகள் அதிகம் வேண்டாம் என்பதை அரசின் பலகீனமாகப் பொதுமக்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அரசு செய்வது எல்லாம் மக்களுக்காகத்தான் - அரசுக்காக நாம் செய்கிறோம் என்ற மனப்பான்மை - தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்வதாகும்.

அரசோடு சேர்ந்து நாமும் ஒத்துழைப்போம் - கரோனாவை வீழ்த்துவோம்!

No comments:

Post a Comment