மறுப்புகளும் முக்கிய கடமையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

மறுப்புகளும் முக்கிய கடமையே!

பேராசிரியர் மானமிகு சி. வெள்ளையன் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவு ஆய்வுப் பொழிவின் மூன்றாவது நிறைவுரையைக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று மாலை காணொலி மூலம் நிகழ்த்தினார்.

முக்கியமாக அதில் அதிகாரப்பூர்வமாகக் கழகத்தின் சார்பில் மறுக்கப்பட வேண்டியவை இரண்டு. அவற்றை ஆதாரப் பூர்வமாகக் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

ஒன்று - மறைந்த தோழர் வே. ஆனைமுத்து அவர்கள், 'பாஸ்போர்ட்டு' இல்லாமல் பெரியார் அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் என்பதற்கான மறுப்பு.

தந்தை பெரியார் பயணித்த ஒரிஜினல் பாஸ்போர்ட் இருப்பதை  ஏற்கெனவே  எடுத்துச் சொல்லி, அது வெளியிடப்பட்டது என்பது ஒன்று.

 இரண்டாவது ஓய்வு  பெற்ற சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைமைப் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் - தோழர் ஆனைமுத்து அவர்கள் குறித்து ஃப்ரண்ட் லைன்' இதழில் தெரிவித்திருந்த கருத்தைக் குறித்ததாகும்.

'சிந்தனைச் சிற்பி' என்று போற்றப்படும் .சிங்காரவேலர் அவர்களுக்குத்தான் ருசியாவிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி அளிக்காது என்ற காரணத்தால், அவருக்குப் பதிலாக தந்தை பெரியார் அவர்களை அவர் அனுப்பி வைத்ததாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைப் படித்த பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தந்தை பெரியார் எந்த இடத்திலும் அது பற்றிக் குறிப்பிட்டது கிடையாது.

. சிங்காரவேலர் அவர்களும் அதுகுறித்து எந்த இடத்திலும் குறிப்பாகக்கூட உணர்த்தியது கிடையாது. மறைந்த நாகை முருகேசன் அவர்களும் சுப்பிரமணி என்ற தோழரும் இணைந்து எழுதி, என்.சி.பி.எச். நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்

. சிங்காரவேலர்" என்ற நூலிலும் இதற்கான ஆதாரம் எங்கும் காணப்படவில்லை.

ருசியா சென்று வந்த பிறகு விருதுநகரில் தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தை பெரியார் ருசியப் பயணம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். (குடிஅரசு 12.3.1933) அதிலும்கூட அதுபற்றிய தகவல் ஏதும் இல்லை.

இந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வமான மறுப்பு - கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பெயரில் ஃப்ரண்ட்லைன் இணையத்தில் (26.5.2021) வெளி வந்துள்ளது. இதழிலும் வெளிவரும்.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் முக்கியக் காரணம் - நாளை ஆய்வுப் பட்டம் பெறக் கூடிய மாணவர்கள், வரலாறு எழுதக் கூடியவர்கள் - பேராசிரியர் வீ. அரசு போன்ற முக்கிய ஆய்வாளர்கள் எழுதியதன் அடிப் படையில் மேற்கோள் காட்டி தந்தை பெரியார் மேற்கொண்ட ருசியப் பயணம் குறித்துத் தவறாக வந்து விடக் கூடாதல்லவா - அதிகாரப் பூர்வமாக மறுக்க வேண்டிய கடப்பாடு திராவிடர் கழகத் தலைவருக்கு உண்டு என்ற முறையில் தன் கடமையினைக் கழகத் தலைவர் மிகச் சரியாகச் செய்துள்ளார்.

புத்த ஜாதகக் கதைபோல தந்தை பெரியார் வரலாற்றிலும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் இதன் நோக்கம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மூத்த தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி அவர்கள் திராவிடர் இயக்கம் குறித்து எழுதிய நூலில் தவறான பல தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொடர் சொற்பொழிவை மேற்கொண்டு, "விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் உண்மை வரலாறு" எனும் நூலாக வெளி வந்ததுண்டு.

"உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?" என்ற நூலும் மறுப்புச் சொற்பொழிவுகளின் தொகுப்பே!

திருக்குறளை மலத்துக்கு ஒப்பிட்டார் பெரியார் என்று தொடர்ந்து அபாண்ட பொய் மூட்டையைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனர்மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவரின் எத்தனையோ பணிகளுக்கிடையே இந்த மறுப்புப் பணிகளும் ஒரு முக்கிய அங்கமாக ஆகி விட்டது.

விழிப்பாக இருப்போம்.

உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்!

No comments:

Post a Comment