நடவடிக்கை எடுக்காதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நாட்டில் கரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த சில வாரங்களில் போடப்பட்ட ஊரடங்கால் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொற்று பாதிப்பானது கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிகிறது. அதனால், தொடர்ந்து ஊரடங்கினை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

இந்த அசாதாரண சூழலிலும், மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது உயிரையும் துச்சமென எண்ணிப் போராடி வருகின்றனர். இந்நிலையில் யோகா சாமியார் என்று விளம்பரம் ஆகியுள்ள ராம்தேவ்  தனியார் நிறுவன நிகழ்வொன்றில் அலோபதி மருத்துவம் குறித்துப் பேசிய கருத்துக்களானது மருத்துவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அவர் கூறியதாவது, ``தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமாது. இந்த பெருந்தொற்று காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வி யடைந்துவிட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்என்று கூறினார். மேலும் அவர் மருத்துவர்களை கொலையாளிகள் என்று சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசிய காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “இந்தப் பெருந்தொற்று காலத்திலும் மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். அலோபதி மருத்துவம் முட்டாள் தனமானது, அது பலரின் உயிரைப் பறித்துள்ளது என்று தனது விளம்பரத்திற்காக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மருத்துவர்கள் மீது  ராம்தேவ் பழி சுமத்துவது வேதனையளிக்கிறது. இதற்கு அவர் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். அதுமட்டுமல்லாது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இதனை உடனடியாக பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது, சாமியார் ராம்தேவ் கூறுவது போல் அலோபதி மருத்துவ முறையை முழுவதுமாக நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்துங்கள். இல்லை யெனில், மருத்துவர் ஆராய்ச்சிக் குழுவின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்என்று கடுமையாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 ராம்தேவின் கருத்துக்களால் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து அந்த காணொலிப் பதிவிலிருந்து அக்கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ``நாங்கள் என்றும் அலோபதி மருத்துவத்திற்கு எதிரான வர்கள் அல்ல. அந்நிகழ்வில் சாமியார் ராம்தேவ்   தனக்கு வாட்ஸ் அப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே மேடையில் படித்துக் காட்டினார். இதற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்என்று அந்தர்பல்டி அடித்தது அந்த நிறுவனம்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம்ராம்தேவ் மத்திய பா... அரசாங்கத்தினருக்கு நெருக்கமாக உள்ளதால் ஆரம்பம் முதலே இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு அதிலிருந்து தப்பித்து விடுகிறார். அரசாங்கமும் அதைக் கண்டுகொள்வதில்லை. இந்த கடினமான காலத்தில் இதுபோன்ற பொய்ப் பரப்புரைகள் செய்து மக்களின் நம்பிக்கையில் விளை யாடுவது முற்றிலும் தவறானது, என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக கரோனாவின் முதல் அலையின் போது, பதஞ்சலியின் கரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து என  ராம்தேவ் அறிமுகப்படுத்தி பின் அது தடைசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 இவரும், இவரது பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பில் இருக்கும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவருமே  கனடா மற்றும் இங்கிலாந்து சென்று மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பிரச்சினைக்கு அலோபதி முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இது ஊடகங்களில் படமாகவெளிவந்தது, இப்படி இருக்க இவர் தனது நிறுவன மருந்துகளை விற்பதற்காக ஏற்கெனவே பதட்டத்தில் இருக்கும் மக்களின் மனநிலையைக் குழப்பி இது போன்ற மூடத்தனங்களை அவிழ்த்துக் கொட்டுகிறார்.

 இவரது பேச்சு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரோ  எதுவுமே பேசாமல் இவரின் பேச்சிற்கு விளக்கம் கேட்டுள்ளோம் என்று மட்டுமே கூறியுள்ளார்

 இவரது நிறுவன மருந்துகளில் பல விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டது குறித்து நாடாளு மன்றத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறியிருந்தார். இது குறித்து இதுவரை  ராம்தேவ் விளக்கம் அளிக்கவில்லை என்பதும்தனது நிறுவன தயாரிப்பு மருந்தை சாப்பிடுபவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்; இதற்கு எனது நிறுவனமே உறுதி கொடுக்கும் என்று பேசினார். இந்தப்பேச்சு  குறித்து பெண்களின் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பிறகு அவர் நாட்டு மக்களின் மனநிலைதான் எனது பேச்சில் பிரதிபலித்தது என்று கூறி சமாளித்தார்.

அன்னக்காவடியாக இருந்த இந்த ஆசாமி பிஜேபி ஆட்சியில், வெளிநாடுகளில் தீவுகளை வாங்கும் அளவுக்கு செல்வத் திமிங்கலமானார். இவருக்குஇசட் பிளஸ்பாதுகாப்பாம்! பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் நாடெங்கும் விற்கப்படுகின்றன. அவை மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டனவா என்றால், அதுதான் இல்லை. சங்கிகள் ஆட்சியில் சாமியார்கள் யோகம் வெகு ஜோர்தானோ

No comments:

Post a Comment