கோவில் நகரங்களின் தேர்தல் முடிவுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

கோவில் நகரங்களின் தேர்தல் முடிவுகள்!

நடைபெற்ற தமிழ்நாடு 16 ஆம் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் பல உண்மை நிலைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளன.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை, பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி,  பாலியல் உரிமை, ஜாதி ஒழிப்பு, சம தர்மம், சமத்துவம் என்ற கோட்பாட்டின் அடிப்படைகளை சுவாசமாகக் கொண்டது.

இவற்றின் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டிப் போடும் அமைப்பு அல்ல - சமூகத்தில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்திட பிரச்சாரம் - போராட்டம் என்கிற அணுகுமுறையைக் கொண்டதாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் திராவிடர் கழகம் அளவுக்குத் தீவிரத்தன்மையுடன் பிரச்சாரத்தை எடுத்துச் சொல்வதில் 'நீக்குப் போக்குகள்' இருக்கக் கூடும்; அதேநேரத்தில், இந்தக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை என்பதுதான் முக்கியமாகும்.

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் - சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் - இந்திக்கு இங்கு இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான் இங்கு; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் - பெரியார் நினைவு சமத்துவபுரம் - குடிசைமாற்று வாரியம் - பெண்கள் முன்னேற்றத்துக்கான அலை அலையான திட்டங்கள் - தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி என்ற அறிவிப்பு இன்னோரன்ன திட்டங்களும், செயல்பாடுகளும் தி.மு.. ஆட்சியில் நடைபெற்றன என்றால், மேலே எடுத்துக் கூறப்பட்ட திராவிட இயக்க சித்தாந்தத்தை - தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை உள்வாங்கியதன் அடிப்படையில்தான்!

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் - நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால், அதற்காக ஆன்மிகவாதிகள் திராவிட இயக்கத்திற்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் காலூன்ற படாதபாடுபடும் பா... என்ற பார்ப்பன ஆதிக்கக் கட்சி, தமிழ்நாட்டில் தி.மு..வுக்கு மாற்றாக அரசியலில் கால் ஊன்ற வேண்டும் என்ற தீரா வெறியில் தி.மு..வை வீழ்த்த என்ன செய்யலாம் என்று 'சிந்தித்து' தி.மு.. என்பது - தி.. வழி வந்தது; நாத்திகக் கட்சி; மக்களில் பெரும்பாலோருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; இதனைப் பயன்படுத்தி, தி.மு.. நாத்திகக் கட்சி! இந்து மதத்துக்கு விரோதமான கட்சி என்று பிரச்சாரம் செய்தால் அது எடுபடும் என்ற திட்டத்தோடு, மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கப் படாதபாடுபட்டனர்.

ஊடகங்கள் பெரும்பாலும் அவர்களைச் சார்ந்தவைகளாக இருப்பதால், அவையும் தங்களால் இயன்ற அளவுக்குக் காற்று அடித்து ஊதிப் பெருக்கி காகிதப் பட்டமாக ஆகாயத்தில் பறக்க விட்டுப் பார்த்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னதுபோல - 'எண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை!'

நடைபெற்ற தமிழகத் தேர்தலில்கூட கோவில் நகரங்கள் என்று சொல்லப்படும் திருத்தணி, திருவொற்றியூர், சென்னை மயிலாப்பூர், சென்னை திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சிறீரங்கம், பழனி, கும்பகோணம், மதுரை, சங்கரன்கோவில், திருச்செந்தூர் முதலிய ஊர்களில் எல்லாம் தி.மு..தான் 'ஓகோவென்று' வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

1971 தேர்தலில் சைவப் பழமான தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதுபோல -  ''இன்றைய ஆஸ்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்! நாத்திகம் என்பது பெரும்பாலான மக்களின் நலம்'' - என்றாரே! தந்தை பெரியார் பக்குவப்படுத்திய தமிழ் மண்ணின் அந்த மணமும், குணமும் வளமும் என்பதைத் தேர்தல் படிப்பினையாக பா... உள்ளிட்ட மதவாத சக்திகள் உணரட்டும்!

கோவில்களுக்குள்ளும் சமத்துவம் வரவேண்டும் என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கை என்பதைப் புரிந்துகொள்ளட்டும்!

No comments:

Post a Comment