தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திருவாளர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் 2021இல் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறியிருக்கிறது. 1996இல் ஒரு சட்டமன்ற உறுப்பினரையும், அதன் பிறகு 2001இல் 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருந்தது. இப்போது 2021-இல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பா.ஜ.க. பெற்றிருக்கிறது" என்று மார்தட்டுகிறார். கித்தாப்புப் பேசுகிறார் திரு. எல். முருகன்.
20 ஆண்டுகள் - அதாவது நான்கு சட்டமன்றங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காணாமல் போனது ஏன் - சுழியம் பெற்றது ஏன்? என்பதற்கான காரணத்தை விளக்குவாரா அவர்?
கடந்த 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியில்லாமல் 157 இடங்களில் தனியாக நின்றதே; எந்த ஓர் இடத்திலாவது வைப்புத் தொகையை (ஞிமீஜீஷீsவீt) திருப்பி வாங்கியதா - அன்றைய தேசிய செயலாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை உட்பட?
கழகமே இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்று சூளுரைத்தவர்கள் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்தது ஏன்? கூட்டணி வைத்தும் 20 இடங்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே கரை சேர்ந்தது ஏன்?
மாநிலத் தலைவராகிய எல். முருகனே தோல்வியைத் தழுவியது ஏன்? பிரதமரையே தன் தொகுதிக்குப் பிரச்சாரம் செய்ய வைத்தும் பிள்ளை பிழைக்கவில்லையே!
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மற்றொரு அமைச்சர் ஸ்மிருதிராணி, தேசிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா என்று எல்லாம் படை எடுத்துப் பிரச்சாரம் செய்தும் கிடைத்த பலன் என்ன?
இதில் என்ன இரங்கத்தக்க நிலை என்றால், பா.ஜ.க. வேட்பாளர்களே தேர்தல் விளம்பரங்களில் பிரதமரின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தவில்லை என்பதுதான்! மாநிலத் தலைவரே இதற்கு விதி விலக்கல்ல. அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர், புரட்சித் தலைவி ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று இரவல் வாங்கித்தானே தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தார்களா?
மதுரையில் மாநாடு ஒன்றைக் கூட்டச் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களிடையே மித்திரபேதம் செய்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் சூட்டி, அவர்களுக்கான சமூகநீதி இடஒதுக்கீட்டையும் காலி பண்ணி, திருகுதாளம் செய்த பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சரும், பூணூல் மேனியான குருமூர்த்திகளும் இருந்தனரே - இத்தேர்தலில் அவர்களின் நிலை என்ன?
குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டு செல்வி ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை செய்ததன் விளைவு என்ன? திரு. ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்து சேரவிருந்த பதவியைக் கோட்டை விட்டதல்லாமல் வேறு என்னவாம்?
திருவாளர் எல். முருகன் அவர்களுக்கு ஒரு சேதி தெரியுமா? தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குத் தலைவராக மற்ற மாநிலங்களைப் போல உயர் ஜாதிக்காரரை நியமிக்க முடியாது. காரணம் இது பெரியார் மண் என்பது பா.ஜ.க.வினருக்கே கூடத் தெரியும்தானே!
டாக்டர் கிருபாநிதி தமிழ்நாட்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாரே - அவர் அவமானப்பட்டதுதானே மிச்சம்! அவரே மனம் வெதும்பிப் பேட்டி கொடுக்கவில்லையா?
திருவாளர் எல். முருகன் இப்பொழுது உணராவிட்டாலும் நாளடைவில் பா.ஜ.க. என்றால் 'பார்ப்பன ஜனதா பார்ட்டி' என்பதை அனுபவத்தில் உணரத்தான் செய்வார்! இது கல்லின் மேல் எழுத்து!!
பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பங்காரு லட்சுமணன் அவர்கள் நியமிக்கப்பட்டாரே - அவரின் கெதி என்ன?
மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளராகக்கூட அவரை நிறுத்த முன்வரவில்லையே! பா.ஜ.க. என்பது உயர் ஜாதியினரின் கூடாரம் என்று அவர் சொல்லவில்லையா? உமாபாரதியும், கல்யாண் சிங்கும்கூட இந்தக் குற்றச்சாட்டை வைத்தது உண்டே!
தமிழக பா.ஜ.க.வின் தலைவராகப் பதவியேற்ற போது - "பெரியாரை அவமதித்துப் பேசாதீர்கள் - ஈ.வெ.ரா. என்றெல்லாம் சொல்லாதீர்கள்" என்று பா.ஜ.க.வினரைக் கேட்டுக் கொண்டாரே - திரு.முருகன் - அதனை பா.ஜ.க. முன்னணியினர் ஏற்றுக் கொண்டனரா?
இன்னொரு முக்கிய தகவல் உண்டு. பார்ப்பனரே இல்லாத சட்டமன்றம் இன்றைய தமிழக சட்டமன்றம் என்பது நினைவிருக்கட்டும்!
ஆம் - இது பெரியார் மண்ணே!
No comments:
Post a Comment