சென்னை,ஜூன்28- நோய்த்தொற்று சூழலைக் கருத்தில்கொண்டும், உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத் தலின்படியும் பெற்றோரிடம் கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டுமெனவும், பேருந்து உட்பட இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரவைமீறும் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகள் மீதான கல்விக்கட்டண புகார்களை பெற்றோர் 14417 என்ற இலவச எண்ணில்தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தடுப் புக்கான கட்டுப்பாடுகளால் அவ்வப்போது அறிவிக்கப் படும் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கல்வித்தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், பெரும்பாலான தனியார் பள்ளிகள் முழு கல்விக் கட்டணங்களை செலுத்துமாறு பெற் றோரை வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. ஒரு சில பள்ளிகள் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல் செய்கின்றன. மேலும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணைய வகுப்பில் பங்கேற்க அனுமதிப்பதில்லை எனவும் பெற்றோர் பலர் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் மீதான கல்விக் கட்டணப் புகார்களை 14417 என்ற இலவச உதவி மய்ய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கல்வித் துறைக்கு வரும் புகார்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் முதல்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும். அதன்பின்னும் தனியார் பள்ளிகள் தவறுகள் செய்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்கும் பெற்றோரின் தகவல் வெளியே பகிரப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment