‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்'' 78 ஆண்டுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 28, 2021

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்'' 78 ஆண்டுகள்

1943 ஜூன் 27 ஆம் தேதி - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்!

ஆம்! அன்றுதான் கடலூர் முதுநகர் செட்டி கோவில் மைதானத்தில் 10 ஆம் வயதில் சிறுவன் வீரமணி மேடையேற்றப்பட்டு முதல் முழக்கமிட்ட நாள். அவருடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களால் பகுத்தறிவுப் பாடமும், திராவிட இயக்கச் சிந்தனையும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கையும் ஊட்டப்பட்டதோடு பேச்சுப் பயிற்சி யும் அளிக்கப்பட்டார்.  அவர் எழுதித் தந்த உரையை மனப்பாடம் செய்து மேடையில் வீராவேசத்துடன் முழங்கிய சிறுவன்தான் வீரமணி.

சாரங்கபாணியாக இருந்தவருக்கு அண்ணாவின் கலிங்கராணி நாடகத்தின் கதாபாத்திரமான வீரமணி என்ற பெயரைச் சூட்டியவரும் ஆசிரியர் திராவிட மணி அவர்களே!

அக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழுக்கு நன்கொடையாக ரூ.103 அந்த மேடை யில் வழங்கப்பட்டது.

1944 ஜூலை 29 ஆம் நாள் திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்க வந்த தந்தை பெரியார் அவர்களை அன்றுதான் முதன்முதலில் 11 வயது சிறுவன் வீரமணி சந்தித்தார்.

'டார்பிடோ' ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் தான் தந்தை பெரியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்த மாநாட்டில் சிறுவன் வீரமணியின் பேச்சு அனைவரையும் ஈர்த்தது. அறிஞர் அண்ணா அவர்களே கேட்டு வியந்தார்.

அண்ணா அவர்கள் பேசும்போது, அவரின் உரையை முக்கியமாகக் குறிப்பிட்டார்.

''இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்ட லமும், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால 'ஞானப்பால்' உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் 'ஞானப்பால்' அல்ல - பெரியாரின் 'பகுத்தறிவுப்பால்தான்''' என்று சொன்னபோது, அய்யா பெரியார் அவர்களே சிரித்து மகிழ்ந்தார்.

கடலூர் சிறுவன் வீரமணியின் புகழ் அந்தச் சிறுவயதிலேயே கழகத்தினர் மத்தியில் பரவியது.

10 வயதில் முதல் மேடை - 11 வயதில் திரு மணத்தில் வாழ்த்து (17.6.1944). 11 வயதில் நாகை சென்று அவுரித்திடலில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் முக்கால் மணிநேரம் முழக்கம் (17.9.1944).

திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப் பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேலம் மாநாட்டில் (27.8.1944) இடைவெளியில் ஸ்டூல் மேல் ஏற்றப்பட்டு முழக்கமிட்டார்.

12 வயதில் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார் (14.4.1945).

13 வயதில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில் செங்கொடியை ஏற்றி வைத்தார் (6.1.1946).

அன்று மாலை தஞ்சையில் நடைபெற்ற முத லாவது கருப்புச் சட்டைப் படை மாநாட்டிலும் முழங்கினார். அப்பொழுது அவர் உரையைப் பாராட்டி கழகத் தோழர் ஒருவர் ரூ.10 நன்கொடை அளித்தார். (அந்தக் காலகட்டத்தில் ரூபாய் பத்து என்பது பெரிய தொகையே!)

அந்த 10 ரூபாயை ஆசிரியர் திராவிடமணியிடம் ஒப்படைத்தார். அன்று தொடங்கிய அந்தத் 'தொட்டில் பழக்கம்' இன்றுவரை மாலைக்குப் பதில் அவருக்கு அளிக்கப்படும் நன்கொடை கழகத்தின் கஜானாவுக்கு வந்து சேர்ந்துவிடும்.

13 வயதில் திருநெல்வேலியில் நடைபெற்ற நெல்லை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்று வீர முழக்கமிட்டார்.

திராவிடர் கழகத்தில் இந்த சின்ன வயதில் ஈடுபட்டு, வளர்ந்து மேலே வந்தவர் இவரின்றி வேறு எவரே உள்ளார்?

88 வயதில் 78 ஆண்டு பொதுவாழ்க்கை; 78 ஆண்டு சொற்பொழிவாளர். 87 ஆண்டு 'விடு தலை'யில் 59 ஆண்டு ஆசிரியர் என்பது எல்லாம்  எவருமே எட்ட முடியாத சிகரமாகும்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், திராவிடர் கழக மேடையில் ஆசிரியர் ஏறிய 78 ஆம் ஆண்டை(27.6.1943)யொட்டி, வரலாற்றுக் குறிப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிதான் நேற்றைய (27.6.2021) காணொலி கருத்தரங்கமாகும்.

டாக்டர் சோம.இளங்கோவன்

நிகழ்ச்சிக்குப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் தலைமை வகித்தார்.

அவர் தனது உரையில், ஆசிரியரின் நினை வாற்றலை வியந்தார்.

ஆசிரியர் அவர்கள் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது,  தந்தை பெரியார் அவர்கள் 'விடுதலை' ஏட்டில் (10.8.1962) ''வரவேற்கிறேன்'' என்ற தலைப்பில்  எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டி ருந்ததைக் குறிப்பிட்டார்.

வீரமணி அவர்கள் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றது - நமது கழகத்திற்குக் கிடைக்க முடி யாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.

ஆனைமலை நரசிம்மன், புலவர் இமயவரம்பன் ஆகியோரைப்பற்றியும் அதில் எழுதி இருந்தார். முழு நேரத் தொண்டர்கள் கிடைத்தால் ஆவலோடு வரவேற்கக் காத்திருக்கிறேன் - ஆண்கள் வந்தாலும் சரி, பெண்கள் வந்தாலும் சரி உடை, உணவு பெறலாம் என்றும் தெரிவித்திருந்ததை டாக்டர் சோம.இளங்கோவன் எடுத்துக் கூறினார்.

நார்வேயிலிருந்து த.சேஷாத்திரி

நார்வேயிலிருந்து உரையாற்றிய த.சேஷாத்திரி அவர்கள் - நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும், மறுக்க வேண்டியவற்றை மறுத்தும் வரக்கூடியவர். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இப்பொழுது மட்டுமல்ல, அவரின் சிந்தனைகள் அடுத்த நூற்றாண்டை நோக்கியும் இருக்கக் கூடிய தாகும் என்றார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து, அதனைப் பின் வாங்கச் செய்த தலைவர் நமது ஆசிரியர். 69 சதவிகித இட ஒதுக்கீடு நிலை பெற்றதற்கும் அவரே காரணம் என்று கூறினார்.

ஜப்பானிலிருந்து இரா.செந்தில்குமார்



முதலில் தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  மன்னார்குடியைச் சேர்ந்த இவர், ஆர்.பி.சாரங்கன், க.நல்லதம்பி, டெய்லர் அழகிரிசாமி ஆகியோரின்மூலம் இளைய வயதில் அய்யா பெரியாரை அறிந்ததாகக் குறிப்பிட்டார்.

ஜப்பானில் புரோக்குமின் என்று கருதப்படக் கூடியவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் உள்ள னர். காதல் திருமணம்தான் பெரும்பாலும் ஜப்பானில்.

அதேநேரத்தில், மணமகனோ, மணமகளோ புரோக்குமின் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றால், பெற்றோர் ஏற்பதில்லை.

ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தனர். எந்த அடிப்படையில் என்னை அழைத்தீர்கள் என்று கேட்டபோது, ஆசிரியர் வீரமணி அவர்களே எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார் என்ற தகவலை அவர்கள் சொன்னபோது, மிகவும் மகிழ்ந்தேன். (புரோக்குமின் பிரதிநிதிகள் ஒருமுறை சென்னை பெரியார் திடலுக்கு வந்து தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்ததுமுண்டு).

ஜப்பானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. இவ்வள வுக்கும் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி. திடீரென்று மேடை ஏறி ஒருவர் பாட ஆரம்பித்தார்.

 அந்தப் பாடல்,

''என்னடா தமிழா - நீ

பேசுவது தமிழா?''

என்ற காசி ஆனந்தனின் பாடல் அது! பாடியவர் வேறு யாருமல்ல, நமது நண்பர் வி.சி.வில்வம்தான் அவர். அப்பாடலை அவர் பாடியபோது, மிகுந்த வரவேற்பு கிடைத்தது என்றார்.

கனடாவிலிருந்து ஆசீப்



தந்தை பெரியாரை நாங்கள் பார்த்ததில்லை. தந்தை பெரியாரிடம் பயின்ற ஆசிரியரைப் பார்த்து நாங்கள் எல்லாம் இயக்கத்திற்கு வந்தோம்.

78 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பயணம் என்பது சாதாரணமானதல்ல.

தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்று வது என்பது எளிதல்ல - திராவிடர் கழகத்தில் அதிகம் பேர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழி னத்துக்கான போராட்டங்கள் என்று வரும்போது, அதில் முதலில் வந்து நிற்பவர்கள் அவர்கள்தாம்.

இந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கவுன் சிலராகக் கூட வர முடியாது!

தி.மு.க. பிரிந்தபோது, அண்ணாவுடன் ஏராளம் பேர் சென்றாலும், அய்யாவுடன் உறுதியாக நின்றவர் நமது ஆசிரியர்.

(16 வயதில் அப்படியொரு உறுதியான முடிவை எடுத்தது அசாதாரணமானதே!)

அய்யா, அம்மா மறைவிற்குப் பிறகு வருமான வரித்துறையினர் நமது அறக்கட்டளைமீது கண் வைத்தபோது, டிரிபியூனல் வரை சென்று வெற்றி பெற்றவர் நமது ஆசிரியர் என்று புகழாரம் சூட்டினார் தோழர் ஆசீப்.

ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பகுதியை எரிக்கும் போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் முனைவர் இலக்குவன்தமிழ்

இவர் உரை நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது. நான் மட்டுமல்ல, நம் மக்கள் பெரு நிலைக்கு உயர்ந் ததற்குக் காரணம் திராவிட தத்துவம்தான் என்றார் பேராசிரியர்.

எடுத்துக்காட்டாகத் தம் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கூறி,  அவரும் கண்கலங்கினார்; மற்றவர்களையும் கண் கலங்க வைத்தார்.

''நானும், என் தந்தையும் வீட்டுக்குள் நுழைந் தோம். எங்கள் அம்மாவைப் பார்த்து எங்கள் அப்பா சொன்னார், 'இனி நமக்குக் கவலையில்லை; இன்றைக்கு என் மகன் வரப்புகளையெல்லாம் வெட்டி முடித்துவிட்டான். இனி நமக்குக் கவலையில்லை - எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது - அவனுக்கு சாப்பாட்டை கூடப் போடு!'' என்றாரே!

அந்த நிலையையும் எண்ணிப் பார்க்கிறேன் - இன்று இருக்கும் நிலையையும் நினைத்துப் பார்க்கிறேன்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுகி றார்கள், அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம், திராவிடத்தால் வாழ்கிறோமே தவிர, வீழ்ந்துவிட வில்லை. அது வீழ முடியாத சமூகத் தத்துவம்!

வீழ்த்தப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் திராவிடம்! (உணர்ச்சிவயப்பட்டார்).

அந்தத் திராவிடத் தத்துவத்தை இன்றுவரை தூக்கி நிறுத்தும் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி!'' என்று குறிப்பிட்டார்.

-கவிஞர் கலி.பூங்குன்றன்

No comments:

Post a Comment