"திருப்பதி கோயிலுக்குப் போகிறார் ஒருவர். பெருமாளை தரிசித்து பிரசாதம் பெற்றுக் கொள்கிறார். கோயில் வாசலில் செய்தியாளர்கள் அவரை சந்திக்கிறார்கள். அவர் ஒரு வி.வி.அய்.பி. ''நான் இந்த நிலையை அடைந்திருப்பதற்கு கடவுள் அருளே காரணம்'' என்று அவர்களிடம் அவர் சொன்னது தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பாரத நாட்டின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான நீதியரசர் ரமணாதான் அந்த வி.வி.அய்.பி.
ஆம்! நமது கோயில்கள் பக்தனின் மனதில், வாழ்வில் மாற்றம் - முன்னேற்றம் ஏற்படுத்தும் உத்தி; உபாயம்; உபகரணம். அறநெறியிலிருந்து விலகாமல் வாழ பக்தர்களுக்குத் தூண்டுதல் தருவது கோயில்களின் புனித சூழல். அறவாழ்வு, பொருளுக்கும் இன்பத்திற்கும் உத்தரவாதமளித்து ''வாழ்வின் முடிவாய் விளங்குகிற'' வீடுபேறு எனும் மோட்சம் பெற பாதை காட்டுகிறது. கோயில் என்பது ஹிந்துக்களுக்கு அப்படிப்பட்ட ஆன்மிகக் களஞ்சியம்.
ஆனால், அந்தோ பரிதாபம்! நாளுக்கு நாள் ''கோயில்'' என்றால் சிலை திருட்டு, கோயில் சொத்து கபளீகரம், கோயில் நில ஆக்கிரமிப்பு, திருக்கோயில் சட்டதிட்டமான ஆகம விதிமீறல், கோயில் வழிபாட்டு மரபு தகர்த்தல் என்று வில்லங்கங்களே வீதியுலா வருவதால் சாமானிய பக்தன் மிரண்டு போகிறான். சர்வசக்தி வாய்ந்த தெய்வத்தின் சன்னிதியில் தன் மனக்குறை தீருவதற்கு வேண்டிக்கொள்வதற்காக நெகிழ்ச்சியான மனதுடன் வரும் பக்தனால் இந்த எதிர்மறை எகத்தாளங்களை சகித்துக் கொள்ள முடியாமல் போகிறது. பக்தியானது குமுறலாகிறது. மனது கொந்தளிக்கத் தொடங்குகிறது. தெளிவுடன் திரும்ப வேண்டிய பக்தன் திகைப்புடன் வீடு திரும்புகிறான். இது பக்தனுக்கும் சரி, அவன் வீட்டுக்கும் சரி, ஏன் ஊருக்குமே கூட நல்லதல்ல. குறிப்பாக கோயில் நடை திறக்கப்படாமல் உள்ள இந்த பெருந்தொற்றுக் கால கட்டத்தில்.
எனவேதான், மதில் சூழ்ந்த ஆலயத்தை வில்லங்கங்கள் முற்றுகையிடுகிற நிலையை ஏற்படுத்திய மதச்சார்பற்ற அரசும் அதன் 'ஹிந்து'' அறநிலைய தர்பாரும் ஆலயத் தலையீடுகளும் கோயிலிலிருந்து அடியோடு வெளியேற்றப்பட வேண்டும் என்கிறோம்."
ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதத்தில் (2.7.2021) தலையங்கம் இது.
(1) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த நிலைமையை அடைந்து இருப்பதற்குக் காரணம் திருப்பதி ஏழுமலையான் தானா?
அப்படியெனில் அவரின் படிப்பு, உழைப்பு, முயற்சி, ஆற்றல் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாதா? என்ற கேள்வி எழுமா எழாதா?
'முயற்சி திருவினையாக்கும்!' என்பதெல்லாம் வெற்றுச் சொற்கள்தானா? உயர் பதவிகளில் இருப்பவர்கள் இளைஞர் களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினால் அதுதான் சிறப்பானது.
இன்னொன்றும் முக்கியமானது - அதுவும் வைதிக மத நம்பிக்கையின் அடிப்படையிலானதுதான்.
பாரதத்தின் ஒரு பகுதியான வேதாந்தத்தின் ஒரு பகுதிதான் "உத்தர கீதை" என்பதாகும்.
அது என்ன சொல்லுகிறது?
1) துவிஜதர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர்களுக்குத் தெய்வம் அக்னியில்; முனிவர்களுக்குத் தெய்வம். இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சம பார்வை உள்ளவர்களுக்கு எங்கும் தெய்வம்" என்று கூறப்பட்டுள்ளதே- இதற்கு என்ன பதில்?
2) 'விஜயபாரதம்' இன்னும் சிலவற்றை எழுதித் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
"அந்தோ பரிதாபம்! நாளுக்கு நாள் கோயில் என்றால் திருட்டு, கோயில் சொத்து கபளீகரம் கோயில் நில ஆக்கிரமிப்பு, திருக்கோயில் சட்டதிட்டமான ஆகமவிதி மீறல், கோயில் வழிபாட்டு மரபு தகர்த்தல் என்று வில்லங்கங்களே வீதி உலா வருவதால் சாமான்ய பக்தன் மிரண்டு போகிறான்" இதுவும் ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதத்தின் புலம்பல்.
இதற்கெல்லாம் யார் காரணம்? நாம் பதில் சொல்லுவதைவிட அவர்களின் 'ஜெகத் குருவான சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே பட்டாங்கமாகப் பதில் கூறியிருக்கிறாரே!'
கேள்வி: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம், மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?
சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் பதில்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் பக்தர்களாகவேயிருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது - பணமுடை அதிகரித்து விட்டது.
('குமுதம்' - 12.9.1996)
விஜயபாரதத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும், புலம்பலுக்கும் பழிதூற்றல்களுக்கும், அவர்களின் 'பெரிய வாள்' சங்கராச்சாரியாரே- பளிச் சென்று சாட்டையடியாகப் பதில் சொல்லி விட்டாரே - இதற்குப் பதில் சொல்லட்டும் 'விஜயபாரதம்' உள்ளிட்ட வகையறாக்கள்.
No comments:
Post a Comment