தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்ககூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்ககூடாது

கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 23- கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர் களிடம் விண்ணப்பக்கட்டணம் பெறக் கூடாது என்று கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர் சேர்க் கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, விண்ணப்பக் கட்டணமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடம் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் பெறப்படுவதை எதிர்த்து, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே. கன்னையன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், பழங்குடியின மற்றும் தாழ்த் தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பத் திற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும்  உயர்கல்வித் துறை ஆகியவை அரசாணைகள் பிறப்பித்த நிலையில், அதை மீறும் வகையில் விண் ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த அறிக்கையில், விண்ணப்ப கட்டண வசூல் புகார் குறித்து உயர் கல்வித் துறை இணை இயக்குநர் சென்று விசாரணை நடத்தினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணத்தை கல்லூரி வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி செலுத்த வேண்டுமென்று கல்லூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடம் விண்ணப் பக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கல்லூரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் அந்த அறிக்கையை மனுதாரருக்கு கொடுக்குமாறு அரசு தரப் புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 கருநாடகத்தில் தொடர் மழை அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு

10,000 கனஅடி நீர் திறப்பு

சென்னை,ஜூன்23- கருநாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு  பகுதியில் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. நேற்று (22.6.2021) மாலை நில வரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 95.40 அடி நீர் இருந்தது. அணைக்கு  விநாடிக்கு 19,714 கனஅடி நீர்வரத்து உள்ளது. 5,108 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் கபினி அணைக்கு விநாடிக்கு 7,390 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து  விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி  திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. இது மேட்டூர் அணைக்கு ஓரிரு நாளில் வந்தடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

 

No comments:

Post a Comment