பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

பெரியார் மறைந்தார் இல்லை, எங்கும் நிறைந்தார்,

தமிழ்நாட்டில் பெரியார் எதிலும் நிறைந்தார் 

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 

26.06.2021 அன்று மாலை காணொலிக்   வாயிலாக சென்னை, கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுச்சேரி மண்டலங்களுக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு   நிறைவுரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:

மகிழ்ச்சியில் நீந்திக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் இந்த பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்திய அத்தனை செயல் வீரர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.  இளைஞர்களே இருக்கமாட்டார்கள், பெரியாரைப் பின்பற்றி வயதானவர்கள் தான் இருப்பார்கள், அதுவும் ஊருக்கு ஒருவர் இருவர் தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு தலைவர் என்று சொன்னால், உலக அளவிலே தந்தை பெரியார் என்ற அந்த வரலாறு பதிவாகிக் கொண்டிருக்கிறது.

நான் தலைவன் மட்டுமல்ல - உங்களுக்கு தோழன், தொண்டன்

இந்த கரோனா கால சூழ்நிலையில் நாம் முடங்கிப் போய்விடக்கூடாது, நாம் அடங்கிவிட மாட்டோம் என்பதை அறிவிக்கின்ற வகையில் சிறப்பான வகையிலே, இவ்வாறு அருமையான காணொலி வாயிலாக பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்த தோழர்கள், அன்பு கட்டளையிட்டாலும் கூட, அந்த அன்புக்கட்டளை என்பதைக் கூட சாதாரணமானதாகக் கருதாமல், அதனை ஓர் ஆணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் தலைவன் என்று அழைக்கப்பட்டாலும் கூட உங்களுக்கு தோழன், உங்களுக்கு தொண்டன், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த மாணவச் செல்வங்களுக்கெல்லாம் நான்வெறும் தாத்தா மட்டுமல்ல, உங்களோடு இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கக் கூடிய ஓர் ஏணிக்காரன், ஒரு தோணிக்காரன், ஒரு கோணிக்காரன். ஏணி எல்லோரையும் உயரத்திற்கு ஏற்றிக்கொண்டே இருக்கும், தோணி கரை சேர்த்துக் கொண்டே இருக்கும், கோணி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டிவைத்துக்கொள்ளும்.

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றிய பிறகு தான் வெளிச்சம்

இங்கே பயிற்சி பெற்ற மாணவி சங்கீதா அவர்கள் பேசும்பொழுது உருக்கமாக சொன்னார்கள், அவர் ஒரு கிராமத்து பிள்ளை. முதலில் அவர் பேசும்பொழுது முகம் தெரியாத அளவிற்கு இருட்டாக இருந்தது. பின்னர் வெளிச்சம் வந்தது, அதுபோலவே நம்முடைய வாழ்க்கையிலும் அப்படித்தான், நம்முடைய இயக்க வரலாறும் அப்படித்தான், பெரியார் தோன்றுவதற்கு முன்னால் இருட்டு, தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றிய பிறகு வெளிச்சம். அதனையே நீங்கள் தத்துவமாகப் பார்க்கலாம், நம்முடைய கழகக் கொடியிலே இழிவையும் எழுச்சியையும் காட்டக்கூடிய வகையில் கருப்பும், நடுவில் சிவப்பும் இருப்பது கூட இருட்டும் வெளிச்சமும், அறியாமையும் பகுத்தறிவும் என்று புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுக்கள்

கரோனா காலத்தில் மிகச் சிறந்த பணியை நம்முடைய தோழர்கள் செய்திருக்கிறார்கள், நாம் இந்த இயக்கத்திற்கு வந்ததைவிட, நம்முடைய கடைசி காலத்தில் நாம் கண்மூடப் போகிற நேரத்தில் இயக்கத்திற்கு அழைத்துவரப்பட்டு அறிவுக்கண் திறக்கப்பட்ட இளைஞர்கள் எத்தனை பேர் என்கிற கணக்கை பார்க்கும்போது தான் மிக மகிழ்ச்சியாக இருக்கும். ஆகவே இயக்கப் பொறுப்பாளர்கள்அதை உணர்ந்து கடமை ஆற்றுகிறார்கள்.

இயக்கம் சிறப்பான வகையிலே இயங்குகிறது, பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா என்று கேட்டார்கள், இருக்கும் என்பது மட்டுமல்ல இதோ இளைஞர் பட்டாளமாக, பாசறையாக இருக்கிறது என்பதை இந்த கரோனா காலத்தில், ஊர் அடங்கல், முடங்கல் காலத்திலும்கூட நாம் அதை பறைசாற்றி கொண்டிருப்பதற்கு ஒத்துழைத்த அருமை இயக்கத் தோழர்களே, வகுப்பெடுத்த பேராசிரியர் பெருமக்களே, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஈர்ப்போடு,  உல்லாசப் பயணமாக கருதாமல், பொழுதுபோக்கு என கருதாமல், கேளிக்கையாக கருதாமல், வீணாக நேரத்தை செலவழிக்காமல், நேரத்தின் வெளிப்பாடு என்கிற வகையிலே ஒரு வாழ்க்கை பாடமாக, வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்கிற வகையில் அருமையாக பங்கெடுத்து இருக்கும் மாணவச் செல்வங்களே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லப்படுவது போல பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுக்கள். இப்போது பயிற்சி பெற்றிருக்கும் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அது மிக மிக முக்கியம்.  நாற்றுகள் நாற்றுகளாகவே என்றைக்கும் இருக்க முடியாது, செழுமையாக வந்த  நாற்றுகளை செப்பனிடும் வேளாண்மையின் அடுத்த பணி என்னவென்றால், உரங்கள் போடப்பட்டு, பூச்சிகள் அதை அழித்து விடாமல் பார்த்து, வளர்ச்சி அடையச் செய்து, மழை வெள்ளம் போன்ற இயற்கையினுடைய அழிவிலிருந்து காப்பாற்றி, கதிர் மணிகளாக களத்துமேட்டில் பார்க்க வேண்டும். எனவே பெரியாரியல் பயிற்சி பெற்ற அருமை மாணவச் செல்வங்களே,  உங்களின் வரவு நல்வரவு, உங்களை இருகை ஏந்தி மார்போடு அணைத்து தழுவக் கூடிய அளவிற்கு அன்போடு ஒரு தாத்தா நிலையிலே, இதோ எங்களுடைய பேரச் செல்வங்கள், எங்கள் மாணவச் செல்வங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திராவிட இயக்க குடும்பத்திலே ஜாதி இல்லை, மதம் இல்லை

சங்கீதா என்ற மாணவர் கூறினார்: தனக்கு தாய் இல்லை என்று, நான் கூட என் தாயை பார்த்ததில்லை அன்னை மணியம்மையாரைத் தான் தாயாக பார்த்திருக்கிறேன், பிறகு ஒவ்வொரு தாய்மாரும், ஒவ்வொரு சகோதரிகளும் எனக்கு தாயாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் அன்பும், பாராட்டும், உபசரிப்பும் தான் எனக்கு தாலாட்டாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த கொள்கை குடும்பத்தில் நீங்கள் இணைந்து இருக்கிறீர்கள், இந்த இயக்க குடும்பத்திலே ஜாதி இல்லை, மதம் இல்லை, மிகப்பெரிய அளவிற்கு கொள்கை உண்டு, மனிதநேயம் உண்டு, சுயமரியாதை உண்டு ஆகவேதான் உங்களைப் போன்றவர்களை நாங்கள் எப்போதும் இந்த குடும்பத்தின் நல்வரவுகளாக மட்டுமல்ல சிறந்த உறவுகளாகவும் எண்ணுகிறோம். அந்த வகையிலே இங்கே இணைந்து இருக்கும் இந்த பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

எங்களுக்கு வருவாய் என்பது ரூபாய் அல்ல, உங்களின் பக்குவம் தான்

புத்தகங்கள் வாங்குவதற்கு கூட வாய்ப்பு இல்லை என்று யாராவது கருதினால் எனக்கு கடிதம் மூலம் தெரிவியுங்கள். உங்களுக்கு புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கு வருவாய் என்பது ரூபாய் அல்ல வருவாய் என்பது உங்கள் அன்பு, உங்கள் பக்குவம். நீங்கள் மனிதர்களாக நின்று, திராவிட சமுதாயத்தை திருத்தி மானமும் அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்க வேண்டும். அதைவிட வேறு பணி வேறு தொண்டு எனக்கில்லை என்று சொன்னார்களல்லவா அறிவாசான் தந்தை பெரியார்?  அந்தப் பணியை செய்வதற்கு நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு இருக்கிறோம், உங்களை எங்கள் தோள் மீது அமர்த்திக் கொண்டு உற்சாகப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம், எனவே தயக்கமில்லாமல் கேளுங்கள், உங்கள் வாழ்வில் பிரச்சினையா? மனம்விட்டுப் பேசுங்கள், இந்த இயக்கம் ஒரு குடும்பம் ஆகியிருக்கிறது, வயலிலே இருக்கும் நாற்றுகள் போன்றவர்கள் நீங்கள். நீங்கள் என்றென்றைக்கும் திராவிடக் கொள்கைகளை ஏற்று எதிர்காலத்திலே சிறந்து விளங்கவேண்டும் என்று நாம் மனதார விரும்புகிறோம்.

பெரியாரை அறிவோம்பெரியாரை சுவாசிக்கிறோம்

அருமை மாணவச் செல்வங்களே, உங்களை நேரில் பார்க்கக் கூடிய வாய்ப்பு இல்லாவிட்டாலும் காணொலி மூலமாக பார்த்து அத்தனைபேரையும், இந்த வகுப்பிலே பங்கெடுத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்றாலும் கூட நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என்று சொல்லுவதை விட, கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகில் இருக்கின்ற நேரத்தில், நீங்கள்தான் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் என்ற வகையிலே உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள். அதனை மேலும் மேலும் மெருகேற்ற வேண்டும். பெரியாரை அறிவோம், பெரியாரை சுவாசிக்கிறோம் அப்படி அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். இதற்கிடையில் உங்களுடைய எதிர்காலம், உங்களுடைய படிப்பு, உங்களுடைய வாழ்வில் இவை எல்லாவற்றுக்கும் எந்த சிக்கல் ஏற்பட்டாலும் எங்களை அணுகுங்கள் உங்களை காப்பதற்கு உலகம் முழுவதும் தோழர்கள் இருக்கிறார்கள் அனைவரும் உறவினர். நம்முடைய உறவு என்று சொன்னால்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்கிற அடிப்படையை கொண்டது. மற்றவர்கள் இதை எப்படி எடுத்துக் கொண்டாலும் அது வெறும் வாய்ப்பாட்டு. ஆனால் நமக்கு அது வாழ்க்கை நெறி அப்படிப்பட்ட யாதும் ஊரே யாவரும் கேளிர், கொள்கை ரீதியாக சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பது தான். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் அமெரிக்காவிலே இருந்தாலும்கூட நாம் கேட்காமலேயே ஓடி வந்திருக்கிறார்,  அந்த மாணவரை வரவேற்க தயாராக இருக்கிறோம், யாரென்று அடையாளம் காட்டுங்கள் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்என்று. எனவேதான் தோழர்களே நாற்றுகளை பாதுகாத்து நெல்மணிகள் ஆக்குவது வரை நமது கடமை இருக்கிறது. கொள்கை மணிகளாக அவர்களை உருவாக்குங்கள்.

கரண்டி பிடித்த கரங்கள் இன்றைக்கு பேனா பிடித்திருக்கிறது.

அதே போலவே தோழர்களே, மகளிருக்கும் இதேபோல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என்று இங்கே நம்முடைய பொறுப்பாளர்கள் கூறினார்கள், மிகச் சிறப்பாக ஜூலை 15ஆம் நாள் தொடங்கி ஜூலை இறுதி ஆவதற்கு உள்ளாக அவர்கள் ஏற்பாடு செய்யலாம், இந்தப் பயிற்சி வகுப்பை போன்று மூன்று நான்கு மண்டலங்களாக மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய மகளிர் அணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர்களுடன் கலந்துகொண்டு ஏற்பாடு செய்து நடத்தலாம். திருப்பத்தூரில் இருந்து தோழர் கவிதா அவர்கள் எழுதிய கடிதம் பார்த்துப் படித்து வியந்து போனேன். எவ்வளவு பெரிய எழுத்தாற்றல், கருத்தாற்றல் அவர்களிடம் இருக்கிறது, கரண்டி பிடித்த கரங்கள் இன்றைக்கு பேனா பிடித்திருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கை செங்கோலாக, போர்வாளாக மாறியிருக்கிறீர்கள். மென்மை என்பது விடைபெற்றுக்கொண்டு, எதிர்த்துப் போராடும் பொழுது வன்மை எங்களிடத்தில் இருக்கும், அதேநேரத்தில் கொள்கை என்று வரும்பொழுது திண்மை என்பது எங்களை வழிநடத்தும், என்ற உணர்வோடு நம்முடைய மகளிர் அணித் தோழர்கள் இருக்கிறார்கள் என்பதற்கேற்ப நீங்கள் பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பொழுது அதில் இருந்த மாணவச் செல்வங்கள் தான் அனைத்து வேலைகளையும் செய்வார்கள், ஒரு ஆண் ஆசிரியரோ மற்றவர்களோ உதவிக்குச் செல்ல மாட்டார்கள், தேவையில்லை அவர்கள், நாங்களே அதற்கான பயிற்சியை பெற்றிருக்கிறோம் எங்களால் அதனை செய்ய முடியும் என்று அவர்களே செய்வார்கள் அதுபோன்று நீங்களே தொடர்பு கொள்ளுங்கள் ஆலோசனைக்கு மட்டும் பொறுப்பாளர்களை பயன்படுத்துங்கள்.

புத்தகம் வாங்க வசதி இல்லாமல் படிக்க ஆர்வம் இருக்கக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள், இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற பெரியார் பண்ணையின் திராவிட நாற்று என்ற அடையாளத்தோடு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் கதவைத் தட்டலாம் எந்த நேரத்திலும் எந்த உதவியையும் கோரலாம், எல்லாவகையிலும் உங்களுடைய வாழ்வும் பாதுகாப்பும் வளர்ச்சியும் எங்களுடைய கவலைக்குரிய கடமையாகும் என்பதை இந்த நேரத்திலே அறிவிப்பாக செய்கிறேன்.

'விடுதலை' கற்க கெடுதலை நீக்கக்கூடிய போராளியாவான்

தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விழி திறந்து அவர் விழி மூடினார். அய்யா அவர்களின் அந்த எதிர்நீச்சல் அது எப்படிப்பட்டது என்றால்? மற்ற தலைவர்களுக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம் என்பதை பற்றி வகுப்பிலேயே நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதையேதான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

நேற்றையவிடுதலையைப் படித்துப்பாருங்கள். அதிலே மருத்துவர் டாக்டர் சோம இளங்கோவன் அவர்கள் பெரியார் படிக்காதவரா, படிப்பு என்பது என்ன, கற்றல் என்பது என்ன, என்பதை நன்றாக விளக்கியுள்ளதைப் பார்த்து உணர்ந்து பார்க்க வேண்டும் இதற்கெல்லாம் அழகான விளக்கம் எழுதி இருக்கிறார் அதை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். அதுவும் ஒரு வகுப்பு எடுத்தது போல் தான் அமைந்திருக்கிறது. அன்றாடம் விடுதலையை படிப்பதென்பது அது ஒவ்வொரு நாளும் உங்கள் படிப்பிலே விட்டுப் போனதை நினைவூட்டுகிறது. ‘விடுதலையின் வாசகர் தொடர்ந்துவிடுதலையை படித்துக்கொண்டே இருந்தால்கண்டது கற்கப் பண்டிதனாவான்என்பதைவிட விடுதலை கற்க கெடுதலை நீக்கக்கூடிய போராளியாக மாறக்கூடும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படும். உலகத்தினுடைய ஒவ்வொரு புதிய புரட்சிப் பாதையினுடைய கருத்துகளை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஒப்பற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார்

தந்தை பெரியார் ஒரு ஒப்பற்ற தலைவர், சுய சிந்தனையாளர், நல்ல வாய்ப்பாக அவர் கல்லூரியிலோ பல்கலைக் கழகங்களிலோ படித்து பட்டதாரியாக ஆகவில்லை, ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் ஒருவன் இன்றைய கல்வியைக் கற்று பட்டதாரியாக ஆகலாம். இவையெல்லாம் ஒரு அடையாளத்திற்கானவையே, அறிவுக்கு சுயசிந்தனை என்பதுதான் மிக முக்கியம் அந்த வகையிலே ஒப்பற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார். ஏன் எதற்கு எப்படி எதனால் இப்போது என்ற கேள்விகளை அவர் மேலும் மேலும் கேட்டு அறிவுக்கு முதலிடம் கொடு, அறிவு இருந்தால் மட்டும் போதாது மான உணர்ச்சியும் இருக்க வேண்டும்மானமும் அறிவும் மனிதர்க்கு அழகுமனிதனின் அடையாளமே அது தான் அந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும்  மக்கள் பெரும்பாலான தலைவர்கள் நாட்டிலே இந்த சமூகத்திலே எதை விரும்புவார்களோ அதைச் சொல்லி கைதட்டு பெறுவார்கள், ஆனால் தந்தை பெரியார் எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய தலைவர் மட்டுமல்ல எதை மக்கள் எதிர்ப்பார்களோ அதையே துணிச்சலாகச் சொல்லி கல்வீச்சை எதிர்கொண்டவர், மலத்தை அவர்மீது எறிந்திருக்கிறார்கள், செருப்பை எறிந்திருக்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் செய்தார்கள், இவற்றால் மனதாலும் உடலாலும் காயப்பட்டு இருக்கிறார் பெரியார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உழைப்பு உழைப்பு என்று அன்றாடம் மக்களைப் பற்றிச் சிந்தித்து செயல்பட்டதன் விளைவாக, எந்த மக்கள் அவரை எதிர்த்தார்களோ அவர்களே மாலை போடும் அளவிற்கு இந்த சமூகம் மாற்றம் அடைந்தது. கடலூரில் தந்தை பெரியாருக்கு சிலை இருக்கிறது அதில் என்ன குறிப்பு இருக்கிறது என்றால்செருப்பு போட்ட இடத்தில் சிலை ஒன்று முளைத்திருக்கிறது”- பாம்பு போட்டவர்கள் பணம் கொடுத்து வரவேற்றார்கள், இப்படி தன்னுடைய  வாழ்நாளிலேயே அதனை பார்த்த தலைவர் உலக வரலாற்றில் தந்தை பெரியாரைத் தவிர வேறு யாரும் இல்லை.

எதிர்நீச்சல்காரர் தந்தை பெரியார்

நான்விடுதலைக்கு ஆசிரியராக பொறுப்பு ஏற்ற பிறகு அய்யா அவர்களின் பிறந்த நாள் மலரை வெளியிட அய்யா பெரியார் அவர்களிடம்உங்களுடைய பிறந்தநாள் செய்தியாக ஒரு கட்டுரை கொடுங்கள்என்று கேட்பேன், அவர் யோசித்து எழுதி கடைசி நேரத்தில்  கொடுப்பார். 1962 லிருந்து 1973 வரை 10 ஆண்டுகள் வெளிவந்த பிறந்தநாள் செய்திகள் ஓர் ஆய்வுக்குரியவை. ஒவ்வொரு ஆண்டும் சமூகத்தின் சூழ்நிலை, தந்தை பெரியாரின் மனநிலை போன்ற அனைத்தும் அந்த கட்டுரைக்குள் இருக்கும். 90 வயதிலும் தன்னுடைய உடல் ஒத்துழைக்காத போதும், தந்தை பெரியார் அவர்கள் அம்மா அம்மா என்று வலி தாங்க முடியாமல் கதறிய சூழ்நிலையிலும் மக்களிடம் பேசுவதை நிறுத்தியதில்லை. எதிர்நீச்சல் ஒருபக்கம் எதிரிகளின் தொல்லை ஒரு பக்கம், துரோகம் ஒரு பக்கம் இவைகளையெல்லாம் தாண்டி இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவருடைய மன வலிமை இருந்தது. ஆனால் முதுமை தாக்குகிறது. அது இயற்கை இயல்பு அதைப் பற்றி சொல்லுகிற நேரத்திலே இளைஞர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொது வாழ்க்கை அவருக்கு கொடுத்த பரிசு எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  கேளுங்கள் அருமை மாணவச் செல்வங்களே, அதாவது 90ஆவது ஆண்டுபிறந்தநாள் மலரில்எனது நிலைஎன்ற கட்டுரையில்- “எனக்கு வயது 90 உடல் நிலை மோசம் மிகவும் மோசம் கை கால் நடுக்கம் அதிகம் சிறுநீர் கழிக்கும் போது சத்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். தூக்கம் சரியாக வருவதில்லை நினைத்த போது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டு ஏப்பம், காற்று பிரிவு ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணம் ஆகவில்லை முன்போல் உணவும் சரியாக உட்கொள்ள முடியவில்லை எந்த காரியம் பற்றியும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுகிறது ஏப்பம் வந்தபிறகு குறைவாக இருக்கிறது எதைப்பற்றியும் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்ததை நினைத்தபடி ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள்என்று குறிப்பிடுகிறார்.

ஆனாலும் அதற்குப் பிறகும் அவருடைய செயல்பாடு குறையவில்லை. 91ஆவது பிறந்தநாள் மலரில் அய்யா அவர்கள் எழுதியதையும் பாருங்கள். 90ஆவது பிறந்தநாள் மலரில் எனது நிலை என்ற கட்டுரையின் முடிவில் துறவியாக போய் விடலாமா என்று கூட எண்ணத் தோன்றுகிறது என்று எழுதி இருக்கிறேன் இன்று எனக்கு அப்படி இல்லை அந்த எழுத்தை பார்த்த உயர்திரு . காமராசரும், அறிஞர் அண்ணாவும் எனக்கு தெரிவித்ததை போல அதாவது இப்போது உங்களுக்கு எதற்காக கவலை நீங்கள் நினைத்த காரியம் எது நடைபெறாமல் இருக்கிறது கவலையை விட்டுவிடுங்கள் என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இன்று எனக்கு உள்ள குறையெல்லாம் தமிழ் சமுதாயத்தில் விபீஷண பரம்பரை வளர்ந்து வருவதுதான். இது தமிழரின் சில வகுப்பாருக்கு இயற்கை என்றாலும் வருந்தத்தக்கதுஎன்று சொல்லிவிட்டு அந்த கட்டுரையின் இறுதியில் விபீஷணர்கள் திருந்துவார்களாக என்று முடித்திருக்கிறார்.

இதுதான் பெரியார் எதிர்நீச்சல். இவ்வளவு வலி இருந்த போதும் அவருடைய மன உரம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

பெரியார் என்பது தான் வாழ்க்கை நெறி, வழிகாட்டு நெறி

பெரியாருடைய வாழ்க்கை திருப்பங்கள் எப்படி என்பதை இளைஞர்களே உங்களுக்கான பாடமாக இதைப் பாருங்கள். பெரியார் என்பது தான் வாழ்க்கை நெறி வழிகாட்டு நெறி எப்பொழுதெல்லாம் நமக்கு துன்பமும் சோர்வும் சலிப்பும் சங்கடமும் வெறுப்பும் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பெரியார் நமக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி, அதில் இருந்து வெளிவரச் செய்யக் கூடியது, இருட்டில் இருந்து வெளிவரக்கூடிய வெளிச்சம் போன்றது. பிரச்சினைக்குரிய பெரிய தீர்வாக இருக்கும் அதை மறந்துவிடக்கூடாது.

எனவே பெரியாரை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்றால் ஏதோ புதிதாக ஒரு செய்தியை புரிந்து கொண்டீர்கள் என்பது மட்டுமல்ல அதைத் தாண்டி உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய அரிய பாடத்தை வாழ்வியல் பாடத்தை பெற்றுள்ளீர்கள். உங்களை பக்குவப் படுத்தி உள்ளீர்கள் கல்லூரி படிப்பு பல்கலைக்கழகப் படிப்பு வேலைக்கு பக்குவப்படுத்தும் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்கு பக்குவப்படுத்தும். பொருளை சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் பக்குவப்படுத்தும். அதுவும் வாய்ப்பு கிடைத்தால்... ஆனால் அறிவை சம்பாதிப்பதற்கு, மானத்தை சம்பாதிப்பதற்கு பெரியார் பயிற்சி ஒன்றுதான்.

புரட்சிக்கவிஞர் அழகாக ஒன்றை சொல்லுவார்கள் - ‘உன்னை விற்று கொள்ளாதீர்என்று முதல் கவிதைத் தொகுப்பில் கூறினார்கள். பெரியார் சொன்னார்நீ பெற்ற பெருமைகளையெல்லாம் மற்றவர்களிடத்தில் அடகுவைத்து, அடகு வைத்துக் கொண்டு மீட்ட முடியாத அளவிற்கு அதை செய்யாதீர்கள்என்று சொன்னார். எனவே இளைஞர்களே நாம் நடத்தப் போகின்ற மிகப்பெரிய அறிவியக்கம், அது நம்மை மீட்பதோடு நிற்பதில்லை, நாட்டை மீட்கும், அடகு போனவர்களை மீட்கும், சுய நினைவுகளை திருத்தும். எனவே இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நண்பர்களே இன்றைக்கு தந்தை பெரியார் உடலால் மறைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வரியை திராவிடம் வெல்லும் என்று தான் சொல்லி முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆளுநர் உரைக்கு பதில் சொல்கிறபோது, இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த உரையை தொடங்குகின்ற நேரத்தில்தடியை தட்டி எழுப்பிய தந்தை பெரியார் வழியில் நின்றுஎன்று தனது உரையை தொடங்குகிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதை நெறிதான் இந்த ஆட்சிக்கு வழிமுறை என்று ஆளுநர் படிக்கிறார்.

எனவே பெரியார் மறைந்தார் இல்லை, எங்கும் நிறைந்தார், தமிழ்நாட்டில் எதிலும் பெரியார் நிறைந்தார் என்ற இந்த உணர்வை எந்தக் கொம்பனாலும் மாற்றிவிட முடியாதுதிராவிடம் வெல்லும்என்பது  வெறும் அலங்கார வார்த்தை அல்ல, ஆசை வார்த்தை அல்ல, நடைமுறை உண்மை.

வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.

தொகுப்பு: நூலகர் நெல்லுப்பட்டு

வே. ராஜவேல், தஞ்சை  

No comments:

Post a Comment