உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத் தன்மை - சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 23, 2021

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத் தன்மை - சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும்!

குடியரசுத் தலைவருக்கு தி.மு.. வலியுறுத்தல்

சென்னை, ஜூன்23- உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து சமூக பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. இந்திய அரசமைப்புச் சட்ட வரைவைத் தாக்கல் செய்து, சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பேசும் பொழுது, "இந்திய அரசமைப்பு என்பது ஒரு கூட்டாட்சி அரசமைப்பு என் றும், அது இந்தியாவை ஒரு கூட்டமைப்பைக் கொண்டிருக்கும் வகையில் நெறிமுறைகளும் வழிவகைகளும் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அதே நேரத்தில் நாட்டின் ஒற்றுமைப்பாட்டைப் பராமரிக்க இன்றியமையாத அனைத்து அடிப்படை விஷயங்களிலும் ஒரே மாதிரியான தன்மை இருக்கும் வகையில் அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதுஎன்றார்.

இது அரசமைப் புச் சட்டம் மூலம் இயங்கும் கூட்டுறவு கூட்டாட்சி உணர்வு என்றும், அரசமைப்பின் முதலாவது பிரிவு, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறை செய்துள் ளது. ஒரு ஒருங்கிணைந்த நீதித் துறையிலிருந்து இந் திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் செயல் படும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது என்றும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உரையை வில்சன் எம்.பி. அக்கடிதத்தில் சுட்டிக்காட்டி யுள்ளார்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 124ஆவது பிரிவு, உச்சநீதிமன்ற நீதி பதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கான தகுதிகளையும், பிரிவு 124 (3) (a) உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக் கப்படுபவர்களுக்கான தகுதிகளையும், பிரிவு 124 (3) (b) உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கான தகுதி களையும் வரையறுத்துள்ளது.

இப்படி, அரசமைப்புச் சட்டம் அறி வுறுத்தியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், நேரடியாக நீதிபதிகளாகும் தகுதியைக் கொண்ட உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்குரைஞர்களையும் உச்சநீதிமன்றத்தில் நியமித்து அரசமைப்பின் அடிநாதமாக விளங் கும் ஒன்றிணைந்த கூட்டாட்சியின் உணர்வுக்கு ஒரு சான்றாக அவர் கள் நிற்கின்றனர். அதனால், உச்ச நீதிமன்றத்தில், மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஏனெனில், வழக்குகளின் இறுதி நடுவராக, நீதியை நிலை நாட்டுவதோடு, மாநிலங்களுக்கிடையேயான பிரச் சினைகளுக்குத் தீர்வுகள், முறையீடுகள், மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவை தொடர்பான நீதியையும் தீர்மானிக்கிற உச்சநீதிமன்றத்தில், மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் இருப்பது அவசியமாகிறது.

ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் , மாநிலங்களுக்கு ஏன் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை . மேலும், மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத நிலையில், அது நீதிபதிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்துள்ள மாநிலங்களையும், மாநிலத்தைச் சார்ந்த மக்களையும் பாதிக்கும்.

நீதிபதிகளைப் பொறுத்தவரையில், அவர்களின் இலாபகரமான பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு தேசத்திற்குச் சேவை செய்யவே நீதித்துறைச்சேவையில் நுழைகிறார்கள்.

எனவே, நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் பணி செய்வதற்கான அவர்களுடைய முறை வரும்போது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வேறு மாநிலங் களுக்கு பிரதிநிதித்துவம் அளித்து நீதிபதிகள் நியமிக்கப்படும் நிலையில், அது அவர்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி விடும்.

மாநில மக்களை அவமதிப்பதாகும்!

மேலும், மக்களைப் பொறுத்தவரை யில், அரசமைப்பு அதன் அனைத்து நிறுவனங்களிலும் ஒரு ஒருங்கிணைந்த கூட்டாட்சியை எதிர்பார்க்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு சில மாநிலங்களில் இருந்துதான் உச்சநீதிமன்றத்தின் நியமனங்கள் நடைபெறும் நிலை இருக்க முடியாது. இது மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அனைத்து மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்தின் நீதிக்குழுவை அலங்கரிக்கும் திறன் கொண்ட திறமையான நீதிபதிகள் உள்ளனர். எனவே, அவர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லையெனில், அது அவர்கள் சார்ந்துள்ள மாநில மக்களை அவமதிப்பதாகும்.

எடுத்துக்காட்டாக, வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக்கொண் டால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரே ஒரு நீதிபதிக்கு மட்டுமே தற்போது உச்சநீதிமன்றத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும், தற்போது நடைமுறையில் உள்ள எண்ணிக்கைக்கும் காரணமற்ற வேறுபாடுகள் உள்ளன.

எனவே, உரிய நடைமுறைகளை பின்பற்றி அனைத்து மாநிலங்களில் இருந்தும், உரிய பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment