தேவநாதனும், பத்ரிநாராயணனும் நினைவிருக்கிறதா?
மின்சாரம்
தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நூறு நாள்களுக்குள் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் வழங்கப்படும் என்று சொன்னாலும் சொன்னார்!
பார்ப்பனக் கூட்டம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுது கூக்குரல் போடுகிறது.
இருக்காதா பின்னே? அடி வயிற்றிலே கை வைத்து விட்டார்களே! அன்றாடம் ஆறு கால பூஜை - அறுசுவை படையல், அவர்களின் தட்டில் பணக்குவியல் எல்லாம் அவாள் வயிற்றில் மட்டும்தானே அறுத்துக் கட்டப்படுகிறது! அதற்கு ஆபத்து என்றால் சும்மா இருப்பார்களா? சும்மா ஆடுமா சுயஜாதிக் கூட்டத்தின் குடுமிகள்?
திசை திருப்புவதற்கு ஏதாவது எழுத வேண்டாமா? இவ்வார ‘துக்ளக்‘ ஏட்டைப் புரட்டினால் (30.6.2021) பக்கத்துக்குப் பக்கம் ஒப்பாரி! ஒப்பாரி!! ஒப்பாரியே!!!
கல்லு என்று எங்களுக்குத் தெரியாதா - இந்தக் கடவுள்கள்? இதை வைத்துத்தானே இத்தனை ஆண்டுகளாக ஏய்த்துப் பிழைத்தோம் - எங்காத்துப் பிள்ளையாண்டான்களை உச்சநீதிமன்றத்தில் உட்கார வைத்தோம்!
எங்கள் ஆத்து தேவநாதன்கள் கோயில் கருவறைக்குள் கருவை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்த போது, கடவுள் என்ற ஒருவர் இருந்திருந்தால் தேவநாதனின் குடுமியை இழுத்துப் போட்டு நான்கு மிதி மிதித்திருக்க மாட்டாரா?
ஆண்டாள் கோயில் அர்ச்சகர் பார்ப்பான் பத்ரி நாராயணன் கோயிலுக்குள் அந்தரங்க சேட்டைகளில் ஈடுபட்ட போது, எந்தக் கடவுளும் எழுந்திருந்து கேட்க வில்லையே! ‘சோடா புட்டிப் புகழ்’ ஜீயர் வாய்கூட பசை வைத்து ஒட்டப்பட்டிருந்ததே!
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப் பகலில் பகிரங்கமாக - ‘பெரிய இடத்து ஆசியோடு’ படுகொலை செய்யப்பட்ட போது, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு வக்கு இருந்தால், கொலை பாதகர்களை ‘சம்ஹாரம்‘ செய்திருக்க மாட்டாரா?
மன்னார்குடி ராஜகோபால்சாமி கோயில் குருக்கள் பார்ப்பான் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த ராஜகோபாலன் தூக்க மாத்திரை போட்டா தூங்கிக் கொண்டு இருந்தான்?
குஜராத் மாநிலம் தவோயில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்குள்ளே குடுமிப் பார்ப்பனர்களுக்கு இருந்த குடியிருப்பில்
அர்ச்சகப் பார்ப்பனர்கள் சந்ததேவ், தேவ்வல்லப் ஆகியோர் பக்தைகளிடம் நடத்திய சல்லாபத் திருவிளையாடலை ‘சந்தோஷ்’ பத்திரிகை யிலும், இணையதளத்திலும் வெளியிட்டு சிரிப்பாய் சிரித்ததே - என்ன நடந்து விட்டது?
சுவாமி நாராயணன் சுக தூக்கத்தில் சயனித்திருந்தானோ!
என்றெல்லாம் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்கலாம் - எங்களுக்கும் தெரியும்தான். ஆனாலும் எங்கள் பிழைப்பில் கைவைத்தால் சும்மா இருப்போமா என்று துடிக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
இந்த யோக்கியதையில் உள்ளவர்கள் தான் ஆகம விதிகளின் படி அர்ச்சகராக ‘அக்மார்க்‘
தகுதி உடையவர்களாம்!
பார்ப்பனர் அல்லாதார் உரிய பயிற்சி பெற்று இருந்தால், அவர்களுக்குத் தகுதியில்லையாம். அவர்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடுமாம். ஏன், சாமி செத்தே போய் விடுமாம்.
தேவநாதன் திருவிளையாடலின் போதும், பத்ரி நாராயணன் பாலுறவு சமாச்சாரம் நடத்திய போதும், ஏற்படாத தீட்டு - ‘சூத்திரர்களும்‘ ‘பஞ்சமர்களும்‘ முறையாகப் பயிற்சிப் பெற்று இருந்தாலும் அர்ச்சகர்களானால் அது அப்பட்டமான தீட்டோ தீட்டாம்!
‘துக்ளக்கின்’ குருநாதர் திருவாளர் சோ அய்யரின் ஆன்மீகத்தைப் பற்றிய மதிப்பீடு என்ன?
கேள்வி: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்பொழுது?
சோவின் பதில்: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்! அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!
(‘துக்ளக்’, 1.6.1981, பக்கம் 32)
இதை விட ஆன்மிகத்தைக் கேவலப் படுத்த முடியுமா?
கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள் வாக்காக்கத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
(‘துக்ளக்‘ 26.10.2016, பக்கம் 23)
ஆக பொய்யை அருள்வாக்காகத் தெரிவிக்கும் கூட்டம் தான் இப்பொழுது கோயிலுக்குள் அர்ச்சகப் பெருச்சாளிகளாக அம்மணக்கூத்து ஆடித் தீர்த்துக் கொண்டுள்ளது - அப்படித்தானே!
திரு. சோ அய்யர் 15 ஆண்டுகளுக்கு முன் ‘துக்ளக்’கில் எழுதிய தலையங்கத்தை (17.6.2006) இவ்வார ‘துக்ளக்’கில் அவசர அவசரமாக மறு வெளியீடு செய்துள்ளதன் நோக்கம் என்ன?
அதில் சோ எழுதியதுதான் என்ன?
“சிவாச்சார்யார் குலத்தில் பிறந்தால் மட்டும் போதாது. ஸம்ஸ்கிருத அறிவு; வேதங்களைப் பயின்றிருத்தல், ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல்; தர்மசாத்திரம் மற்றும் கிரியா சாத்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவம்; சைவ சித்தாந்த தத்துவ ஞானி; ஆசாரங்களைக் கடைப்பிடித்தல்; தீட்சை பெற்றிருத்தல்; சைவ மந்திரம், முத்திரைகள், கிரியை முதலியன பற்றிய அறிவு; மீமாம்சை வியாகரணம்; தர்க்க சாத்திரம் ஆகியவை பற்றிய அறிவு - என்று பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும்!” என்று திருவாளர் சோ எழுதியுள்ளாரே, அதன்படி பார்த்தால் இன்றைக்குக் கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் இவ்வளவுத் தகுதிகளையும், அறிவையும் பெற்றவர்கள்தானா? என்ற கேள்வி எழுகிறதே!
2006ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழுவில் ஆன்மிகத்துறையைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
உ.வே.வாசு நம்பிள்ளை ராமானு ஜாச்சாரியார் வைணவ திவ்ய தேசங்கள் 108இல், 106 கோயில்களுக்கு நேரில் சென்று அறிந்து வந்தவர். 106 தேசங்களில் 30
கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர்.
சில கோயில்களில் ஆண் பூசாரி இல்லாத காலத்தில் பெண் பூசாரிகள் கூட பூசை செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளாரே - இதற்குப் பதில் என்ன?
“சென்னை கபாலீசுவரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே!”
“வடபழனி முருகன் கோயிலில் குமாரதந்திரமும், காமிக ஆகமும் பின்பற்றப்படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அவர்களுக்கு உதவியாக உள்ளவர்கள், அவர்களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்து கொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும் அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர்.
அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால் அர்ச்சகர்களால் நியமிக்கப் பட்டுள்ளவர்களை அவர்களுடைய உறவினர்கள் பலரும் அழைத்து வந்து அர்ச்சகராகப் பணியாற்ற வைத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோயிலுக்குச் செலுத்தி விட்டு, கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்வார்கள். அவர்கள் ஆகம விதிகள் தெரிந்தவர்கள் அல்ல.” (“கோயில்கள், ஆகமங்கள் மாற்றங்கள்” பக்கம் 75,76).
‘துக்ளக்‘ குருமூர்த்தி கும்பலே, ‘தினமலர்’ திரிநூல்களே, மன்னிப்புப் புகழ் ராஜாக்களே, சவுண்டிகளே இவற்றிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
எல்லோரும் அர்ச்சகர் ஆகிவிட முடியுமா? ஆகமம் தெரிந்திருக்க வேண்டாமா? சாஸ்திர சம்பிரதாயங்களைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டாமா?
கண்டவன் எல்லாம் கோயிலுக்குள் நுழைய முடியுமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தங்களின் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்தும் கீதா ரசிகர்களே - ஆகமம் தெரியாத - அர்ச்சகர்களின் உறவினர்கள் ரூ.2 செலுத்தி கோயில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யலாம். 18 மாதங்கள் ஆகம சாஸ்திரங்களை முறைப்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து, பரீட்சையில் தேறியவர்கள் அர்ச்சகராகத் தகுதியில்லையாம்.
இந்த 2021லும் அந்த ஆரிய நர்த்தனம் அடங்கவில்லை - மனுதர்ம மண்டைக்கனம் குறையவில்லை.
மக்கள் மத்தியில் அம்பலப்பட்டும் ஆணவம் அடங்கவில்லை.
234 சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரே ஒரு பார்ப்பானுக்குக் கூட இடம்
அளிக்க விரும்பாத இந்த மண்ணுக்குப் பெயர்தான் பெரியார் பூமி, பெரியார்தான் திராவிடர் பூமி!
பார்ப்பன உணர்ச்சி எத்தகையது- அவர்கள் பார்வையில் பார்ப்பனர் அல்லாதார் என்பவர்கள் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதை இன்றளவுக்கும் தெரிந்து கொள்ள குருமூர்த்திகளின் பூணூல்கள் உறுமட்டும் - ‘தினமலரின்’ திரிநூல் தனம் திமிர் எடுத்து தமிழர்களை ஏளனம் செய்யட்டும். தந்தை பெரியார் மூட்டிய தணல் அணையக் கூடாதல்லவா! புயல் அமைதியாகக் கூடாதல்லவா!
ஆட்டங்கள் இன்னும் கிடுகிடுக்கட்டும் - சீண்டல்கள் இன்னும் சீறி எழட்டும். அப்பொழுதுதான் இன்னும் எஞ்சியிருக்கும் இளித்த வாய்த் தமிழர்களும் எரிமலைக் குழம்பாய் வெடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் நாம் என்ன செய்யட்டும்!



No comments:
Post a Comment