புதுடில்லி, ஜூலை 29 பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணி - யார் தலைமை என்பதில் பிரச்சினையில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறினார்.
டில்லிக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்குவங்காளத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா கோரினார்.
நேற்று (28.7.2021) காங்கிரஸ் கட்சி யின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார் மம்தா; இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தியும் உடன் இருந்ததாக தகவல்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக் குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தி என்னை தேநீர் விருந்துக்கு அழைத்தார், ராகுல் காந்தியும் உடன் இருந்தார், நாங்கள் பொதுவாக அரசியல் நிலைமை, பெகாசஸ் & கரோனா நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் எதிர்ப்பின் ஒற்றுமை குறித்தும் விவாதித்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு. எதிர்காலத்தில் நேர்மறையான முடிவு வெளிவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புகிறார்; மாநில கட்சிகளை காங்கிரஸ் நம்புகிறது, மாநில கட்சிகளும் காங்கிரசை நம்புகிறது.
பா.ஜ.க. வலிமையான கட்சியாக உள்ளது; எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை.
கறுப்புப் பணம் உங்களை எதிர்க்கும் நபர்களிடம் மட்டுமே உள்ளது.அரசியலில் விஷயங்கள் மாறுகின்றன. அரசியல் புயல் வரும் போது, நிலைமையைக் கையாள கடினமாகிவிடுகிறது.
கரோனா உயிரிழப்புகள்
நரேந்திர மோடி 2019 இல் பிரபலமாக இருந்தார். இன்று, அவர்கள் கரோனா உயிரிழப்புகள் பற்றிய பதிவுகளை வைத்திருக்கவில்லை, அவர்களின் இறுதி மரியாதைகள் மறுக்கப்பட்டன, உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அதை மறந்து மன்னிக்க மாட்டார்கள்.
எனது செல்போன் ஏற்கெனவே ஒட்டுக்கேட்கப்பட்டது. பெகாசஸ் அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெகாசஸ் உளவு விவாகரத்திற்கு அரசு ஏன் பதிலளிக்கவில்லை? மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், அங்கு விவாதங்கள் நடத்தப்படாவிட்டால், அது எங்கே நடக்கும்? விவாதங்கள் தேநீர் கடைகளில் நடத்தப்படுவதில்லை, இது நாடாளுமன்றத்தில் தான் நடைபெறும்.
பா.ஜ.க.வைத் தோற்கடிக்க அனை வரும் ஒன்றிணைவது அவசியம்- யார் தலைமை என்பதில் பிரச்சினையில்லை. தனியாக, நான் ஒன்றுமில்லை - அனை வரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறினார்.

No comments:
Post a Comment