மடியில் கனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

மடியில் கனம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏழு நாட்களாக முடங்கி விட்டன. எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள் என்று தம் கட்சிக்காரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.

அப்படியே பார்த்தாலும் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)ஆட்சியின்போது இதே பா... நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொண்டது. எத்தனை நாட்கள் அவைகள்  முடக்கப்பட்டன என்ற கேள்விகளைத் திருப்பிக் கேட்டால் பிரதமரால் என்ன பதில் சொல்ல முடியும்?

இதைச் சொல்லுவதற்குக் காரணம் நீங்கள் செய்யவில்லையா? அதையே தான் இவர்களும் செய்கிறார்கள் என்ற பதிலுக்காக அல்ல.

அவையை முடக்குவது பற்றிப் பேசுவதற்கான தார்மிக உரிமை பா...வுக்கு இல்லை என்பதற்காகத்தான்.

சரி முக்கிய பிரச்சினைக்கு 'வருவோம்' - என்ன காரணம் சொல்லி எதிர்க்கட்சியினர் அவைகளை முடக்குகின்றனர் என்ற கேள்வி மிக மிக முக்கியமானது அல்லவா? அதை மூடி மறைத்து விட்டு திசை திருப்புவது பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல - இது ஜனநாயகமும் ஆகாது.

பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கினீர்களா? இந்தியர்களை உளவு பார்த்தீர்களா? என்பதுதான் கேள்வி -

உளவு பார்க்கும் குற்றத்தை ஒன்றிய அரசு செய்துள்ளது என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றத்தை இந்த ஒன்றிய அரசு செய்யவில்லை என்றால், அது பற்றிய விவாதத்தை நடத்துவதற்கு என்ன தயக்கம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமிருக்காது அல்லவா!

மக்கள் பிரச்சினையைப் பேசுவதற்காகத்தான் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். அந்தப் பிரதிநிதிகள் அதற்கான அவைகளில் பேசாமல் வேறு எங்கு சென்று பேசுவது?

மக்கள் நாயகத்தின் பால பாடத்தையே மறுதலிக்கும் மகத்தான மக்கள் விரோத செயல் அல்லவா - இது.

அதுவும் இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சராக இருக்கக் கூடியவர் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில்  ஒன்று ஊடகத்துறை அதனைச் சந்திக்கும் தன்மை இல்லை என்பது எதைக் காட்டுகிறது. மற்றொரு தூண் நாடாளுமன்றம் -  அந்த மன்றத்திலும் பிரதிநிதிகள் குரலுக்கு மரியாதை இல்லை - இடமும் இல்லை.

இன்னொரு துறை நிர்வாகம் என்பது - ஆனால் நடப்பது என்ன?

எல்லாமே மோடி மோடி மோடிதானா? அடுத்தது அமித்ஷா - அமித்ஷா - அமித்ஷா தானா? அனைத்துத் துறை  செயலாளர்களும் நேரடியாக பிரதமரின் பார்வையில்தான் என்கிறபோது நிர்வாகத் துறையும் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது.

பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதே! பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் இயற்றப்பட்ட ராஜதுரோக குற்றம் (124) சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் - இந்தியாவில் அனுமதிக்கப்படுவது ஏன்? ஏன்??  என்று உச்சநீதிமன்றம் கூறியதே!

இன்னொரு முக்கிய தூண் நீதித்துறை. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றிலேயே உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளியில் வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த அவலம் எந்தக் கால கட்டத்தில் நடந்தது? சாட்சாத் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில்தானே.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவராக இல்லை என்று கருதக் கூடிய நிலை ஏற்படலாமா? ஏற்பட்டது என்றால் அதற்கு யார் காரணம்?

தங்கள் வசதிக்கு ஏற்ப தீர்ப்புக் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு - அவர்களின் ஓய்வுக்குப் பிறகு முக்கிய பதவி தயாராகக் காத்துக் கொண்டு இருக்கிறது.

இந்தப் போக்கு - நனி நாகரிகம் என்ற உரைக்கல்லில் உரைத்துப் பார்த்தால் அதன் பவுசின் முகம் வெளுத்துப் போகாதா?

இந்த உளவு பார்க்கும் பிரச்சினைகூட இந்தியாவைப் பற்றியது மட்டுமல்ல; வேறு பல நாடுகளும் இந்தக் குற்றத்துக்கு ஆளாகி யுள்ளன. பிரான்சு, போர்ச்சுக்கல், ஹங்கேரி  முதலிய நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டு வழி செய்திருக்கும் போது, இந்தியாவுக்கு மட்டும் தயக்கம் ஏன்? இந்தத் தயக்கம் இந்திய ஒன்றிய அரசின் நம்பிக்கைத் தன்மைமீது சந்தேகக் கணைகளைத் தொடுக்க வழி வகுக்கிறதா, இல்லையா?

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல; ஒன்றிய  அரசின் அமைச்சர் ப்ரஹலாத், ராஜஸ்தான் மாநில மேனாள் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஒன்றிய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியின் சிறப்பு செயலாளர் சஞ்சம் கச்சரோ உள்பட உளவு பார்க்கப் பட்டுள்ளதே!

பா..., விசுவ ஹிந்து பரிஷத் போன்ற சங்பரிவாரைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்தக் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனரே!

சொந்த வீட்டிலேயே சூன்யம் வைப்பது என்று நம்பிக்கையாளர்கள் சொல்லுவதுண்டு, நம்பிக்கை வாதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் என்பதால் இதனைச் செய்கிறார்களா?

எப்படியாக இருந்தாலும் இன்றைய பா... தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)  என்பது எல்லா வகைகளிலும் தோல்வி அடைந்து மக்களாட்சியின் மாண்பைச் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கிவிட்டது.

அதுவும் உளவு பார்க்கும் விடயத்திற்கு பிரதமர் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அவைகளுக்கு வெளியிலும்  உரத்த குரல்  கேட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைய ஒன்றிய அரசுக்கு இது மிகவும் நெருக்கடியான கால கட்டம். அதுவும் பல முக்கிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் வெடித்துக் கிளம்பியிருக்கும் பிரச்சினைகளால் பெரிய பாதிப்பும், தாக்கமும் ஏற்படத்தான் செய்யும் - நாடு அதனைக் காணத்தான் போகிறது.

No comments:

Post a Comment