சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிப் பூஜை கொண்டாடுவதுபற்றி நியாயமான சர்ச்சை ஏற்பட்டது. திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், துணை வேந்தரே பல்கலைக் கழகத்தில் மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து, இனி இதுபோல் நடக்காது என்று தெரிவித்த நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஆடி 18 பூஜை குறித்து, சென்னைப் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை மேனாள் தலைவரும், திட்டக் குழுவின் மேனாள் துணைத் தலைவருமான முனைவர் மு. நாகநாதன் இதுகுறித்து சமூகவலை தளத்தில் பதிவிட்டிருந்தார். 'விடுதலை'யிலும் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
ஆனால் திரிநூல் ஏடான 'தினமலர்'க்கு என்ன வந்தது? "திருடனுக்குத் தேள் கொட்டியதைப்போல்" கடுகடுப்பது ஏன்?
நாகநாதனுக்கு வேறு வேலை இல்லையா? பல்கலைக் கழகத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்கின்றது. நிதிப் பற்றாக் குறை, ஓய்வூதியப் பிரச்சினை, பணியாளர்கள் பற்றாக்குறைப் பிரச்சினை என்று எத்தனைத் எத்தனைப் பிரச்சினைகள் எல்லாம் பல்கலைக் கழகத்தில் இருக்கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் பேசாமல் பல்கலைக் கழகத்தில் சாமி கும்பிடுவதுபற்றி எல்லாம் பேசலாமா? சாமி கும்பிடுவது குற்றமா? என்கிற வகையில், பார்ப்பனர்களுக்கே உரித்தான திசை திருப்பும், சிண்டு முடியும் வேலையில் திரிநூல் இறங்கியுள்ளது. இவற்றைப்பற்றி எல்லாம் 'தினமலர்' எழுத வேண்டியதுதானே! யார் தடுத்தார்கள்?
சாமி கும்பிட வேண்டாம், பூஜை நடத்த வேண்டாம் என்று யாரும் கூறிடவில்லை.
தாராளமாக சாமி கும்பிடட்டும், பூஜை நடத்தட்டும், எங்கே? அவரவர்களின் வீடுகளில்! அதற்கான இடம் பல்கலைக் கழக அலுவலகமல்ல - பல்கலைக் கழக அலுவலகத்திற்கு வருவது அரசு தொடர்பாக அவரவர்களுக்கு என்று பணிக்கப்பட்டுள்ள பணிகளை செய்வதற்குத்தானே தவிர, அரசு அலுவலக நேரத்தில் பஜனைப்பாட அல்ல - பூஜைகள் நடத்துவதும் அல்ல என்ற சாதாரண அடிப்படைப் பாடம் கூட தெரியாமல் 'தினமலர்'கள் எழுதுகோல் பிடிப்பது பச்சையான வெட்கக் கேடு.
பச்சையாக சொல்லப் போனால், இது பச்சையான பார்ப் பனத்தனம். எது கெட்டாலும் பரவாயில்லை; ஆனால் பக்திப் பிரச்சினைக்கு மட்டும் எள்ளளவும் சேதாரம் வந்துவிடக் கூடாது; அதில் மண் விழுந்தால், பார்ப்பனர்களின் வாழ்வில் மண் விழுந்து விடும் - சுரண்டல் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமே - அதனுடைய அலறல்தான் தினமலரின் கூச்சல்.
பொருளாதார பேராசிரியர் மு. நாகநாதன் எழுப்பிய கேள்விக்கு என்ன பதில்? அவர் கேட்ட கேள்வியில் என்ன தவறு இருக்கிறது? பூணூல் மலருக்கு ஏன் வேர்க்க வேண்டும்?
30 ஆண்டுகளுக்குமேல் அதே சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர் என்ற கூடுதலான உரிமையும் அவருக்கு இருக்கிறது. திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்ற முறையில் அரசு நிர்வாக அனுபவமும் உண்டு. ஓர் அரசு அலுவலகம் எந்த சட்ட திட்டம், விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கற்றுத் துறை போனவர்.
அந்த வகையில் அவர் எழுப்பிய, தொடுத்த வினா மிகச் சரியானது - துல்லியமானது.
அரசு அலுவலகங்களுக்குள், நூலகங்களுக்குள் எந்த மத வழிபாட்டுச் சின்னமும் இருக்கக் கூடாது என்று அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்ட ஆணையும் இருப்பது 'தினமலர்'க் கும்பலுக்குத் தெரியாதா?
மதச் சார்பற்ற தன்மை கொண்டது அரசு என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையும் புரியாதா?
புரியும் தான் - தெரியும் தான், ஆனாலும் பூஜையும் புனஷ்காரமும், பக்தியும், படையலும் பார்ப்பனத்தனமான சமாச்சாரங்கள் ஆயிற்றே! அதிலே கை வைத்தால் ஆத்திரம் கரை புரள்கிறது. அக்கிரகாரக் கூட்டத்துக்கு!
சட்டமாவது - வெங்காயமாவது - என்று தானடித்த மூப்பாகத் துள்ளிக் குதித்தது எல்லாம் அந்தக் காலம். காலம் மலையேறி விட்டது. ஆட்சியும் மாறி விட்டது என்பதை அக்ரகாரவாசிகள் உணர்ந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.
"பழைய நினைப்படா பேராண்டி" என்ற நினைப்பில் பஞ்சக் கச்சம் பாஷையைப் பேசினால் தட்டி கேட்கும் பகுத்தறி வாளர்கள் உண்டு - சட்டம் செயல்படுவதற்கான சூழ்நிலையும் உண்டு என்று எச்சரிக்கிறோம்!
ஒரு துணைவேந்தரே நடந்தது தவறுதான் என்று வருத்தம் தெரிவித்த பிறகு, தர்ப்பைப் புல்கள் சண்டியர்த்தனம் செய்தால் அதற்குரிய விளைவை - சட்டப்படியான நிலையை சந்தித்து தான் ஆக வேண்டும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment