திருவள்ளுவரை காவி மயமாக சித்தரிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

திருவள்ளுவரை காவி மயமாக சித்தரிப்பதா?

ஹிந்து முன்னணியினர் வைத்துள்ள பெயர்ப் பலகைக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர், ஜூலை 31- "பெருந்தகை "திருவள்ளுவரை காவி மயமாக சித்தரித்து திருப்பூர் மாநகர் பகுதியில் ஹிந்து முன்னணி என்ற மத அமைப்பினர் வைத்துள்ள பெயர்ப் பலகைக்குத் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகர் தென்னம்பாளையத்திலிருந்து கிழக்கே செல்லும் சாலையில் மாகாளியம்மன் கோவிலை அடுத்த வளைவில் ஹிந்து முன்னணி என்ற மத அமைப்பு சார்பில் சாலையின் குறுக்கே வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகையில் திருவள்ளுவர் உருவத் திற்கு காவி உடை,ருத்திராட்ச மாலை,திருநீறு பட்டை அணிவித்து காவிமயமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமையான்"

என்று பொருள் பொதிந்த தன்மையில் "பிறப்பு என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது, செய்யும் தொழில் எதுவாயினும் அதிலே எய்துகிற சிறப்புகள் வேறுபடுகின்றன,செய்பவரின் அறிவாற் றலை பொருத்து" என பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை! அறிவாற்றலே முக்கிமானது ! என  பொதுவுடமையை எடுத்தியம்பிய "தலைமைப் புலவர்", "செந்நாப்புலவர்", "மாதானுபங்கி", "குறளாசான்" திருவள்ளுவர் பெருந் தகைக்கு பிறப்பில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் ஹிந்து மதத்தின் சாயம் பூசுவதா? என திருப்பூரில் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த அஇஅதிமுக ஆட்சியில் திருவள்ளுவரை காவி மயமாக சித்திரிக்கப்பட்ட படங்கள் ஒரு சில அரசு அலுவலங்களில் கூட வைக்கப் பட்டன.தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்ற பின் திருவள்ளுவரை காவி மயமாக்க சித்திரிக்கப்பட்ட படங்கள் அகற்றப்பட்டு,தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே உத்திரவாதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசிய வகையில் உள்ள படங்களை  அரசு அலுவலகங்களில் மட்டு மில்லாது பல்வேறு பொது இடங்களில் குறிப்பாக மதம் சார்ந்த அமைப்பினர்களால் வைக்கப்பட்டுள்ள படங்களை அகற்றி, அதற்குக் காரணமானவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் தமிழ் ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment