மீனவர் வாழ்வு கண்ணீரிலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

மீனவர் வாழ்வு கண்ணீரிலா?

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை 20 அமர்வுகள் என மொத்தம் 19 நாள்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மருத்துவம்,மின்சாரம், பெட்ரோலியம், ஓய்வூதியம், ராணுவம் போன்ற பல்வேறு துறைகள் சம்பந்தமாக சுமார் 40 புதிய மற்றும் சட்டத் திருத்த மசோதாக்கள் மற்றும் அய்ந்து அவசர சட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒரு சட்டம்தான் இந்திய கடல் மீன்வள சட்டம்.

இந்த சட்ட முன்வரைவு வெளியானதிலிருந்தே இந்திய மீனவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டங்களிலும், இந்தப் புதிய சட்ட மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக கபளீகரம் செய்யும் என மீனவர்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.  தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தச் சட்டத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். காசிமேடு முதல் ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த மீனவர்களும் கறுப்புக்கொடி கட்டி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட தயாராகியிருக்கிறது இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா - 2021.

மீனவர்களுக்காகக் கொண்டுவரப்படும் இந்தச் சட்டத்தை, மீனவர்களே ஏன் எதிர்க்கிறார்கள், என்ன காரணம்?

``ஒன்றிய அரசு கொண்டுவரக்கூடிய இந்தச் சட்டம், தமிழ்நாட்டிலிருக்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடித் தொழிலையும் அழிக்கக்கூடிய வகையில் உள்ளது. குறிப்பாக, நம் மீனவர்கள் பயன்படுத்துகிற விசைப்படகுகள், பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் போன்ற சாதாரண படகுகளைப் பன்னாட்டு கப்பல்களுக்கு இணையாக மீன்பிடிக் கப்பலாக கருதுகிறது அரசாங்கம்.

அதன்படி முதலில், 1958, வணிக கப்பல் சட்டத்தின்படி எல்லா படகுகளையும் பதிவு செய்ய வேண்டுமாம். பதிவு செய்யப்பட்ட பிறகு மீன்பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.  இது எப்படி சாத்தியம்? மீனவர்களுக்கே எப்போது கடலுக்குச் செல்வோம் என்று தெரியாது, மீன் தென்பட்டால் எப்போது வேண்டுமானாலும் செல்வார்கள். அப்படியே அனுமதி கேட்க வேண்டுமென்றாலும், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில், 608 மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இவர்கள் எல்லாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத் தொழிலுக்குச் செல்லுவது எப்படி சாத்தியம்?

இரண்டாவதாக, காலங்காலமாக சுதந்திரமாக மீன்பிடித்துவரும் மீனவர்களின் அனைத்து வகையான படகுகளும் இனி கட்டணம் செலுத்தித்தான் மீன் பிடிக்க வேண்டும்.  இப்படி, சொந்த நாட்டிலேயே  மீன்பிடித்து வாழ்ந்து வரும் மக்களிடம், மீன்பிடிக்க கட்டணம் வசூலிப்பது என்பது உலக வரலாற்றிலேயே எந்த நாட்டிலும் இல்லாத மிக மோசமான ஒரு கறுப்புச்சட்டம்!

மூன்றாவதாக, கடலை நிர்வாக வசதிக்காகப் பிரிக்கிறார்கள். முதல் 12 மைல் அண்மைக் கடல் என்றும், அடுத்த 200 மைல் சிறப்பு பொருளாதார மண்டலம் (EEZ)என்றும், அதற்குமேல் பன்னாட்டு மீன்பிடி கப்பல் பகுதி என்றும் வரையறுக்கிறார்கள். இதில், 12 மைல் வரையில்தான் நம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி. அதற்கு மேல் கட்டணம், அபராதம், சிறைத் தண்டணை என்கிறார்கள். இந்த அபராதத்தொகை குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் ரூ.20 லட்சம் வரை விதிக்கப்படும், ஓராண்டுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்கிறார்கள். நீதிமன்றம் சென்றால்கூட நம்மால் எதிர்த்து வாதாட முடியாது, கட்டணம் வசூலிக்கும் அதிகாரி சொல்வதுதான் செல்லுபடியாகும். இது ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயல்! ஒரு ஜனநாயக நாட்டின் சட்டங்களாகத் தெரியவில்லை.

மேலும் இந்த மசோதாவில் சொல்லப்படும் ஒரு விடயம், மீன்பிடி தடைப் பகுதிகள். அதாவது, சாதாரணமாக மீன்களின் இனப்பெருக்க காலத்தில்தான் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படும். ஆனால், இந்தச் சட்டத்தில் அரசாங்கம் எந்தப் பகுதியை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியுமாம்

இவை எல்லாவற்றுக்கும் காரணம் கடலின் வளங்கள். இந்திய அரசைப் பொறுத்தவரையில் கடல் என்பது மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமல்லாமல், கடலில் இருக்கும் பெட்ரோல், ஹைட்ரோகார்பன், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை எடுப்பதற்கான பகுதியாக பார்க்கிறார்கள். அதன்படிதான், மரக்காணம் முதல் நாகப்பட்டினம் வரை கடல்பகுதியில் 200 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த அனுமதி வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மாதிரியான பணிகள் செய்யும்போது மீனவர்கள் குறுக்கிடாமல் இருக்கவே உள்நோக்கமாக இந்தத் தடைப்பகுதியை அறிவிக்கிறார்கள். மீன்பிடிக்க அனுமதி இல்லையாம்; ஆனால் கடலில் சுரங்கம் அமைக்க, கனிம வளங்கள் எடுக்க, ஆராய்ச்சி செய்ய மட்டும் அனுமதி வழங்கப்படுமாம்.

ஆகவே, இந்தக் கடல் மீன்வள சட்ட மசோதாவின் நோக்கமே, மீனவர்களைக் கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கடலை தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும்! இதுதான் இந்திய அரசின் முடிவு.

கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு திறந்துவிடும் நிலையில், பெரிய முதலாளிகளுக்குக் கடலை குத்தகைக்கு விடும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடல் பகுதியிலே பிறந்து, கடல் சூழ்நிலையிலேயே வளர்ந்து, இயற்கைச் சீற்றம் வரும் போதும் விலகி விடாமல், அதனோடு ஒன்றி வாழ்வைப் பிணைத்துக் கொண்ட மக்களை இதற்குமேல் எப்படித்தான் தண்டிக்க முடியும்?

சுருக்கமாகக் கூறினால் மத்தியில் நடப்பது ஓர் அரசே அல்ல - ஒவ்வொரு அசைவும் உயர் ஜாதி நலம், கார்ப்பரேட் வளம் என்பதைச் சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. விழிப்புணர்வு என்னும் மகாபலமே இதற்கான தீர்வாகும்.

No comments:

Post a Comment