ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மய்யம்

புதுடில்லி, ஆக.4 ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 4 மாத மழைக்காலத்தின் 2ஆவது பாதியான ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்த பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

இதைப்போல வானிலை ஆய்வுத்துறை இயக்குநர் மிருதுஞ்சய் மொகாபத்ரா வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ஆகஸ்டு மாதத்தில் இயல்பான மழை அளவு இருக்கும் எனக்கூறியுள்ளார்.

அதேநேரம் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பான அளவு முதல் குறைவான அளவு வரையிலான மழை இருக்கும் எனவும் மொகாபத்ரா தெரிவித்துள்ளார். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று  இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

ஜார்கண்டில் நீதிபதி கொலை வழக்கு

17 பேர் கைது;  243 பேரிடம் விசாரணை

ஜார்கண்ட், ஆக.4 ஜார்கண்டில் ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப் பட்டனர். மேலும் 243 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் வசித்து வந்த உத்தம் ஆனந்த் என்ற நீதிபதி 28.7.2021 அன்று  அங்குள்ள ரந்திர் வர்மா சவுக் பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ ஒன்று நீதிபதி மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. தூக்கி வீசப்பட்ட நீதிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது விபத்து இல்லை என்பதும், வேண்டுமென்றே ஆட்டோவால் மோதி நடத்தப்பட்ட கொலை என்பதும் காவல்துறையினரது விசாரணையில் தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது.அத்துடன் இந்த கொடூர கொலை குறித்த விசாரணையை சி.பி.அய். வசம் ஒப்படைக்கவும் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார்.இதற்கிடையே நீதிபதி கொலை தொடர்பாக விசாரித்து வந்த காவல்தறையினர், ஆட்டோ டிரைவர் லகன் வர்மா மற்றும் ராகுல் வர்மா ஆகியோரை மறுநாளே கைது செய்தனர். மேலும் அந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

அத்துடன் இந்த கொலை தொடர்பாக மாவட்டத்தின் பல பகுதிகளில் காவல்துறையினர் விசாரணையும், சோதனையும் நடத்தினர். இதன் பலனாக 17 பேர் கைது செய்யப் பட்டனர். மேலும் பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் இருந்து 243 பேரை காவல்துறையினர் பிடித்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி மாவட்டத்தில் சரியான ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 250 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே நீதிபதி கொலை சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஆதர்ஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment