கலைஞர் அவர்கள் விட்ட பணி தொடரும் - அவர்கள் பெற விரும்பிய வெற்றிகள் குவியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

கலைஞர் அவர்கள் விட்ட பணி தொடரும் - அவர்கள் பெற விரும்பிய வெற்றிகள் குவியும்!

செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஆக.7 "கலைஞர் அவர்கள் விட்ட பணி தொடரும் - அவர்கள் பெற விரும்பிய வெற்றிகள் குவியும்!" என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவ்விவரம் வருமாறு:

மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்துக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய மூன்றாவது ஆண்டு நினைவு நாள் என்பது - நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, அவரை நினைக்காத நாளில்லை!

இந்தியாவே பாராட்டக் கூடிய அளவிற்கு....

கலைஞர் அவர்களைப் பொறுத்த வரையில், ஓய்வறியாது உழைத்தவர் - அந்த உழைப்பு இப்பொழுது மீண்டும் இன்றைய முதலமைச்சராக - தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கக்கூடிய - இந்தியாவே பாராட்டக் கூடிய அளவிற்கு இருக்கின்ற நம்முடைய தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரான நிலையில், அந்த உழைப்புத் தொடருகிறது.

நீதிக்கட்சியினுடைய

நீட்சி மட்டுமல்ல -

திராவிட இனத்தினுடைய மீட்சி!

கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை யில் அவர்கள் மறையவில்லை; நம் நெஞ்சங் களிலே நிறைந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ஆட்சியிலே அவர் உறைந்திருக்கிறார்; தொடர்ச்சியாக அவருடைய ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப் பேற்றவுடன், மிக உறுதியாக முதலமைச்சர் சொன்னார், நீதிக்கட்சியினுடைய நீட்சி என்று - நீதிக்கட்சியினுடைய நீட்சி மட்டுமல்ல - கலைஞர் அவர்களுடைய ஆட்சியே இன்றைக்கு வேறு வகையில் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு உள்ளது.

எனவேதான், இன்றைய ஆட்சி, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி மட்டுமல்ல - கலைஞர் ஆட்சியினுடைய மறுமலர்ச்சி - அதனுடைய தொடர்ச்சி - திராவிட இனத்தினுடைய மீட்சி.

அந்த வகையில், இந்தப் பயணம் தொடருகிறது. எத்தனை இடர்கள் இருந் தாலும் - எப்படி எதிர்நீச்சல் அடித்தும் இங்கே இந்த இடத்தை எப்படி கலைஞர் பிடித்திருக்கிறார்களோ - அதுபோல எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி ''திராவிடம் வெல்லும் - இந்த வரலாற்றை நாடு என்றும் சொல்லும்'' என்ற சிறப்பான ஓர் உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம்.

எந்தெந்த பணிகளையெல்லாம் கலைஞர் நடத்திடவேண்டும் என்று நினைத் தார்களோ அவற்றை பெரியார் வழியிலே - அண்ணாவினுடைய முறையிலே - அவை அத்தனையும் செய்வதற்கு சூளுரைக்கின்ற நாள்தான் இந்த நினைவு நாள். 

விட்ட பணி தொடரும் - அவர்கள் பெறவேண்டிய வெற்றிகள் குவியும்!

கலைஞர் அவர்கள் விட்ட பணி தொடரும் - அவர்கள் பெற விரும்பிய வெற்றிகள் குவியும்! இதுதான் கலைஞர்!!

கலைஞர் வாழ்க!

கலைஞர் வாழ்கிறார் - கலைஞருடைய வாழ்வு என்பது இன்றைய ஆட்சியினு டைய மாட்சியாகப் பரிமளித்துக் கொண்டி ருக்கிறது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment