ஆபத்தை விலைக்கு வாங்கிய இலங்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

ஆபத்தை விலைக்கு வாங்கிய இலங்கை

இலங்கை அரசு - சீனாவிடமிருந்து வாங்கியிருக்கும் நிதி மிகவும் அதிக அளவுக்கு இருப்பதால் சீனா சொல்வதற்கெல்லாம் தலையசைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது

குறிப்பாக 2009ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்சே சீனாவுடன் நெருக்கத்தை வளர்க்க தொடங்கினார். அதன் பயனாக சீனா ராஜபக்சே அரசாங்கத்துக்கு தேவைக்கு அதிகமான பணத்தை வாரி இறைத்தது. அந்தப்பணத்தில் இலங்கை அரசியல்வாதிகள் பெருமளவில் ஊழல் செய்துள்ளனர்.

 இலங்கையில் சாலைகள் சீனாவின் உத்தரவின் பெயரில் சீனாவிற்கு சாதகமாக திருத்தி அமைக்கப்பட்டன. அவர்களின் நோக்கம் இலங்கையின் வட எல்லை வரை அதாவது தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மன்னார்வரை தடையின்றி வந்து செல்லவேண்டும் என்பதுதான்.

இவை ராஜபக்சேவின் கண்களை கட்டிவிட்டு சீனா செய்த வித்தை. இந்த மோசடி வித்தைக்குள் மூழ்கிக் கிடந்த ராஜபக்சேவை வைத்துக் கொண்டு சீனா மெல்ல காய் நகர்த்த தொடங்கியதன் விளைவே இன்று இந்தியப் பாதுகாப்பு பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.  இப்போதும் இந்தியா அமைதி காப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக அண்மைக்காலமாக இலங்கையின் வடக்கில் சீனா மெல்ல மெல்ல தன்னுடைய காய் நகர்த்தல்களை ஆரம்பித்திருக்கிறது  - இதற்கான சான்றுகள் பொதுவெளியில் வந்திருக்கின்றன.

குறிப்பாக வடக்கில் சீனா சில திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறது. அதேபோல், அண்மையில் கிளிநொச்சியில் கடலட்டை வளர்ப்பு என்ற பெயரில் சீனர்கள் அங்கு தொழிற்சாலையை நிறுவியுள்ளனர் .

ஆனால் இதுதொடர்பாக இந்தியாவோ அல்லது இலங்கையில் உள்ள இந்திய தூதரகமோ வாய் திறக்கவில்லை.   

அதேபோல் சீனா இலங்கையின் வடக்கில் தேர்ந்தெடுத் திருக்கின்ற இடங்கள் குறித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அமைவிடங்களை தேர்ந்தெடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்தியாவின் அமைதி கலையவில்லை.

சீனா தமிழர் நிலத்தில் கால் வைத் திருப்பது ஈழத்தமிழர்கள் மீண்டுமொரு நில மீட்புக்கான போராட்டத்துக்கான அடித் தளத்தை இட்டு விடுமோ என்ற அச்சம் இலங்கைத் தமிழர்களிடத்தில் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

ஏற்கெனவே இலங்கை அரசுகளுடன்

70 ஆண்டுகளாக போராடி வரும் தமிழர்கள் எதிர்காலத்தில் சிங்களவர்களுடனும் சீனர்களுடனும் போராடும் ஒரு காலம் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவும் தற்போதைக்கு இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதாக தெரியவில்லை.

தமிழர் நிலப்பரப்பு மீதான அரசியல் ஓட்டத்தில்  ஈழத்தமிழருடைய இருப்பு நாளுக்கு நாள் ஆபத்து மிக்க ஒரு நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

 இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கு இந்தியாவும் ஒரு காரணம். போரை வெல்வதற்கு சிங்கள அரசுக்கு வளைந்து கொடுத்த இந்தியா தமிழர் நலனில் கடந்த 11 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக சில நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதே தவிர  சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எதனையும் செய்யவில்லை.

போரால்  பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவோ, பாதிக்கப்பட்ட மண்ணை மீள் கட்டமைக்க வோ, அல்லது எதற்காக தமிழர்கள் போராடினார்களோ அதில் ஒரு சிறிய முன்னேற்றத்தை பெற்றுக்கொடுப்பதற்கோ இந்தியா முன் வரவில்லை. 

போருக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரு தளம் தேவைப்பட்டிருக்கிறது.

ஒன்று சிறிலங்கா  மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது. இரண்டாவதாக, தமிழர் இன அழிப்பு தொடர்பான சிக்கல் களைச் சமாளிக்க பன்னாட்டு அரங்கில் சீன அரசின் தயவு  தேவைப்படுகிறது.  அதனால் சீனாவை விட்டு இப்போதைக்கு இலங்கை நகரப்போவதில்லை. அதேபோல், சீனாவினுடைய பல தேவைகளுக்கு இலங்கை தேவைப்படுகிறது. ஆகவே இவ்விரு நாடுகளினுடைய உறவை பிரிப்பது என்பது பகற்கனவே.

No comments:

Post a Comment