கரோனாவும்-கடவுளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

கரோனாவும்-கடவுளும்!

கரோனா வந்தாலும் வந்தது - கடவுள்கள் காணாமல் போய்விட்டன!

கோயில்களைத் திறக்காதே, கும்பாபி ஷேகம் செய்யாதே - திருவிழாக்களைக் கொண்டாடாதே. ஆடி 18இல் கூடாதே! வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரை போகாதே! என்ற அரசு ஆணைகள் அலை அலையாய் வந்து கொண்டே இருந்தன, இருக்கின்றன!

கும்பமேளா என்று பல்லாயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகிப் பலியானது போதும்! போதும்! இனி இத்தகு விஷப்பரீட்சைகள் வேண்டாம் - வேண்டவே வேண்டாம்.

கடவுள் சக்தி வாய்ந்தவர் - கரோனாவை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் - பக்தர்களைக் கைவிட மாட்டார்என்ற நம்பிக்கை அரசுக்கும் இல்லை - மக்களுக்கும் இல்லை - பக்தியிலே முற்றிப்போன மனிதர்களுக்கும் இல்லை - இல்லவே இல்லை - இல்லாமலே போய்விட்டது.

எல்லாம் அவன் செயல்என்று யாராவது சொன்னால் கரோனா  எவன் செயல்? என்ற கேள்வி துப்பாக்கியிலிருந்து ரவைகள் வெடித்துக் கிளம்புவது போல கிளம்பிவிடும் - அதுவும் இளைஞர்கள் மத்தியில் அந்த எண்ணம் வெடித்துக் கிளம்பிட தயாராகவே உள்ளது.

கல்யாண வரம் வேண்டுமா? திருமணஞ்சேரி கோயிலுக்கு வாருங்கள்! வயிற்றுவலி போக வேண்டுமா? வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வாருங்கள் - வாருங்கள்! தீராத வினையெல்லாம் தீர வேண்டுமா? - திருப்பதிக்குத் திரளுங்கள்!

ஆண்டாளைத் தரிசியுங்கள் வைணவ திவ்ய தேசங்கள் 108யும் தரிசித்ததற்குச் சமம்.

நினைத்தவை நடக்கும், நினைக்காதவை களும் கிடைக்கும்.

கடன் தொல்லையா - கடன் தீர்க்கும் விநாயகனை நாடுங்கள், காது நோய், கண் நோய்கள் தீர வேண்டுமா? திருவாரூர் விருப்பாட்சிக் கோயில் அக்னி தீர்த்தத்தில் ஒரே ஒரு முழுக்குப் போடுங்கள் - பஞ்சாய்ப் பறந்துவிடும்.

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? - கவலைப் படாதீர்கள் - நாடுங்கள் சித்தன்னவாசல் சுகந்த குந்தனாம்பாளைத் தரிசிப்பீர்.

வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமா? கொல்லங்குடி வெட்டுடையாள் காளி (சிவகங்கை அருகில்) கோயிலுக்கு ஓடுங்கள் - ஓடுங்கள்!

செலவுக்குத் தட்டுப்பாடா? சிதம்பரம் அருகில் உள்ள வழித்துணை நாதர் (மார்க்க சகாயேஸ்வரர்) இருக்கவே இருக்கிறார் - கவலையை விடுங்கள்.

ராம என்பதற்கு என்ன பொருள் தெரியுமா? ‘ராஎன்னும்போது வாய் திறந்ததும் பக்தர்களின் பாவங்கள் வெளியேறும்!

என்று சொல்லும்போது பாவங்கள் திரும்பிவரா வண்ணம் உங்கள் வாய் மூடிக்கொள்ளும் - ஆகவே ராம நாமத்தை ஜெபிப்பீர்!

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க வேண்டுமா? உறையூர் சிறீகமலவல்லி நாச்சியார் திருக்கோயிலுக்குச் செல்வீர்!

மன அழுத்தம் நீங்க வேண்டுமா? மண்ணடி மல்லிகேஸ்வரரை நாடுங்கள்.

இப்படி எல்லாம் வகை வகையாக, வண்ண வண்ணமாக, தொகை தொகையாகக் கடவுள்களின் பட்டியல் அணி வகுத்து நிற்கின்றனவே!

கரோனா காலத்தில் காதொடிந்த ஊசி முனையளவாவது மக்களுக்கு கை கொடுத்தனவா இந்தக் கடவுள்கள்?

பக்தர்களுக்கு அருள் பாலிப்பது ஒரு புறம் கிடக்கட்டும். பக்தர்களின் பாவங்களைப் பஷ்பம் செய்வது கிடந்துவிட்டுப் போகட்டும். தன்னையாவது காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா இந்தக் கடவுள்களால்?

குருக்கள் பார்ப்பான் பூட்டியது பூட்டியதுதான். காற்றுப்புகாத கர்ப்பக்கிரகத்தில் புழுங்கிக் கிடந்ததைத்தவிர சர்வ சக்தி கடவுளுக்கு சுகவாசம் ஏதாவது கிடைத்ததுண்டா?

பக்தர்களின் பணத்தைச் சுரண்டி அர்ச்சகன் வடித்துக் கொட்டி ஆறுகால பூஜை நடத்தினால்தான் கடவுளின் வயிற்றுப் பசியும் நீங்கும்.

படியளக்கும் பெருமாளுக்கு உண்மையிலேயே படியளப்பவன் பார்ப்பான்தானே! அதுவும் படைப்பது போல பாவ்லாதான்.

கரோனா காலத்தில் காளையர்களின், கன்னியர்களின் சிந்தனையில் இந்த அலைகள் எல்லாம் ஆர்ப்பரித்துக் கிளம்பத்தான் செய்யும் - ஓயா அலையாய் மாறத்தான் செய்யும்.

சர்வசக்தி வாய்ந்தவன் கடவுள் என்பது எல்லாம் சுத்தப் புருடா!

அந்தச் சக்தி கடவுளுக்கு இருந்தால் கரோனா என்னும் நோய்க் கிருமி மக்களின் உயிரை வாரிச் சுருட்டிக் கொண்டு போயிருக்குமா?

இந்த மதக்கடவுள் - அந்த மதக்கடவுள் என்று எதுவும் விதி விலக்கல்ல - எல்லா மதக் கடவுள்களையும் சேர்த்து தான் எல்லா மத இளைஞர்களும் தீர்க்கமாகச் சிந்திக்கும் ஒரு சூழலைக் கரோனா கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது என்பதில் அய்யமில்லை.

ஒரு வேடிக்கை தெரியுமா? பூரி ஜெகந்நாதனை நாள்தோறும் டாக்டர் பரிசோதிக்கிறார் - பூரிஜெகந்நாதன் கடவுளுக்கு முகக்கவசம் (Mask)அணிவித்துள்ளனர்.

இதென்ன கோமாளிக் கூத்து என்கிறீர்களா?

வடலூர் வள்ளலார் சொல்லவில்லையா? - இதெல்லாம் பக்திப் பிள்ளை விளையாட்டே!

பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்வதால் ஏற்பட்ட பலனை விட, கரோனா காலம் - கடவுளைப் பற்றிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் மறுபரிசீலனை செய்வதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் அய்யமில்லை. பகுத்தறிவுவாதிகள் சொல்வதெல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்று அசைபோடும் அவசியத்தை இந்தக் கரோனா ஏற்படுத்திவிட்டது என்பதில் அய்யமில்லை.  சில இடங்களில்கரோனா கோயில்’ ‘கரோனா கடவுள்என்றெல்லாம் கூட உற்பத்தி செய்து வேடிக்கை காட்டியதுண்டு.

சிந்தியுங்கள் சிந்தியுங்கள் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பகின்றதைச் சிந்தியுங்கள் சிந்தியுங்கள்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை மற - மனிதனை நினை. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

கடவுள் ஒரு கைதியே!

கடவுள் ஒரு கைதி -

கைதிக்கு

வார்டன் போல!

மணி அடித்தால்தானே

கைதிக்குச் சோறு.

மணி அடித்தால்தானே

கடவுளுக்குச் சோறு

கடவுள், கைதி

இருவருமே

பூட்டிதான்

வைக்கப்படுகின்றனர்.

கம்பி வழியேதான்

இருவரையும் பார்க்கிறோம்!

சொல்லுவது நாமல்ல தினமணி! (துணுக்குத் தோரணம் 6.7.2007, பக்கம் 3)

 

No comments:

Post a Comment